கிம் ஜாங்-உன் உடல் நிலை குறித்த யூகங்களும் வதந்திகளும் தேவையற்றவையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு அடுத்து குறுகிய அல்லது நீண்ட காலத்துக்கு வட கொரியாவின் ஆட்சி நிர்வாகத்தை யார் ஏற்கப் போகிறார் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. யாருக்கெல்லாம் அந்த வாய்ப்பு உள்ளது என்பது குறித்து நிபுணர்களுடன் பிபிசி பேசியது.
வட கொரியாவை கிம் இல்-சங் 1948ல் உருவாக்கியதில் இருந்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றனர். அவருடைய குடும்பம் தான் ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை வட கொரிய மக்களின் மனதில் வேரூன்றி இருக்கிறது.
அந்தக் குடும்பத்தின் மீதான மரியாதை என்பது அந்த நாட்டு மக்கள் படிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பமாகிவிடுகிறது. பள்ளிக் கல்விக்கு முந்தைய வயதில் உள்ள குழந்தைகளும் கூட ``நான் கிம் ஜோங்-உன் -ஐ பார்க்க விரும்புகிறேன்'' என்ற பாடலைப் பாடுகின்றனர் என்பதில் இருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.
எனவே அடையாளபூர்வமான, அரசியல் தலைமை இல்லாத ஒரு வட கொரியாவை எப்படி கற்பனை செய்து பார்க்க முடியும்? மேல்தட்டு வர்க்கத்தினர் தங்களையும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள்?
எங்களுக்குத் தெரியாது என்பது தான் இதற்கான எளிய பதிலாக இருக்கிறது. அவர்களுக்குத் தெரியாது என்பது தான் உண்மையும்கூட. அப்படி ஒரு சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது கிடையாது. யாராவது ஒரு கிம் எப்போதும் உண்டு...
ஆட்சி நிர்வாகத்துக்கு கிம் ஜோங்-உன் தயார்படுத்தப்பட்ட காலத்திலேயே ``பாயெக்டு ரத்த வாரிசு'' என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பாயெக்டு என்பது வட கொரிய மக்களால் புனித மலையாகக் கருதப்படுகிறது. கிம் இல்-சங் அங்கு தான் கொரில்லா போர் நடத்தினார் என்றும், கிம் ஜாங்-இல் அங்கு பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கும் போது அதை உறுதிப்படுத்திக் கொள்ள கிம் ஜாங்-உன் கூட அங்கு சென்று வருகிறார்.
நாட்டு மக்களின் மனதில் எப்போதும் கிம் குடும்பத்தினர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அது மாதிரியான அரசு வாரிசு யாரும் இல்லாவிட்டால் வட கொரியா எப்படி இருக்கும்? 36 வயதான கிம் ஜோங்-உன் -னுக்கு பிள்ளைகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அவர்கள் குறைந்த வயதுடையவர்கள். அவருடைய 3 குழந்தைகளில் மூத்த குழந்தைக்கு 10 வயதும், மூன்றாவது குழந்தைக்கு 3 வயதும் இருக்கும் என்று தெரிகிறது. கிம் ஜாங்-உன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அவரே கூட இள வயதில் ஆட்சிக்கு வந்தவராகத்தான் இருந்தார். அப்போது அவருக்கு வயது 27. வியட்நாமைப் போல, ஒரு குழு ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். நாட்டை உருவாக்கியவர்களின் தத்துவங்களைப் பின்பற்றி நிர்வாகத்தை நடத்துவது என்ற அணுகுமுறையில் அப்படி நடக்கலாம்.
இப்போது ஆட்சி நிர்வாகத்தில் யாரெல்லாம் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், உலக நடப்புகளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள், முக்கிய அமைப்புகளின் ரகசியத் தகவல்கள் துறைகளை கையாளக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை வைத்து பார்வையாளர்கள் கருத்து கூறலாம். ஆனால், அவர்களுக்கு எந்த மாதிரி ஆதரவு கிடைக்கும் என்பது பற்றியோ, அமைப்பு ரீதியிலான தாக்கத்தைவிட, தனிப்பட்ட முறையில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது பற்றியோ யாரும் கூறிவிட முடியாது.
