திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (13:07 IST)

மின்சாரம் இல்லாமல் எப்படி பணி செய்வது? இலங்கை போராட்டக் களத்தில் ஐடி ஊழியர்கள்!

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியானது, பாமர மக்கள் முதல் படித்த சமூகம் வரை நேரடி பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்தமையானது, இலங்கைக்கு இன்று பல்வேறு எதிர்மறை சவால்களை தோற்றுவித்துள்ளது. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பிரதான தொழில்துறைகளான தேயிலை, ரப்பர், ஆடை உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
 
எனினும், சர்வதேச நாடுகளிடமிருந்து நேரடியாக அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மற்றுமொரு தொழில்துறையாக ஐடி துறை காணப்படுகின்றது. இந்த தொழில்நுட்ப தொழில்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இலங்கையில் நாளாந்தம் அமல்படுத்தப்பட்டு வருகின்ற மின்வெட்டு இந்த தொழில்துறையை நேரடியாகவே பாதித்துள்ளது. மின்வெட்டு அமல்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், ஜெனரேட்டர்கள் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு அதற்கும் தடையாக காணப்படுகின்றது.
 
மேலும், மின்சாரம் தடைப்படும் அதேநேரம், இணையத்தள வசதிகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. தொழில்நுட்ப துறைக்கு மிக முக்கியமானதாக காணப்படும் இணையத்தள வசதி தடைப்படுவதானது, அந்த தொழில்துறையை நேரடியாகவே பாதித்துள்ளதாக அந்த தொழில்துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.
 
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுக்கு தீர்வை பெற்றுத் தர கோரியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரியும் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுப் பெற ஆரம்பித்துள்ளன.
 
அதேவேளை, நாட்டை தற்போது ஆட்சி செய்யும் அரசாங்கம் பதவி விலக கோரிக்கை விடுக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரையும் வெளியேறுமாறும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இவ்வாறான சூழ்நிலையில், தொழல்நுட்ப துறைசார் நிபுணர்கள் கொழும்பில் நேற்று (08) பாரிய போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள லிபட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் ஒன்று கூடிய, நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப துறை சார்ந்தோர், போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
 
நேற்று மாலை ஆரம்பமான இந்த போராட்டமானது, இரவு வரை தொடர்ந்திருந்தது. இலங்கைக்கு எதிர்வரும் 5 வருடங்களில் ஐந்து பில்லியன் வரையான வருமானத்தை கொண்டு வரக்கூடிய தொழில்துறை இன்று முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத்துறை நிபுணரான துஷி தில்லைவாசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
"எங்கள் துறையை பொறுத்தவரை மின்சாரம் இல்லாமல் எந்த வேலையையும் செய்ய இயலாது. எங்களுக்கு இது ஒரு பெரிய நெருக்கடி. இது கோவிட் காலத்தில் வரவில்லை. இது மனித தவறு காரணமாக ஏற்பட்ட ஒன்று. தவறான முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்ட ஒன்று. இவ்வளவு காலம் ஜாதிய பாவிச்சோ, மதத்தை பாவிச்சோ, மொழிய பாவிச்சோ எங்களை பிரித்து வைத்தார்கள். இப்ப மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. இலங்கையை நாங்கள் இலங்கையாக அபிவிருத்தி செய்ய வேண்டும்" என தொழில்நுட்பத்துறை நிபுணரான துஷி தில்லைவாசன் குறிப்பிடுகின்றார்.
 
தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் துறையில் இருந்துக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு தீர்வை வழங்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என தொழில்நுட்ப நிபுணரான அஜன் கூறுகின்றார்.
 
"இணைய வசதி மற்றும் மின்சார தட்டுப்பாடு தொடர்ச்சியாக ஏற்படுவதால் பெரும் நெருக்கடியாகவுள்ளது. எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்போது வாடிக்கையாளர்களிடம் சரியான தொடர்புகளை பேண முடியல. எங்களால் ஒரு வேலையை செய்யமுடியவில்லை. ஐடி துறையானது, தீர்வை கொடுக்கும் ஒரு துறை. ஆனால் எங்களால் சரியான தீர்வை கொடுக்க முடியவில்லை." என அஜன் தெரிவிக்கின்றார்.
 
பொறுப்புள்ள ஆட்சி ஒன்றே எங்களுக்கு தேவை என தொழில்நுட்பதுறை நிபுணரான சுபேகா வீரசிங்கம் குறிப்பிடுகின்றார்.
 
"எங்களுக்கு எரிபொருள் இல்ல. மின்சாரம் இல்ல. வேலைக்கு போற ஒரு சாமானிய மக்களால் எப்படி எரிபொருள், மின்சாரம் இல்லாமல், எப்படி அன்றாட வேலைகளை செய்ய முடியும்? அதையும் தாண்டி நாங்களே தீர்வை கொடுக்குறோம். நீங்கள் இந்த ஆட்சியை விட்டு வெளியில் வாங்கனு தீர்வு கொடுத்தாச்சு. ஆனால் அதையும் மீறி வந்து, தங்களுக்கு இந்த ஆட்சி தான் வேணும்னா, ஆட்சி பேராசை இருக்கிற ஆட்களோட எப்படி போராடி, எப்படி எங்களின் உரிமைகளை எடுத்துக்கொள்ள போறோமுனு தெரியல.

கோட்டாபயவும், அவர்களுடைய ஆட்சிக்கு கீழ் இருக்கின்ற ஒட்டு மொத்த நாடாளுமன்றமும் முழுமையாக கலைக்கப்பட வேண்டும். ஒரு பொறுப்புள்ள ஆட்சி தான் எங்களுக்கு தேவை" என சுபேகா வீரசிங்கம் தெரிவிக்கின்றார்.