வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (14:56 IST)

"ராமர் கற்பனை கதாபாத்திரமா?" - சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்

BBC
சட்டப்பேரவையில் சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது , ராமர் குறித்த கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தனித் தீர்மானத்தை  சட்டப்பேரவையில் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங்கால் 2004ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. மு. கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோர் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்கள்.

திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.  எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது  “இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். 

இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்” என்று பேசினார். 

ராமாயணம் கற்பனை என்று கூறுவதா?

தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “ராமர் பெயரை சொல்லி சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும் சிலர் வரலாறு என்று சொல்கின்றார்கள். ராமாயணம் ஒரு சிறந்த அற்புதமான கற்பனை காவியம் என்று மகாத்மா காந்தி சொல்கிறார். ராமர் என்ற பாத்திரம் மனித ஒழுக்கத்தை கற்பிக்கிறது.

எனவே, நான் ராமாயணத்தை நேசிக்கிறேன் என்று அவர் சொல்லியுள்ளார். ராமாயணம் ஒரு கற்பனை காவியமே என்று நேரு சொல்கிறார். ராஜாஜியும் ராமாயணத்தை கற்பனை காவியமே என்று சொல்கிறார். தற்போது, மத்திய அமைச்சரே சேது சமுத்திரத்தில் ராமர் பாலம் இருந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது தமிழர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என்று பேசினார்.

சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா அல்லது எதிர்க்க வேண்டுமா என்பது குறித்துப் பேசுவதை விடுத்து ராமாயணம் கற்பனை கதை என்று அவையில் பேசுவது தேவையில்லாதது என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் அவ்வாறு கூறவில்லை, தலைவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுதான் தெரிவித்தார் எனக் கூறினார். எனினும், இதை ஏற்க மறுத்த நயினார் நாகேந்திரன், இத்தகைய பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்தார்.
BBC

நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ தெய்வத்தைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ யாரும் விமர்சித்துப் பேசவில்லை. அவற்றைப் பயன்படுத்தி திட்டத்தைத் தடுத்து விட்டனர் என்றுதான் சட்டமன்ற உறுப்பினர் பேசினார்,” என விளக்கம் அளித்தார். இதையடுத்துப் பேசிய நயினார் நாகேந்திரன், சேது சமுத்திர திட்டம் வருமானால் எங்களைப் போன்ற தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை விட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இல்லை. ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் தனித் தீர்மானத்தை ஏற்பதாகத் தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “ராமர் என்ற கதாபாத்திரம் கற்பனையானது என்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. இந்தக் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், “150 ஆண்டுகால கனவுத் திட்டமான சேதுசமுத்திர திட்டத்தைச் செயல்படுத்த கருணாநிதி முயன்றபோது, அங்கு ராமர் பாலம் இருப்பதாக சனாதான சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தற்போது அதே சனாதான சக்திகள் ஆட்சியில் இருக்கும்போது மத்திய அமைச்சரே இந்திய நாடாளுமன்றத்தில் அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது கருணாநிதி பேசியதை உண்மையாக்கியுள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்," என்று பேசினார். இதைத் தொடர்ந்து முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.