சொல்லப்போனால், சில நேரங்களில் பெயரளவிலான தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைவிட, அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கே அதிக அதிகாரங்கள் இருக்கிறது. அதனால் யூகங்கள் செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
மூன்று கிம்கள் இருக்கிறார்கள்...
கிம் ஜாங்-உன் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் வட கொரியாவில் ஆட்சி நிர்வாகத்துக்கு வரக் கூடிய நிலையில் அவருடைய குடும்பத்தில் 3 பேர் உள்ளனர். குடும்ப ஆட்சியைத் தொடர்வதில் அவர்கள் எல்லோருக்கும் வரம்புகள் இருக்கின்றன.
முதலாவது நபரான கிம் யோ-ஜாங், இப்போதைய அதிபர் கிம் ஜோங்-உன் உடைய இளைய சகோதரி. விஷயங்களை வேகமாகப் புரிந்து கொள்வது, அரசியலில் ஆர்வம் காட்டும் பாங்கு ஆகிய குணங்கள் இளவயதிலேயே வந்துவிட்டது என்று அவருடைய தந்தையே குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய பாணி செயல் திறன் மிக்கதாக, மிதவாத அணுகுமுறை உள்ளவராகவும், கவனித்து செயல்படக் கூடியவர் என்றும் கருதப்படுகிறார். தன் சகோதரருடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
சிங்கப்பூரில் டிரம்ப் - கிம் சந்திப்பு நடந்தபோது, கையெழுத்திடுவதற்கு பேனாவை இந்தப் பெண் தான் கிம்மிடம் கொடுத்தார். அடுத்து ஹனோய் மாநாட்டில், பின்வரிசையில் இருந்த அவர், தன்னுடைய சகோதரர் மிடுக்கான தோற்றத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போது முன்னால் வந்து நின்றார்.
ஆனால் ஹனோய் உச்சி மாநாட்டுக்குப் பிறகு அவர் தற்காலிகமாக பதவி இறக்கம் செய்யப்பட்டார். அந்த மாநாடு வெற்றிகரமாக அமையவில்லை என்பது தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆட்சி நிர்வாகத்தின், அரசாங்க விவகார கமிஷனில் அவர் இடம் பெறவில்லை.
பொலிட் பீரோவில் மாற்று உறுப்பினராக இருக்கிறார். கொரிய உழைப்பாளர் கட்சியின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவின் துணை இயக்குநராக இருக்கிறார். இவை புரிந்து கொள்ள முடியாத விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவு என்பது ஆட்சி அமைப்பில் கொள்கை அளவிலான முடிவுகளை உறுதி செய்வதாக உள்ளது.
ஆணாதிக்க ஆட்சி முறை வேரூன்றி இருக்கும் வட கொரியாவில், ஒரு பெண்ணாக அவரால் தலைமைப் பதவியை வகிக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாக இருக்கிறது. சர்வ வல்லமை படைத்த அதிபர், ராணுவத்துக்கு தலைமை ஏற்கக் கூடியவர் என்ற பொறுப்புகள், பெண்களுக்கான பொறுப்புகளுக்கு சரிப்பட்டு வரும் என்று அந்த மக்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்
டிரம்ப் - கிம் உச்சிமாநாடு: உலக நாடுகள் சொல்வது என்ன?
கிம் குடும்பத்தில் உள்ள இரண்டாவது நபர் கிம் ஜோங்-ச்சுல். இவர் கிம் ஜாங் உன்னின் அண்ணன். ஆனால் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் ஒருபோதும் ஆர்வம் காட்டியது இல்லை. (அவருக்கு கித்தார் இசைக் கலைஞர் எரிக் கிளாப்டன் மீது மட்டும் பிரியம் உண்டு). அதிகபட்சமாக, கிம் குடும்பத்தின் அடையாளபூர்வமான தொடர்பில் வருபவர் என்பவராக இவரை சொல்லலாம். குழு அமைப்பின் தலைவராக இவரை வைத்துக் கொண்டு, எப்போதாவது உரைகளை வாசிக்கும் பொறுப்பில் வைத்துக் கொள்ளலாம்.
