வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (10:53 IST)

'லாங் கோவிட்' - நீண்டகாலம் குணமாகாத கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்ன?

கொரோனாவால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் கடுமையாக நோய்வாய்ப்பட மாட்டார்கள். அவர்கள் ஒப்பீட்டளவில் விரைவாக குணமடைந்துவிடுவார்கள்.
 
ஆனால் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டபின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நீண்டகால சிக்கல்களைச் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படாவிட்டாலும் கூட இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சமூகம் மீண்டும் திறக்கும்போது முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை​​ நீண்டகால கோவிட், அளவுக்கதிகமாக பாதிக்கக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன.
 
நீண்டகால கோவிட் அறிகுறிகள் என்ன?
 
கடுமையான அல்லது லேசான நோய்த்தொற்றுக்குப் பிறகு 12 வாரங்களுக்கும் மேலாக அறிகுறிகள் தொடர்வது மற்றும் வேறு காரணங்களால் அதை விளக்க முடியவில்லை என்றால் அது நீண்டகால கோவிட் என்று பிரிட்டன் சுகாதார ஊழியர்களுக்கான வழிகாட்டுதல் விவரிக்கிறது,
 
தேசிய சுகாதார சேவையின்படி இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
 
• தீவிர சோர்வு
 
• மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது இறுக்கம்
 
• நினைவாற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தல் தொடர்பான சிக்கல்கள் (மூளை மூட்டம்)
 
• சுவை மற்றும் வாசனையில் மாற்றங்கள்
 
• மூட்டு வலி
 
நூற்றுக்கணக்கான பிற புகார்களைக்கூட ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. நீண்டகால கொரோனா உள்ளவர்களில் 10 உடலுறுப்பு அமைப்புகளை பாதிக்கும் 200 அறிகுறிகளை, லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (யு.சி.எல்) நடத்திய மிகப் பெரிய ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
அவற்றில் பிரம்மை, தூக்கமின்மை, கேட்டல் மற்றும் பார்வை மாற்றங்கள், குறுகிய கால நினைவாற்றல் இழப்பு, பேச்சு மற்றும் மொழி சிக்கல்கள் ஆகியவை அடங்கும். இரைப்பை - குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்னைகள், மாதவிடாய் மாற்றங்கள் மற்றும் தோல் பிரச்னைகள் ஆகியவை வேறு சில அறிகுறிகள்.
 
இந்த அறிகுறிகள் எவ்வளவு கடுமையானவை என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. ஆனால் பலரும் குளித்தல்,மளிகை கடைக்குச்சென்று சாமான் வாங்குதல் மற்றும் வார்த்தைகளை நினைவில் கொள்வது போன்றவைகளைச் செய்வதில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.
 
நீண்டகால கொரோனா ஏற்படுவதற்கு என்ன காரணம்?
 
இது ஏன் ஏற்படுகிறது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு சாத்தியக்கூறு என்னவென்றால், கொரோனா தொற்று சிலரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிக அதிகமாக செயல்படச் செய்துவிடுகிறது.
 
பின்னர் அது வைரஸை மட்டுமல்ல, உடலின் சாதாரண திசுக்களையும் தாக்குகிறது. மிகவும் வலுவான நோயெதிர்ப்புத் திறன் கொண்டவர்களின் உடலில் அது நிகழலாம்.
 
வைரஸ் உள்நுழைந்து நமது உயிரணுக்களை சேதப்படுத்துவதை, மூளை மூட்டம், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற சில அறிகுறிகள் விளக்கக்கூடும். அதே நேரத்தில் ரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதம், இதயம், நுரையீரல் மற்றும் மூளை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
 
வைரஸின் எச்சங்கள் உடலில் இருக்கக்கூடும், அவை செயலற்ற நிலையில் கிடந்து பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது என மற்றொரு கோட்பாடு கூறப்படுகிறது.
 
ஹெர்பிஸ் மற்றும் சுரப்பி காய்ச்சலை ஏற்படுத்தும் எப்ஸ்டீன் பார் வைரஸ் போன்ற வேறு சில வைரஸ்களில் இது நிகழ்கிறது. இருப்பினும், கோவிட்டில் இது நிகழ்கிறதா என்பதற்கு தற்போது அதிக ஆதாரங்கள் இல்லை.
 
நீண்டகால கோவிட் யாரை பாதிக்கிறது மற்றும் அது எவ்வளவு பொதுவானது?
 
