வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:11 IST)

புதுமைப் பெண் திட்டம் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்: வேறுபாடுகள் என்னென்ன?

BBC
தமிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் உயர்கல்வி திட்டத்தை நேற்று தமிழ்நாடு முதல்வர் மு. . ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தினத்தன்று தொடங்கிவைக்கப்பட்ட இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், "அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்தான் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கைக் காரணமாக முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர். 100 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர்," என்று குறிப்பிட்டிருந்தார்.


கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வித் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் பெயர்தான் தற்போது, புதுமைப் பெண் திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெண் கல்வியை மேம்படுத்தும் திட்டம்:

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் கடந்த 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கான கல்வி கிடைக்காமலும், குழந்தை திருமணங்களும் பரவலாக இருந்த காலகட்டம் அது. தேவதாசி முறையை எதிர்த்து போராடிய ராமாமிர்தம் அம்மையார், திராவிட இயக்கத்துடன் இணைந்து, பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அதில் ஒன்று, பெண்களுக்கான கல்வி.

இதன் காரணமாகவே, அவருடைய நினைவாக, அன்றைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, பெண்கள் கல்வியை மேம்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்திய இந்த திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பெண்கள் எட்டாம் வகுப்பு படித்து முடித்தால், அவர்கள் திருமணத்தின்போது ரூ. 5000 திருமண நிதியுதவி தொகை வழங்கப்படும் என்பதாக திட்டத்தை அப்போது அறிவித்தார் முதல்வராக இருந்த மு.கருணாநிதி. பிறகு, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திருமணத்தின்போது ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்பதாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த உதவித்தொகை ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டது. இதன்பின் அதிமுக ஆட்சியின்போது, 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு உதவித்தொகையை 50,000 ஆக உயர்த்தி, தாலிக்கு 4 கிராம் தங்கமும் இந்த திட்டம் மூலம் வழங்கினார். பள்ளிக்கல்வி முடித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் உதவித்தொகையை தொடர்ந்தது. அதன்பிறகு, 2016ம் ஆண்டு, 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

18 வயதை நிரம்பிய ஒரு பெண்கள் இந்தத் திட்டம் மூலம் திருமண உதவி பெற முடிந்தது. பழங்குடியினப் பெண்களுக்கு, ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் 18 வயதுக்குப் பிறகு ஊக்கத்தொகையை பெறத் தகுதியுடையவர்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளி தனது திருமணத்திற்கு குறைந்தது 40 நாட்களுக்கு முன்னதாக, அழைப்பிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
BBC

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த திருமண உதவித்திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை எனவும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், தற்போது புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டம் அடிப்படைத் தகுதிகள்:

மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து, தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.

அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினர் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகள் நலப் பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகும்.


மாணவிகள் 8 அல்லது 10 அல்லது 12ஆம் வகுப்புகளில் படித்து, பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியை பொறுத்தவரையில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.