1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (22:57 IST)

சீன அதிபர் ஷி ஜின்பிங் கனவு காணும் புதிய பொருளாதார அமைப்பு சாத்தியமாகுமா?

உள்நாட்டு சந்தையை மேம்படுத்த என சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்
 
கடந்த நான்கு தசாப்தங்களாக, தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதிகளையே சீனா நம்பியிருந்தது.
 
ஆனால், தற்போது அதனை மாற்ற நினைக்கிறார் அதிபர் ஷி ஜின்பிங். உள்நாட்டு சந்தையை வளர்த்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்பதில் அவர் கவனம் செலுத்துகிறார்.
 
இந்த புதிய உத்தியை அவர் "இரட்டை சுழற்சி" என குறிப்பிடுகிறார். மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இது, தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கைகள், ஊடகச் செய்திகள் ஆகியவற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
 
இந்த புதிய பொருளாதார மாதிரி குறித்து அதிக தகவல்கள் இல்லை என்றாலும், இதற்கு அர்த்தம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, உள்நாட்டிலேயே சந்தைப்படுத்தி, உள்ளூர் மக்களே நுகர்வது போன்ற ஒரு முறை.
 
நுகர்வை மையப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லுமாறு மறுசீரமைக்க வேண்டும் என்பது 2008ஆம் ஆண்டில் இருந்தே சீனாவின் இலக்காக இருக்கிறது. ஏனெனில் ஏற்றுமதிகள் மற்றும் முதலீடு சார்ந்த முறை நீண்டகாலம் தாக்குப்பிடிக்காது.
 
தற்போது சீனாவுக்கு இது உடனடி தேவையாக மாறியுள்ளது.
 
வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான அமெரிக்காவுடனான மோதலால், பல விநியோக நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேறுகின்றன.
 
தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடான சீனாவை இன்னும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வது அந்நாட்டு அதிகாரிகளுக்கு சவாலாகவே இருக்கும்.
 
பொருளாதார மாற்றம்
புதிய பொருளாதார மாதிரிக்கான அடித்தளத்தை, தனது பேச்சுகள், மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களுடனான சந்திப்புக்கூட்டங்களில் அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.
 
கடந்த மே மாதம் பொலிட் ப்யூரோ கூட்டத்தில் பேசிய அதிபர் ஷி ஜின்பிங், "புதிய வளர்ச்சித் திட்டத்தை நிறுவ, நாட்டின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தி, உள்நாட்டு தேவையின் முழு சாத்தியத்தை வெளி கொண்டு வர வேண்டும்…" என்றார்.
 
 
எதிர்காலத்தில் "தேசிய பொருளாதார வட்டத்தில்" உள்நாட்டு சந்தையே ஆதிக்கம் செலுத்தும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் ஷி தெரிவித்தார்.
 
அதனைத் தொடர்ந்து, யாரையும் எதிர்ப்பார்க்காமல் சீனா தன்னை சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கை குறித்த முக்கியத்துவத்தை பற்றி அழுத்தமாக கூறினார்.
 
மேலும் நாட்டின் புதிய பொருளாதாரப் பாதைக்கான ஆதரவை திரட்ட, அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை பார்வையிட்டு வருகிறார்.
 
பெரும் பொருளாதார நிபுணராக கருதப்படும் லி ஹீயின் யோசனைதான் இந்த புதிய வளர்ச்சித்திட்டம்.
 
கடந்த 5 ஆண்டுகளாக சீன பொருளாதார கொள்கையின் சில முக்கிய யோசனைகள் இவருடையதுதான்.
 
வெறும் சர்வதேச சந்தையை வைத்து மட்டுமே இவ்வளவு பெரிய பொருளாதாரம் இயங்கக்கூடாது என்கிறார், மாநில கவுன்சிலின் முன்னாள் துணை பொதுச்செயலாளரும், சிங்ஹுவா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவருமான ஜியாங் ஷிஹுவான்.
 
