செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (21:54 IST)

சென்னையில் இந்த ஆண்டும் மழை குறைவு - சமாளிக்க முடியுமா?

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 
கடந்த ஆண்டில் பெரும் வறட்சியை எதிர்கொண்ட சென்னையில் வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டும் குறைவாகவே பெய்துள்ளது. கடந்த ஆண்டைப் போல குடிநீர் சிக்கலை எதிர்கொள்ளுமா சென்னை?
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழைக் காலம் நிறைவடையும் தருணத்தை நெருங்கிவரும் நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னையில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையைவிட 18 சதவீதம் குறைவாகவே பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
 
தென்மேற்குப் பருவ மழையிலிருந்து தமிழ்நாட்டிற்கு பெரிதாக மழை கிடைக்காது என்ற நிலையில், தன் நீர்த் தேவைக்கு மாநிலம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையையே சார்ந்திருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாத மத்தியிலிருந்து டிசம்பர் மாத இறுதிவரை தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது.
 
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பெய்த மழை விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த காலகட்டத்தில் சென்னையில் இயல்பாகப் வேண்டிய சராசரி மழையின் அளவு 747.1 மி.மீட்டர். ஆனால், இந்த ஆண்டு, 613.3 மில்லி மீட்டர் அளவுக்கே மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைவிட 18 சதவீதம் குறைவு.
 
"பொதுவாக இயல்பாக பெய்ய வேண்டிய அளவைவிட 18 சதவீதத்திற்கும் குறைவாக பெய்தால்தான் பற்றாக்குறை என கருதப்படும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என கருதுகிறோம். அப்படியிருந்தபோதும், இனிமேல் சென்னைக்கு பெரிதாக மழை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி மழை பெய்யாவிட்டால் பற்றாக்குறையாக மாறிவிடும்" என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் என். புவியரசன்.
 
பொதுவாக தென் மேற்குப் பருவமழை செப்டம்பர் மாத துவக்கத்திலிருந்து படிப்படியாக விலக ஆரம்பித்து, மாத இறுதியில் முழுமையாக விலகிவிடும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாத மத்தியில் சட்டென விலகியது. அதற்குப் பிறகே வடகிழக்குப் பருவமழை துவங்கியது. இதன் காரணமாகவே, டிசம்பர் மாதத்தோடு முடிய வேண்டிய வட கிழக்குப் பருவமழை ஜனவரியிலும் சில நாட்களுக்கு நீடிக்கவிருக்கிறது.
 
இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்துள்ளது. மாநிலத்திலேயே அதிக அளவாக, நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட 66 சதவீத மழை கூடுதலாகப் பெய்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் 49 சதவீத மழை அதிகம் பெய்துள்ளது. கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் வழக்கத்தைவிட அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.
 
22 மாவட்டங்களில் பற்றாக்குறை அளவே மழை பதிவாகியுள்ளது. பற்றாக்குறை அளவாக, அதாவது வழக்கத்தைவிட 18 சதவீதத்திற்கும் குறைவாக மதுரை, பெரம்பலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில்தான் அதிகபட்சமாக 32 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது.
 
இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சென்னை கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளுமா என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
 
ஆனால், இந்த அச்சம் தேவையற்றது என்கிறார்கள் நிபுணர்கள். 2018ல் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட 24 சதவீதம் மழை குறைவாகப் பெய்தது. மேலும், மாநிலத்திலேயே தர்மபுரிக்கு அடுத்தபடியாக சென்னையில்தான் மழை பற்றாக்குறை அதிகம் இருந்தது. 352.9 மில்லி மீட்டர் மழையே 2018ல் சென்னையில் பதிவானது. இது சென்னையில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட பாதிக்கும் குறைவு. கிட்டத்தட்ட 55 சதவீத மழை குறைவாகப் பெய்தது.
 
இந்தக் காரணத்தினால்தான், சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதையடுத்து மே, ஜூன் மாதங்களில் சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகப் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
 
இந்த ஆண்டு நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் பல மடங்கு சிறப்பாகவே இருக்கிறது. உதாரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வெறும் 322 மில்லியன் கன அடி நீரே இருந்தது. ஆனால், தற்போது 1456 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது.
 
செங்குன்றம் ஏரியில் கடந்த ஆண்டில் 984 மில்லியன் கன அடி நீரே இருந்த நிலையில், இந்த ஆண்டு 2,395 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு வெறும் 144 மில்லியன் கன அடி நீரே இருந்த நிலையில், 1,660 மில்லியன் கன அடி நீர் தற்போது இருக்கிறது.
 
செம்பரம்பாக்கம் ஏரி
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மூன்று மடங்கு அதிக நீர் ஏரிகளில் இருக்கிறது. ஆகவே நிலைமையைச் சமாளித்துவிடலாம் எனக் கருதுகிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள்.
 
"சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 11 டிஎம்சி. இப்போது சுமார் ஐந்தரை டிஎம்சி அளவுக்கு நீர் இருக்கிறது. தவிர,சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஆந்திராவில் உள்ள கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தற்போது 45 டிஎம்சி அளவுக்கு நீர் இருக்கிறது. ஆகவே அங்கிருந்து 8 டிஎம்சி நீர் கிடைப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது" என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தின் அதிகாரி ஒருவர்.
 
இதுதவிர, போரூரிலும் பெருங்குடியிலும் தினமும் தலா பத்து மில்லியன் லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கழிவு நீர் மூன்றாம் நிலை முழுமையான சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, ஏரிகளில் விடப்படுகின்றன. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் நிலத்தடி நீரையே பொதுமக்கள் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில், இந்த முயற்சி பலனளிக்குமென குடிநீர் வாரியம் நம்புகிறது.
 
மேலும், பிரதானமான பெரிய ஏரிகளைத் தவிர, சென்னை நகரை சுற்றியுள்ள சிறிய சிறிய நீர்த்தேக்கங்கள், குளங்களையும் மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சிகளும் செய்யப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
 
கோப்புப்படம்
 
தவிர, இதற்கு முன்பாக தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தினமும் 45 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்படும் நீரே தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், தொழிற்சாலைகளுக்காக நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தக் காரணங்களால், 2019ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஏற்பட்டது போன்ற நிலை 2020ல் ஏற்படாது என குடிநீர் வாரியம் நம்புகிறது.