வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (10:58 IST)

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு

ஆப்ரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

சென்ற ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்ட போது, தற்போது 45 வயதாகும் முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில்  ஒன்பது நிமிடங்களுக்கும் மேல் முழங்காலை வைத்து அழுத்தியது படம்பிடிக்கப்பட்டது.
 
மிகவும் பரவலாக பகிரப்பட்ட இந்தக் காணொளி இனவெறிக்கு எதிராகவும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டங்களைத்  தூண்டியது.
 
இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை குற்றம் மற்றும் மனிதக் கொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் டெரெக் சாவின் குற்றவாளி என்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் வரை அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருப்பார்.
 
இவர் பல தசாப்தங்களை சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். டெரெக் சாவின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த வழக்குக்குக்கு கிடைத்த அதீத ஊடக வெளிச்சம் காரணமாக அரசுத் தரப்பு நீதிபதிகள் குழு மீது தாக்கம் செலுத்தி இருக்கலாம் என்ற வாதத்தின்  அடிப்படையில் டெரெக் சாவின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்படலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
 
தனிமையில் வைக்கப்பட்ட நீதிபதிகள்
மின்னியாபோலிஸ் நகரில் கடந்த மூன்று வார காலத்துக்கும் மேலாக இந்த பரபரப்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
 
விசாரணை முடிந்த மறு நாளே டெரெக் சாவின் குற்றவாளி என்ற முடிவுக்கு 12 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு முடிவுக்கு வந்தது. திங்கட்கிழமை இரு தரப்பின்  இறுதி வாதங்கள் வாதங்களும் முடிவடைந்தன.
 
தீர்ப்பின் மீது தாக்கம் செலுத்தும் வகையிலான வெளியுலகத் தொடர்புகள் எதுவும் இல்லாத வகையில் ஒரு விடுதி அறையில் நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டு  இருந்தனர்.
 
இவ்வாறு வெளி உலகுடன் தொடர்பு கொள்ளாமல் தீர்ப்பு குறித்து முடிவு செய்ய தனித்திருக்க வேண்டும் என நீதிபதிகள் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியது  அவசியம்.
 
அவர்கள் தீர்ப்பு குறித்து முடிவெடுக்கும் வரை வீடு திரும்ப முடியாது என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
டெரெக் சாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்பு நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டத்தில்  ஈடுபட்டனர்.
 
ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்ப வழக்கறிஞர் பென் க்ரம்ப் இந்தத் தீர்ப்பு அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறிப்பதாகக் கூறியுள்ளார்.
 
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கூறியது என்ன?
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தீர்ப்பு வெளியானதும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருடன் பேசினர்.
 
"குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய செய்ய உள்ளோம். அமைப்பு ரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்," என்று அதிபர் பைடன் அவர்களிடம் கூறுவதைக் கேட்க முடிகிறது.
 
அமெரிக்காவில் காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ஜார்ஜ் ஃப்ளாய்ட் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
 
"இந்த மசோதா ஜார்ஜ் ஃப்ளாய்ட் பாரம்பரியத்தின் ஓர் அங்கம். இது நாம் நீண்ட காலமாக செய்யக் கடமைப்பட்டுள்ள ஒன்று," என அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசுசாரா லாப நோக்கமற்ற அமைப்பான தி மின்னியாபோலிஸ் போலீஸ் ஃபெடரேஷன் எனும் அமைப்பு நீதிபதிகள் குழுவில் இருந்தவர்களின் 'அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளுக்காகவும்' 'மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்ததற்காகவும்' அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
 
ஜார்ஜ் ஃப்ளாய்ட் எப்படி இறந்தார்?
 
2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதியன்று, மின்னியாபோலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க காவல் துறையினர் வந்துள்ளனர்,
 
காவலர் அவரை நெருங்கியபோது ஜார்ஜ் ஃப்ளாய்ட் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
 
அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
 
46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட "காவல் துறையின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்" என அவரது  மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டது.
 
கைது முயற்சியின்போது 20 முறைக்கும் மேல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ''என்னால் மூச்சுவிட இயலவில்லை'' என்று கூறியதுடன், அம்மா, அம்மா என்று அழைத்துக்கொண்டே, ''ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்" என மன்றாடினார்.
 
அவசர ஊர்தி வந்தபோது அசைவற்றுக் கிடந்தார். ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் டெரெக் சாவின் அழுத்துவது போன்றும் காட்டும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
 
என்னென்ன குற்றச்சாட்டுகள்?
மனிதக் கொலை, இரண்டாம் நிலை கொலைக் குற்றம், மூன்றாம் நிலை கொலை குற்றம் ஆகியவை சாவினுக்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளன.
 
ஒருவர் இன்னொரு நபரை உள்நோக்கம் எதுவும் இல்லாமல் கொன்று விடுவதை மனிதக் கொலை குற்றமாக அமெரிக்க சட்டங்கள் வகைப்படுத்துகின்றன.
 
இரண்டாம் நிலை கொலை குற்றத்தில் ஒருவரது கொலைக்கு காரணமான செயல்கள் அவரைக் கொல்லும் நோக்கத்துடனோ நோக்கம் இல்லாமலோ இருக்கலாம். இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
 
ஒருவர் அல்லது பலரது மரணத்திற்கு காரணமாகும் வகையில் ஒரு நபர் செய்யும் செயல்கள் மூன்றாம் நிலைக் கொலைக் குற்றமாக வகைப்படுத்தப்படுகிறது.
 
ஒரு வேளை காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால், காவல் மரணங்கள் தொடர்பாக காவல்துறையினர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுவது மிகவும்  அரிதானது.
 
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரண வழக்கின் விசாரணை, அமெரிக்க சட்ட அமைப்பு இத்தகைய வழக்குகளை வரும் காலங்களில் எப்படி கையாளப் போகிறது என்பதற்கான  குறியீடாகவே பார்க்கப்பட்டது.
 
நீதிபதிகள் குழு
 
முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவினை விடுதலை செய்வதா இல்லை அவரை சிறைக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு 12 நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
வழக்கு விசாரணை நடைபெற்ற காலம் முழுவதும் அவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 
அவர்கள் வயதில் குறைந்தவர்களாகவும், அவர்களில் அதிகம் பேர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், கூடுதல் எண்ணிக்கையில் பெண்களாகவும்  இருந்தனர்.