1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (09:06 IST)

யுக்ரேன் மீது படையெடுப்பு: இந்தியா ரஷ்யாவைக் கண்டிக்காதது ஏன்?

மாஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளுடன் தனது உறவுகளை சமநிலையில் தக்க வைக்கும் முயற்சியில், கடந்த சில நாட்களாக யுக்ரேன் விவகாரத்தில், ராஜிய உறவுகள் என்னும் கயிற்றின் மீது நடப்பது போல மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
 
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியாவின் முதல் அறிக்கையில் நேரடியாக எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு சர்வதேச சமூகம் விடுத்த அழைப்புகள் புறக்கணிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.
இருப்பினும், அது ரஷ்யாவை விமர்சிப்பதைத் தவிர்த்தது. படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐநா தீர்மானத்தின் மீது ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிப்பதற்கு முன்பு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகள் இந்தியா, "சரியானதைச் செய்ய வேண்டும்" என்று அழைப்பு விடுத்தன.
 
யுக்ரேனும் ரஷ்யாவும், இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பகிரங்க முறையீடுகளையும் செய்தன. ஆனால், இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்பதைத் தேர்ந்தெடுத்தது, ஆனால் அதன் அறிக்கையை கவனமாகப் படித்தால், அது ஒரு படி மேலே சென்று, சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு மறைமுகமாக மாஸ்கோவைக் கேட்டுக் கொண்டது.
 
"ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அரசுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை" ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய இந்தியா, "இதற்கு ஒரு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதில் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியது.
 
ஆனால், வாக்களிப்பில் பங்கெடுக்காமல் இருக்கும் இந்தியாவின் முடிவு, குறிப்பாக மேற்கு நாடுகளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, தனது தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டாமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளுடன் தனது உறவுகளை சமநிலையில் தக்க வைக்கும் முயற்சியில் இப்படி ஒரு நெருக்கடி இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
 
சிறந்த வழி எதுவுமில்லை
இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி ஜேஎன் மிஸ்ரா, "இந்தியாவிடம் தேர்ந்தெடுக்க, மோசமான மற்றும் மிக மோசமான வழிகள் மட்டுமே உள்ளன" என்கிறார்.
 
அதாவது "ஒரே நேரத்தில் இருபுறமும் சாய்ந்துவிட முடியாது. இந்தியா எந்த நாட்டையும் பெயர் குறிப்பிடவில்லை. இது மாஸ்கோவிற்கு எதிராக இந்தியா செல்லாது என்பதைக் காட்டுகிறது. இந்தியா ஒரு தரப்பைச் சார்வதில், நுட்பமாகச் செயல்பட வேண்டும், அது அதைச் சரியாகச் செய்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.
 
யுக்ரேன் விவகாரத்தில் ராஜதந்திர சமநிலையைப் பராமரிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. ரஷ்யாவுடனான இந்தியாவின் மிக வலுவான பாதுகாப்பு மற்றும் ராஜிய உறவுகள் மிக முக்கியமானவை.
தனது வர்த்தகத்தைப் பன்முகப்படுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியா எடுத்த முடிவின் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி 70% இலிருந்து 49% ஆகக் குறைந்தாலும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையராக ரஷ்யா இன்னும் தொடர்கிறது.
 
மேலும், ரஷ்யா S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு போன்ற உபகரணங்களை வழங்குகிறது, இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிற்கு முக்கியமான கேந்திரக் கேடயமாக விளங்குகிறது. அதனால்தான் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் என்ற அச்சுறுத்தலையும் மீறி, தனது இறக்குமதியைது துணிந்து தொடர்ந்தது.
 
ராணுவத் தளவாடங்களின் முக்கியத்துவம்
சில பிரச்சினைகளில், ரஷ்யாவுடனான ராஜதந்திர ஒத்துழைப்பில் பல தசாப்த கால வரலாற்றை இந்தியா எளிதில் புறக்கணிக்க இயலாது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் தொடர்பான ஐநா சபையின் தீர்மானங்களை இருதரப்புப் பிரச்சினையாகவே வைத்திருக்க இந்தியாவுக்கு உதவுவதற்காக, ரஷ்யா கடந்த காலங்களில் வீட்டோ செய்துள்ளது.
 
இந்தச் சூழலில், இந்தியா அதன் புகழ்பெற்ற உத்தியான அணிசேராமை மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உரையாடலை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிறது.
 
