நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, சில மாணவர்கள் அவரது பேச்சை இடையீடு செய்து, ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவம் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கலவரங்கள் பற்றிய கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து பயணத்தில் இருக்கும் மம்தா பானர்ஜி, லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குள் அமைந்துள்ள கெல்லாக் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். அவரின் உரையின் நடுவே சிலர் திடீரென கோஷமிட்டு, மாநில அரசின் செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்க முயன்றனர்.
இதற்கு அமைதியாக பதிலளித்த மம்தா பானர்ஜி, "ஆர்.ஜி. கர் சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அது தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்களிடம் அது தொடர்பான எந்த அதிகாரமும் இல்லை. இங்கு அரசியல் பேசுவது பொருத்தமல்ல. எனக்கு எதிராக குரல் கொடுக்க விரும்பினால், மேற்கு வங்கத்திற்கு வாருங்கள். அங்கே நேரில் வந்து என்னை எதிர்கொள்ளுங்கள்.
உண்மையை மறைக்கக் கூடாது. உங்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை, ஆனால் உங்கள் கல்வி நிறுவனத்தின் மரியாதையை காப்பாற்றுங்கள். நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இங்கு இருக்கிறேன். என் நாட்டின் நற்பெயரை நீங்கள் கெடுக்க வேண்டாம்.
நீங்கள் எனக்கு சவாலாக நிற்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்கள் சகோதரியாக நான் யாருக்கும் பயப்படவில்லை. வங்கப் புலியைப் போல தைரியமாக நிற்பேன். முடிந்தால் பிடிக்க முயற்சி செய்து பாருங்கள்!" என்று சவால் விட்டார்.
Edited by Mahendran