 
 
"உள்நாட்டு சந்தையை வலுப்படுத்தி அதனை சார்ந்திருப்பது ராஜீய ரீதியிலான திட்டம் மட்டுமல்ல, உண்மையான தேவையும்கூட" என்று செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான சீனா டெய்லிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
 
அதே நேரத்தில் சீனா உலக நாடுகளின் அங்கமாக இருக்கும் என்றும் உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைந்து செயல்படும் என்று அதிகாரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.
 
ஆனால், சீனாவின் பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது உலக வர்த்தக முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
நட்பற்ற நாடுகளை துண்டித்தல்
 
பொருளாதாரம் ஒருபக்கம் இருக்க, உலகச்சூழலின் நிலையற்ற தன்மை அதிகரித்து வருவதற்கு ஈடு கொடுப்பதற்காகவும், பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் முடிவை அதிபர் ஷி ஜின்பிங் எடுத்துள்ளார்.
 
வெளிநாட்டு சந்தைகளில் வரும் காலங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால், புதிய ஆபத்துகளுக்கும் சவால்களுக்கும் நாம் தயாராக வேண்டும் என்று ஆகஸ்ட் 24ஆம் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் ஷி பேசினார்.
 
"இந்த நூற்றாண்டில் இல்லாத அளவிற்கான பெரும் மாற்றங்களை உலகம் சந்தித்து வருகிறது" என்று குறிப்பிட்ட அவர், "கரடுமுரடான ஒரு மாற்றத்திற்கு" சீனா தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தில் மா சே துங் காலத்தில் இருந்தே தற்சார்பு மிக்க பொருளாதாரம் என்ற கொள்கை வேரூன்றி இருக்கிறது. குறிப்பாக சர்வதேச சூழல் தங்கள் நாட்டிற்கு எதிராக இருந்தபோது இதனை பயன்படுத்துவார்கள். தற்போது அதிபர் ஷி ஜின்பிங்கின் ஆட்சியில் இந்த தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
 
வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வென்று ஆட்சிக்கு வந்தாலும், அந்நாட்டுடனான பகைமை உணர்வு தொடரும் என்ற பார்வைக்கு சீனா தலைமைக்கு தெரிய வந்துள்ளது. அதனால், ராஜீய ரீதியான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது.
 
"இந்த பொருளாதார மறுசீரமைப்பு அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், துன்புறுத்தலையும் எதிர்த்து போராட உதவும்" என ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியான கிளோபல் டைம்ஸ் நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது.
 
"அமெரிக்க, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நட்பாக இல்லாத நாடுகளில் இருந்து விலகும் நிர்பந்தம் சீனாவுக்கு ஏற்படலாம். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களின் பொருளாதாரங்களுடன் நெருக்கமான உறவைப்பேண கவனம் செலுத்தப்படும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பிட்ட கொள்கை நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கும் இந்த இரட்டை சுழற்சி உத்தி, சொல்வதற்கு எளிதாக இருக்கலாம் ஆனால், நடைமுறைபடுத்துவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
 
வளங்களை ஒதுக்கீடு செய்வதில் சந்தையின் பங்கு மிகப்பெரியது என்று தான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூறிவரும் அதிபர் ஷி ஜின்பிங், அதனை செய்யத்தவறிவிட்டார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தில் அரசின் ஆதிக்கமே அதிகமாகி வந்தது.
 
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, சீன பொருளாதாரம் மீண்டு வரும் அறிகுறிகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் இருக்கவே செய்கிறது. சமமற்ற மக்கள் வருமானம் மற்றும் நுகர்வோர் செலவினங்களை குறைத்தது ஆகியவற்றை சொல்லலாம்.
 
குடும்ப வருமானங்களை அதிகரிக்கச் செய்வது, நுகரச் செய்வது, இந்த புதிய திட்டத்திற்கு கைக்கொடுக்கலாம்.
 
இதையெல்லாம் செய்தால் கூட, இதனை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதாக
 
சீன உள்நாட்டு சந்தையையும் நாம் கவனிக்க வேண்டும். மிகப்பெரிய சந்தையாக இது இருந்தாலும், அந்நாட்டின் அதிக உற்பத்தித்திறனை சமாளிக்க முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படலாம்.