இந்த நேரத்தில் இதைச்சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் மருத்துவர்கள் நீண்டகால கோவிட்டை அதிகாரப்பூர்வ நோயறிதலாக இப்போது தான் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
 
எவ்வாறாயினும், வயது அதிகரிக்க அதிகரிக்க, இது ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும், பெண்கள் மத்தியில் இரு மடங்கு பொதுவானதாக இது இருப்பதையும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 
சில நீண்டகால கோவிட் அறிகுறிகள் மிகவும் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகம் காணப்படுகின்றன.
 
கோவிட்டால் பாதிக்கப்பட்ட 20 வயதிற்கு உட்பட்டவர்களில் 1 - 2 சதவீதம் பேர் நீண்டகால கோவிட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் இது 5 சதவீதமாக உள்ளது என்றும் பல ஆராய்ச்சிகள் மற்றும் சுகாதார பதிவு தரவுத் தளங்களையும் பகுப்பாய்வு செய்த லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வு தெரிவிக்கிறது.
 
"ஆனால் ஒரு நாளைக்கு ஏற்படும் 100,000 தொற்றுகளில், 1 - 2 சதவீதம் என்பது பெரிய எண்ணிக்கை" என்று ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் கிளாரி ஸ்டீவ்ஸ் சுட்டிக்காட்டினார்.
 
நீண்டகால கோவிட் நோயாளிகளுடன் பணிபுரியும் எக்ஸடெர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் டேவிட் ஸ்ட்ரெய்ன், தனது கிளினிக்கிற்கு பரிந்துரைக்கப்படும் பெரும்பாலானவர்கள் 20, 30 மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்று கூறினார். இந்த அறிகுறிகள் இளைம் வயதினரிடையே சற்றே குறைவாக இருந்தாலும் அவர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
வயதானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதுவும் மாறக்கூடும். "நாம் லேசான தொற்றுநோயின் ஒரு பெரிய அலையை சந்திக்கப் போகிறோம். அதில் ஏழு பேரில் ஒருவர் நீண்டகால கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். அது இளைஞர்களிடையே இருக்கும்" என யு.சி.எல் ஆய்வறிக்கையின் மூத்த எழுத்தாளர் டாக்டர் எதீனா அக்ராமி கூறினார்.
 
எனக்கு நீண்டகால கொரோனா இருப்பதை எப்படி தெரிந்துகொள்வது?
 
தற்போது இதற்கு எந்த பரிசோதனையும் இல்லை - அதற்கு பதிலாக இது தற்போது " பிற காரணங்களை விலக்கி நோய்கண்டறிதல்" நிலையில் இருப்பதாக டாக்டர் ஸ்ட்ரெய்ன் விளக்கினார். அதாவது மருத்துவர்கள் முதலில் பிற சாத்தியமான காரணங்களை விலக்குகின்றனர்.
 
நீரிழிவு நோய், தைராய்டு செயல்பாடு மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற பிற சிக்கல்களுக்கான சோதனைகள் தெளிவாக இருப்பதை மருத்துவர்கள் முதலில் உறுதி செய்கிறார்கள்.
 
நீண்டகால கோவிட்டிற்கான ரத்த பரிசோதனை எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆராய்ச்சி அமைப்புகளில் உறுப்பு சேதத்தை அடையாளம் காண ஏற்கனவே அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பொது மருத்துவர் உடனான சந்திப்பில் நீங்கள் இதைப் பெற முடியாது.
 
தடுப்பூசி உதவுமா?
 
நீண்டகால கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு தங்கள் அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். அவர்களின் நோயெதிர்ப்பு திறன் மீட்டமைக்கப்பட்டதன் மூலமாகவோ, வைரஸின் எஞ்சியுள்ள துண்டுகளைத் தாக்க உடலுக்கு உதவியதன் மூலமாகவோ இது ஏற்பட்டிருக்லாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி உதவுகிறது.
 
என்ன சிகிச்சைகள் உள்ளன?
 
தற்போது நிரூபிக்கப்பட்ட மருந்து சிகிச்சைகள் எதுவும் இல்லை. அறிகுறிகளை நிர்வகித்தல் மற்றும் படிப்படியாக செயல்பாட்டை அதிகரிப்பதில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.
 
மருந்து சிகிச்சைகள் குறித்த முறையான மருத்துவ சோதனை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.