1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (10:19 IST)

கர்நாடகா ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு: பல நகரங்களில் 144 தடை!

ஹிஜாப் சர்ச்சை மீதான விசாரணை முடிந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. பெங்களூரில் உள்ள பிபிசியின் பங்கேற்பு செய்தியாளரான இம்ரான் குரேஷி, மாநிலத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்த விஷயத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூர் மற்றும் பெலகாவியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.உடுப்பி, தட்சிண கன்னடா, ஷிவமொக்கா, கலபுர்கி ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடகாவில் உடுப்பியில் உள்ள பெண்களுக்கான மகளிர் பல்கலைக்கழக முன் கல்லூரியில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிர்வாகத்தின் அந்த முடிவை ஏற்க மாணவிகள் மறுத்து விட்டனர்.
 
மாணவிகளின் கோரிக்கையை ஏற்காததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுப்பி மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தொடங்கியதற்கு எதிராக வேறு பிரிவு மாணவிகள் காவி துப்பட்டாவை போட்டுக் கொண்டும் சில மாணவர்கள் காவி நிற சால்வை அணிந்தும் வந்ததால் இந்த விவகாரம் பெரிதாகியது.இந்த விவகாரம் தீவிரமடைந்து அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குதித்தன. 
 
இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்பே தீர்மானிக்கப்பட்டபடி சீருடை நீங்கலாக வேறு அடையாள சின்னங்களை அணியக்கூடாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் ஹிஜாப் அணியலாம். ஆனால் வகுப்பறைக்குள் ஹிஜாபை அணியக்கூடாது ன்று பள்ளி, கல்லூரி நிர்வாகம் கூறியது. இருப்பினும் ஹிஜாப் அணிந்து தான் வகுப்பறைக்குள் வருவோம் என்று மாணவிகள் கூறுகின்றனர்.