கிம் குடும்பத்தில் உள்ள மூன்றாவது நபர் கிம் பியோங்-இல். இவர் கிம் ஜோங்-இல் -ன் ஒன்றுவிட்ட சகோதரர். கிம் ஜோங்-இல்லின் மாற்றாந்தாயான, கிம் பியோங்-இல் -ன் தாயார், கிம் இல்-சங்கிற்கு அடுத்து தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கிம் ஜோங்-இல் செல்வாக்கு காரணமாக அவருக்கு அது சாத்தியப்படாமல் போயிற்று.
1979ல் கிம் பியோங்-இல் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தூதரக பொறுப்புகள் பலவற்றை அவர் வகித்துள்ளார். கடந்த ஆண்டு தான் அவர் வட கொரியா திரும்பினார். அதாவது, நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது வட கொரியாவில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது நபர்
கிம் ஜோங்-உன்னின் விசேஷ தூதராக இருக்கும் சோயே ரியோங்-ஹேயே (வலது) வெளிநாட்டு முக்கியஸ்தர்களை சந்தித்திருக்கிறார்.
கிம் ஜாங்-உன் ஆட்சி நிர்வாகத்தில் மையமாக இருக்கும் வேறு தனிப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரால் கூட்டுறவு தொடர்புகளை உருவாக்க முடியும், யாருக்கு யார் போட்டியாக இருப்பார்கள் என்பதைச் சொல்வது கடினமான விஷயமாக உள்ளது.
அவர்களில் ஒருவராக சோயே ரியோங்-ஹேயே இருக்கிறார். கிம் ஜாங்-உன் நிர்வாகத்தில் அவருக்கு ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. ஆனால் பல சங்கடங்களைக் கடந்து வந்துள்ள இவர், இப்போது பொலிட்பீரோவின் ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.
அரசாங்க விவகார கமிஷனின் முதல்நிலை துணைத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் நாடாளுமன்றத்தின் தலைவராக கடந்த ஆண்டு இவர் தேர்வு செய்யப்பட்டார். கிம் யோங்-நாம் வயதான காரணத்தால் அந்தப் பொறுப்பை இவர் ஏற்றார். எனவே, சர்வதேச நிகழ்வுகளில் வட கொரியாவின் பிரதிநிதியாக இவர் தான் பங்கேற்று வருகிறார்.
இவர் ராணுவத்தில் உயர் பொறுப்புகள் வகித்துள்ளார். கொரிய தொழிலாளர் கட்சியின் அமைப்பு மற்றும் வழிகாட்டுதல் பிரிவிலும் முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். இது மிகவும் வல்லமை மிக்க அமைப்பு. வட கொரிய சித்தாந்தத்தை அனைத்து மக்களும் ஏற்று நடப்பதற்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் தான் வட கொரியாவில் இப்போது அதிகார பலம் மிகுந்த இரண்டாவது நபராக இருப்பவராகக் கருதப்படுகிறார்.
இன்னொரு முக்கிய நபர் கிம் யோங்-ச்சோல். டிரம்ப் - கிம் சந்திப்புகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த ராணுவ ஜெனரல், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோவை பல முறை சந்தித்துள்ளார். தென் கொரியாவுடனான உறவுகளை பராமரிக்கும் ஐக்கிய முன்னணி துறையின் தலைவராகவும் இருக்கிறார். நாட்டின் பிரதான உளவு துறையான ஆர்.ஜி.பி.யின் தலைவராகவும் இருக்கிறார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால், இவருக்கு அதிகாரக் குறைப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த உளவுத் துறை தலைவர் நீண்ட காலத்துக்கு அமைதியாகவே இருப்பாரா என்பதைச் சொல்ல முடியாது.
இன்னொருவரும் இந்தப் பட்டியலில் இருக்கிறார். அது கிம் ஜேயே-ரியோங். அரசாங்க விவகார கமிஷனில் இடம் பெற்றிருப்பதுடன், அமைச்சரவையின் தலைவராகவும் உள்ளார். இது ஓரளவுக்கு செல்வாக்கு மிகுந்த பதவியாக உள்ளது. இவர் பெரிய அளவுக்கு பிரபலமானவராக இல்லை.