வில்சன் மையத்தின் சிந்தனைக் குழுவின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன், இந்தியாவின் நிலைப்பாடு அதன் கடந்தகால உத்தியுடன் ஒத்துப்போவதால், ஆச்சரியப்படுவதற்கில்லை. யுக்ரேன் நிகழ்வுகள் இந்தியாவுக்குக் கவலையளித்தாலும், அது அதன் நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பில்லை" என்று கூறுகிறார்.
 
"அதன் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் தேவைகள் காரணமாக தற்போது அவ்வாறு செய்ய முடியாது," என்று அவர் கூறுகிறார்.
"யுக்ரேனின் தற்போதைய நிலைமை தனக்கு உகந்ததாக இல்லை என்பதைக் காட்டுவதற்காக ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் சில கடும் வார்த்தைகளை இந்தியா பயன்படுத்தியுள்ளது" என்றும் அவர் கூறினார்.
 
யுக்ரேனில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட 20,000 இந்திய குடிமக்களை, வெளியேற்றும் கடினமான பணியும் இந்தியாவுக்கு உள்ளது.
 
முன்னாள் இந்தியத் தூதர் அனில் திரிகுனியத், மாஸ்கோவிலும் லிபியாவிலும் 2011 இல் மோதல் வெடித்தபோது இந்திய குடிமக்களை வெளியேற்றுவதை மேற்பார்வையிட்டவர். அவர், "வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கையை நடத்துவதற்கு மோதலில் உள்ள அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை" என்கிறார்.
 
"தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், இந்தியா ஒரு பக்கச் சார்பை எடுக்க முடியாது. மேலும், அனைவருடனும் இணக்கமான உறவுகளைக் கொண்டிருப்பது என்ற இலக்கையும் அது கொண்டுள்ளது." என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
அந்த வகையில், அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளுடனும் நல்லுறவு கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்தியா ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேசியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புடனும் ராஜதந்திர வழிகளைத் திறந்து வைத்திருப்பதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாக திரு திரிகுனியத் கூறுகிறார்.
 
மேலும், "ரஷ்யாவை இந்தியா நேரடியாக விமர்சிக்கவில்லை என்பதால் யுக்ரேனியர்களின் துன்பங்களை இந்தியா புறக்கணிப்பதாகவும் பொருளில்லை. அது ஒரு சமநிலையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது. அது ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி வலுவாகப் பேசியதன் மூலம், யுக்ரேனின் அவலநிலையையும் அது கோடிட்டுக் குறிப்பிட்டது." என்றும் அவர் விளக்கினார்.
 
ஆனால் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து விதிக்கும் பட்சத்தில், இந்தியா, மாஸ்கோவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்வது கடினமாக இருக்கும்.
 
இந்த நேரத்தில் இந்தியாவின் நிலையை அமெரிக்கா புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் இது எத்தனை காலம் தொடரும் என்று கூறுவதற்கில்லை.
 
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டபோது, அவர் உறுதியான பதில் அளிக்கவில்லை. "நாங்கள் இந்தியாவுடன் [யுக்ரேன் தொடர்பாக] ஆலோசனை நடத்த உள்ளோம். நாங்கள் அதை இன்னும் முழுமையாகத் தீர்க்கவில்லை," என்று அவர் கூறினார்.
 
S-400 களை வாங்குவதில் பொருளாதாரத் தடைகள் என்னும் பிரச்சினை இன்னும் உள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் தடைகளுடன் ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவைக் குறிவைத்து, 2017 இல் அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சட்டம் (Caatsa) அறிமுகப்படுத்தப்பட்டது. எந்தவொரு நாடும் இந்த நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதையும் இது தடை செய்கிறது.
 
ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே கூட, அமெரிக்கா எந்தவிதமான சலுகையும் அளிக்கவில்லை, மேலும் இந்த விவகாரம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேரம் பேசும் சிக்கலாக மாறும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
இதற்கிடையில், இந்தியாவின் உத்தியில் மாற்றம் ஏற்பட்டால், அதன் பரம எதிரியான பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்துவது உட்பட, தனது அழுத்தங்களை ரஷ்யா கொடுக்கலாம்.
 
கடந்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளை ரஷ்யா ஏற்றுக்கொண்டது, ஆனால் யுக்ரேன் என்ற தடுப்புக் கோட்டை இந்தியா தாண்டுவதை அது விரும்பவில்லை.
 
குகல்மேன் கூறுகையில், "யுக்ரேனில் மோதல் நீடித்து இருமுனை உலகத்தை உருவாக்கினால் மட்டுமே இதுபோன்ற முக்கிய அழுத்தப் புள்ளிகள் வரும். அது நடக்காது என்று நம்புவோம். ஆனால் அப்படி நடந்தால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கடும் சோதனைக்குள்ளாகும்" என்று தெரிவித்தார்.