ஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?

ipl
Last Updated: திங்கள், 28 மே 2018 (13:28 IST)
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன?
 
வெவ்வேறு ஜெர்ஸியில் அயல்நாட்டு வீரர்கள், இரைச்சல், இசை நிறைந்த கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் தங்களது அணியையும், அணியின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் என அழைக்கப்படும் நடனமாடுபவர்கள் மற்றும் இந்திய அணிக்குள் நுழைவதற்காக தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி அணித் தேர்வாளராக்களை கவர முயற்சிக்கும் இளம் இந்திய வீரர்கள்.
 
ஐபிஎல் அணிகள் குறித்தும், இறுதிப் போட்டியில் எந்த அணி வெல்லக்கூடும் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவதில்லை. ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் இருந்துவந்து இங்கே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சியர் லீடர்கள் குறித்ததே இக்கட்டுரை.
 
இவ்வருடம் மொத்தமுள்ள எட்டு அணிகளில் ஆறு அணிகளில் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களே சியர் லீடர்களாக பணியாற்றுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் சியர் லீடர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். டெல்லி டேர்டெவில்ஸ் அணியைச் சேர்ந்த சீயர் லீடர்களிடம் நாங்கள் பேசியபோது அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள்.
 
யார் இந்த சியர் லீடர்கள்?
 
டெல்லி அணியை சேர்ந்த நான்கு சியர் லீடர்களை நாங்கள் சந்தித்தோம். அதில் இருவர் ஐரோப்பா மற்றும் இருவர் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
 
ஐபிஎல்லில் ஆடும் சியர் லீடர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் எனப்பலர் கருதுகிறார்கள் ஆனால் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களாவர். ஆஸ்திரேலியாவில் இருந்துவந்துள்ள கேத்தரின், தான் ஒரு தொழில்முறை நடனமங்கை என்றும் வெவ்வேறு நாடுகளில் இதுவரை நடமாடியுள்ளதாகவும் தெரிவித்தார். சமீபத்தில் அவர் மெக்சிகோவில் ஆறு மாதங்கள் இருந்துள்ளார்.
 
''மூன்று வயதிலிருந்தே எனக்கு நாட்டியம் மீது பிரியம் வந்துவிட்டது. நடன மங்கையாக வேண்டும் எனும் எனது லட்சியம் மெல்ல மெல்ல தொழில்முறை சியர்லீடராக்கியது'' என்கிறார் கேத்தரின். கேத்தரீனுக்கு சியர் லீடராக பணியாற்றியதில் விலா எலும்பு முறிந்துள்ளது. நடனமாடுவது மட்டுமே சியர் லீடருக்கான தகுதி என நீங்கள் நினைத்தால் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியிலிருந்து வந்துள்ள டேன் பேட்மேன் கதை உங்களுக்கு அதிர்ச்சியூட்டலாம்.
 
''எனக்கு பதினோரு வயதாக இருக்கும்போது பள்ளியில் சியர் லீடிங்கை தொடங்கினேன். அப்போது என்னுடைய விலா எலும்பு முறிந்தது. அந்த காயத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆனது'' என்றார் பேட்மேன்.
 
''ஐபிஎல்லில் சியர் லீடர் நடனமாடினால் மட்டும் போதுமானது.ஆனால் அயல்நாடுகளில் நாங்கள் வெவ்வேறு விதமான பாங்கில் உடலை வளைக்க வேண்டும். ஆகவே நெகிழ்வான உடலமைப்பு மிக முக்கியமானது. இது விளையாட்டுத் துறை போன்றதே. விளையாட்டு வீரர்கள் களத்தில் என்னென்ன பயிற்சிகளைச் செய்கிறார்களோ அதே போலவே நாங்களும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறோம்'' என விவரித்துச் சொன்னார் பேட்மேன்.
 
குத்துச் சண்டை போட்டிகளுக்கும் இவர் சியர்லீடிங் செய்துள்ளார்.
 
அமெரிக்காவில் சியர்லீடிங் கலாசாரம் மிகவும் பிரபலமானது. தற்போது ஐரோப்பாவில் உள்ள விளையாட்டுகளிலும் இந்த டிரெண்ட் தொடர்கிறது. அமெரிக்காவில் மின்னிசோட்டா பல்கலைகழகத்தில் சியர்லீடிங் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பெண்ணால் ஆரம்பிக்கப்படவில்லை ஓர் ஆண்தான் துவக்கினார். அவரது பெயர் ஜான் கேம்ப்பெல்.
 
அதுமட்டுமல்ல அவர் துவக்கிய அணியில் இருந்த அனைவரும் ஆண்களே. இரண்டாம் உலகப்போரின்போது 1940-ல் பெரும்பாலும் ஆண்கள் போர்க்களத்துக்குச் சென்றபிறகு பெண்கள் சியர்லீடர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 
சியர்லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம்?
 
ஏஜென்சி மூலமாக அயல்நாடுகளில் இருந்து சியர்லீடர்கள் இங்கே வருகிறார்கள். ஒப்பந்தமும் ஏஜென்சி வழியாகவேப் போடப்படுகிறது. நாங்கள் இத்தகைய ஏஜென்சியில் உள்ள ஒருவரைத் தொடர்புகொண்டோம்.
 
அயல்நாட்டைச் சேர்ந்த சியர்லீடர்கள் ஐபிஎல்லில் 1500 - 2000 பவுண்டுகள் சம்பாதிப்பதாகச் சொன்னார். தோராயமாக ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். முக்கியமாக இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைவிட ஐரோப்பிய சியர் லீடர்களுக்கு சம்பளத்தில் வித்தியாசம் உள்ளது.
 
சம்பளம் குறித்த கருத்து என்ன என சியர்லீடர்களிடம் நாங்கள் கேட்டபோது, டெல்லியைச் சேர்ந்த எல்லீ எனும் சியர்லீடர் ''நாங்கள் செய்யும் கடின உழைப்பு மற்றும் எங்களது நாட்டைப் பொறுத்தவரையில் எனது சம்பளம் திருப்திதரக்கூடியதாக இல்லை'' என்றார்.
 
ரசிகர்கள் நடத்தை சியர்லீடர்களுக்கு வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறதா?
 
ஐபிஎல்லில் ஊக்கப்படுத்தும் விதமாக சியர்லீடிங் செய்யும்போது அவர்கள் மனநிலை என்ன? அது விளையாட்டு மற்றும் வேடிக்கைக்கானது மட்டுமா?
 
தான் இந்தியாவில் நல்லபடியாக உணர்வதாகவும், மக்கள் இங்கே தன்னை பிரபலமாக கருதி ஆட்டோகிராஃப் கேட்பதாகவும் தெரிவித்தார் பேட்மேன்.
 
எனினும், மேடையில் நடனமாடும் நாட்டியமங்கைகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்காமல் அவர்களது வாழ்க்கைத்தொழில் சியர்லீடிங் என்றும் மக்கள் உணர வேண்டும். அவர்களது உடல் குறித்தே கருத்து சொல்லிக்கொண்டிருக்காமல் சக மனிதராக மதிக்கப்படவேண்டும் என்றார் பேட்மேன்.இதில் மேலும் படிக்கவும் :