ஆனால் சமீப காலமாக இவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்து வருகிறது. தொழிற்சாலைகளை நிர்வகிப்பதில் பெயர் பெற்றவர். ராணுவ தொழிற்சாலைகள் மிகுந்த, தனிமையான மாகாணத்தை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தவராக இருக்கிறார். அணுசக்தி திட்டங்கள் பற்றிய அதிக தகவல்களை அறிந்தவராக இருப்பவர் என்று கருதப்படுகிறது.
நோய்த்தொற்று
அரசியல் குற்றங்களை விசாரித்து தண்டிக்கும் அரசின் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பு வகிப்பவர் ஜோங் கியோங்-டேயேக். அதிபருக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் உதவியாக இருக்கக் கூடியவர். ஆட்சி நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவும் முக்கிய பொறுப்புகளாக இவை உள்ளன.
ஹிவாங் பியோங்-சோ என்ற மற்றொரு அதிகாரி, ராணுவத்தில் உயர் பொறுப்புகள் வகித்துள்ளார். கிம் ஜோங்-உன் ஆட்சியில் ஓ.ஜி.டி.யை வழிநடத்துபவராக இருந்துள்ளார். சோயேவை (மற்றும் வேறு பலரை) போல, இவரும் விதிகளுக்கு உள்பட்டு நடக்கக் கூடியவர். ஆனால், அதே அளவுக்கு கௌரவிக்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக் கொள்கை விஷயங்களில் முக்கிய பங்கு வகித்த ரி யோங்-ஹோ மற்றும் ரி சூ-யோங் ஆகியோரின் பொறுப்புகளும் சமீப காலத்தில் குறைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பதிலாக ரி சன்-கிவோன் மற்றும் கிம் ஹியுங்-ஜுன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் ரி சன்-கிவோன், கிம் யோங்-ச்சோலுக்கு நட்பானவர் என்று கூறப்படுகிறது.
ராணுவத் தலைமை நிர்வாகிகள் கொரிய ராணுவத்தின் சில தலைமை ஜெனரல்களும் செல்வாக்கைக் காட்ட முற்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்போதைய நிலையில், ராணுவத்தின் பொது அரசியல் குழு தலைமைப் பொறுப்பில் கிம் சு-கில் மற்றும் கிம் வோன்-ஹோங் ஆகியோர் உள்ளனர். இந்த அமைப்புதான் அரசியல் நிர்வாகத்துக்கு சார்பான நிலையை ராணுவத்தில் உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. ஸ்திரத்தன்மை இல்லாத சூழ்நிலைகளில் இந்த அமைப்பின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
கிம் ஜாங்-உன் இல்லாத சூழ்நிலையில் அதிகாரம் எப்படி மாறும் என்பதை சொல்வது கஷ்டமாக இருக்கும் என்பதை கிம் வோன்-ஹோங் உணர்த்துகிறார். கிம் வோன்-ஹோங் மற்றும் ஹிவாங் பியோங்-சோ ஆகியோர் எப்போதுமே போட்டியாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். அடுத்தவரை அடக்கி வைத்து, கிம் ஜாங் உன்னிடம் தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில் இருவருக்கும் போட்டி நீடிக்கிறது.
உயர்நிலையில் இருப்பவர்களில், யாரெல்லாம் ஒன்று சேருவார்கள், யாருடன் மோதுவார்கள்? கிம் யோ-ஜோங்கிற்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பான அணிகள் இருக்குமா? ஸ்திரத்தன்மை இல்லாத சூழ்நிலையில், நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தவிர்க்க பகைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? வட கொரியாவில் ஸ்திரத்தன்மை பாதித்தால் தென் கொரியா அல்லது சீனாவின் கைக்கு நிர்வாகம் போகலாம் என்ற சூழ்நிலையை உயர்நிலையில் உள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.
இப்போதைக்கு பொருத்தமான போட்டியாளர் யாரும் இல்லை. அவருடைய சகோதரி பாலின அடிப்படையிலான தடைகளை வெற்றி கொண்டாக வேண்டும். மற்ற யாருமே நேரடி ரத்த வாரிசு வரிசையில் வரவில்லை. ஆனால், முடிவில், சர்வதேச நெருக்குதல்களுக்குப் பணியாத ஒரு தேசத்தின் ஒற்றுமை குறித்து அவர்கள் நினைவில் கொள்ள வேண்டியிருக்கும்.