1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (22:29 IST)

கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல - தென் கொரிய அதிகாரிகள்

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால், 36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.
 
எப்போது இந்த வதந்தி பரவியது?
 
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.

இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை.

கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.

வட கொரியாவில் இதழியல் பணியை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஏராளமான நெருக்கடிகள் அங்கு உள்ளன.

கொரோனாவை அடுத்து வட கொரியாவில் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளது.
 
ஏன் இந்த வதந்தி?
 
இப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.

கிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.
 
'வெறும் வதந்தி மட்டுமே'
 
தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இதுபோல நடந்துள்ளதா?
2014ஆம் ஆண்டு ஏறத்தாழ 40 நாட்கள் அவர் பொது நிகழ்ச்சிகளில் எங்கும் தோன்றாமல் இருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பால் அவர் வெளியேற்றப்பட்டார் என்ற வதந்திகளும் அப்போது உலவின.

பின் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார்.

உடல் நலக் கோளாறு காரணமாக அவர் 40 நாட்கள் ஓய்வில் இருந்தார் என கூறிய வட கொரிய அரசு ஊடகம், அவருக்கு முடக்குவாதம் என்று அப்போது பரவிய வதந்தி தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டது.

 
இப்போது கிம் ஜோங் உன்அடுத்து யார்?
 
சரி, கிம்முக்கு அடுத்து யார் வட கொரியாவின் தலைவர் ஆகலாம்?

இப்போது வரை இதற்கான பதில் இல்லை.

கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர் கிம் பரம்பரையை சேர்ந்தவர். கிம் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டங்களில் எல்லாம் இப்போது அவரும் காட்சியளிக்கிறார்.