ஜல்லிக்கட்டில் இழந்த வெற்றியை மீண்டும் பெறக் காத்திருக்கும் மதுரை மாணவி
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி(வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவரது முன்னோர்களைத் தொடர்ந்து வழி வழியாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் இருவரைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையைக் களமிறங்கி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட யோகதர்ஷினியின் காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், மாணவி யோகதர்ஷினியின் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவைச் சேரும் என்று அறிவித்தனர். மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழா குழு தெரிவித்தது. அந்த ஆறுதல் பரிசை யோகதர்ஷினி வேண்டாம் என்று நிராகரித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையைக் களமிறக்க இவர் ஆயுத்தமாகி வருகிறார்.