எல் சாப்போ மனைவி கைது - போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு

Sugapriya Prakash| Last Modified புதன், 24 பிப்ரவரி 2021 (14:43 IST)
2009 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்த போதை மருந்து கடத்தல் மன்னன் எல் சாபோவின் மனைவி எம்மா கொரொனெல் ஜஸ்புரோ அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க சிறையில் எல் சாப்போ தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எல் சாப்போ சிறையில் தப்பிக்கச் செய்யவும் அவரது போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறி அவரது மனைவி எம்மா கொரொனெல் ஐஸ்புரோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள டல்லெஸ் பகுதியில் வைத்து போதைப் பொருட்களை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஜஸ்புரோ கைதாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
இதற்கிடையே, 31 வயதாகும் எம்மா, கொகைன், ஹெராயின், மெத்தாம்ப்டமைன் போதை பொருட்களை விநியோகிக்கும் சதியில் பங்கெடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

போதைப் பொருட்களைக் கடத்தியது மற்றும் பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வழக்கில் எல் சாப்போ நியூ யார்க் சிறையில் ஆயுள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். 63 வயதாகும் எல் சாப்போ, முன்பு சினாலோ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக இருந்தார். அந்த கும்பல் தான் அமெரிக்காவுக்கு அதிக அளவில் போதைப் பொருட்களை விநியோகித்து வந்தது.
 
முன்னதாக அவர் மெக்ஸிகோவில் இருக்கும் அதிஉயர் பாதுகாப்புச் சிறையான அல்டிப்ளானோவில் இருந்து 2015ஆம் ஆண்டில் தப்பித்தார். அவரது மகன்கள் அச்சிறைக்கு அருகில் இருக்கும் இடத்தை வாங்கினர். ஒரு ஜிபிஎஸ் கைக்கடிகாரம் எப்படியோ சிறை அதிகாரிகளுக்குத் தெரியாத வண்ணம் சிறைக்குள் கடத்தப்பட்டது.
 
எல் சாபோ இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொண்ட பின், சிறைக்கு அருகில் இருக்கும் அவரது மகன்கள் வாங்கிய இடத்தில் இருந்து சிறைக்கு சுரங்கம் தோண்டினர். அச்சுரங்கம் வழியாக, ஒரு சிறிய மோட்டர்சைக்கிள் மூலம் தப்பினார் எல் சாப்போ. அமெரிக்க சிறைத்துறை பாதுகாப்பு வரலாற்றில் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
 
இந்த நிலையில், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், எல் சாப்போவை அமெரிக்க சிறைக்கு கொண்டு வரும் முன், அவரை மீண்டும் தப்பிக்க வைக்கும் முயற்சியில், அவரது மனைவி எம்மா ஐஸ்புரோ ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எம்மா ஐஸ்புரோ, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார். எல் சாப்போவுடன் இவருக்கு இரண்டு பிள்ளைகள் (இரட்டையர்கள்) உள்ளனர்.
 
நியூ யார்க்கில் எல் சாப்போ மீதான நீதிமன்ற விசாரணை மூன்று மாதங்களுக்கு நடந்தது. கிட்டத்தட்ட எல்லா நாட்களும் எம்மா ஐஸ்புரோ விசாரணை நடவடிக்கைகளை பார்வையிட்டார். அந்த வழக்குகள் மீதான வாதத்தின்போது எல் சாப்போ மீது பல்வேறு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எம்மா உட்பட தன் மனைவிகளை எல் சாப்போ வேவு பார்த்ததாகவும் கூறப்பட்டது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த ஜஸ்புரோ, "எனது கணவரை இவர்கள் காட்ட விரும்பும் விதத்தில் எனக்கு அவரை தெரியாது. ஆனால் நான் பார்த்து திருமணம் செய்து கொண்ட நல்ல மனிதரைப் போற்றுகிறேன்" என்றார்.
 
மெக்ஸிகோவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் சினாலோ என்கிற மாகாணத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் எல் சாப்போ. இவரது போதைப் பொருள் கடத்தல் வியாபாரம் பல்கிப் பெருகியதால், 2009ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பில்லியனர்கள் பட்டியலில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு, உலகின் 701-வது மிகப் பெரிய பணக்காரராக எல் சாப்போ இடம்பிடித்திருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :