புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (11:16 IST)

2021இல் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள்: சார்பட்டா `டான்சிங் ரோஸ்` முதல் டாக்டர் `பகத்` வரை

2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த கதாபாத்திரங்கள் பற்றியும் அவற்றை ஏற்று நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் பற்றியும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
கதாநாயகன் - வில்லன் என்ற இரு பாத்திரங்களோடு சேர்த்து, மற்ற துணை பாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது அரிதாகவே இருந்துவந்த நிலையில், இந்த 2021ஆம் ஆண்டு வெளியான பல படங்களில், துணைப் பாத்திரங்கள் பல, ரசிகர்களின் வெகுவான வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், அத்திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. அந்த வகையில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
 
படத்தில் பிரதான பாத்திரமான கபிலன் மட்டுமல்லாது, ரங்கன் வாத்தியார் டாடி, வேம்புலி, மாரியம்மாள், பாக்கியம் என ஒவ்வொருவருக்கும் திரைக்கதையின் ஏதோ ஒரு தருணத்தில் பிரதான பாத்திரமாகவே மிளிர்கிறார்கள். சில காட்சிகளில் மட்டுமே வந்துசெல்லும் 'டான்சிங் ரோஸ்' கதாபாத்திரம் அட்டகாசம்.
 
சார்பட்டா பரம்பரை - டான்சிங்க் ரோஸ்
 
2014ஆம் ஆண்டு வெளியான 'நெருங்கி வா முத்தமிட' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஷபீர் கல்லராக்கல், வில்லன், துணை நடிகர் என அடுத்தடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த ஆண்டு வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த 'டான்சிங் ரோஸ்' கதாபாத்திரம் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது. அந்த கதாப்பாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படம் எடுத்தால் என்ன? என்ற கேள்வியை கேட்காத ரசிகர்களே இல்லை
 
சார்பட்டா பரம்பரை - டாடி

ஜான் விஜய் ஏற்று நடித்திருக்கும் 'டாடி' என்ற பாத்திரமும் அப்படித்தான். ஆங்கிலமும் தமிழும் கலந்துபேசும் ஆங்கிலோ இந்தியன் பாத்திரத்தில், தன்னுடன் திரையில் தோன்றிய மற்றவர்களைத் தாண்டிப் பிரகாசித்தார் வரும் ஜான் விஜய். ஓரம் போ படத்தில் அறிமுகமானபோது பேசுபொருளான ஜான் விஜய், தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இன்னொரு அடையாளமாகிவிட்டது டாடி கதாபாத்திரம்.
 
சார்பட்டா பரம்பரை - ரங்கன் வாத்தியார்
 
இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்கு பெயர்பெற்ற பசுபதிக்கு வேண்டுமானால் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் சுலபமாக இருந்திருக்கலாம். ஆனால், அக்கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் சுலபமாக மறந்துவிடப்போவதில்லை.
 
ஜெய்பீம் - செங்கேணி, ராஜாக்கண்ணு
அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராட முடியாத இயலாமையையும், நீதிக்காக போராடும்போது மன உறுதியையும் தனது சின்னச்சின்ன முகபாவங்களில் அற்புதமாகக்காட்டி, செங்கேணியாக அசத்தியிருக்கிறார் லிஜோமோல் ஜோஸ். "அண்ணே வலி தாங்க முடியலணே, பேசாம திருடுனோம்னு ஒத்துக்கிருவோம்ணே...!", என்கிற வசனத்தில் அப்பாவித்தனத்தையும், "உங்களுக்கு சாதிச்சான்றிதழ் வேணுமாடா...? பாம்பு பிடிச்சுக் காட்டுவியா..?" எனும் கேள்விக்கு "பாம்பு பிடிக்க வேணாம்னுதான்யா சர்டிபிகேட் கேக்குறோம்.!" எனும் கூர்மையான வசனத்தில் ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்தி ராஜாக்கண்ணுவாக ஆச்சர்யப்படுத்துகிறார் மணிகண்டன். உண்மையில் 1993-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மணிகண்டனும், லிஜோ மோல் ஜோஸும் மீண்டும் நம்முன் உயிர்ப்புடன் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.
 
கர்ணன் - ஏம ராஜா
கர்ணன் திரைப்படத்தைப் பொறுத்தவரை கதாநாயகன் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜை அடுத்து, அதிகம் பாராட்டப்பட்டது நடிகர் லால் தான். மலையாள திரையுலகில் முக்கிய இயக்குநராகவும், தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வரும் லால், கர்ணன் திரைப்படத்தில் ஏம ராஜா கதாபாத்திரத்தில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தே போனார்.
 
ஜெகமே தந்திரம் - சிவதாஸ்
ஜெகமே தந்திரம் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்களில், "யாருய்யா இந்த ஆளு? செம்ம கெத்தா இருக்கார்ல…" என, வியக்காதவர்கள் வெகு சிலரே, மலையாளப் படங்களை விரும்பிப்பார்க்கும் சில தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் தெரிந்திருக்கலாம், இவர்தான் ஜோஜு ஜார்ஜ் என்று. சிவதாஸ் கதாப்பாத்திரத்தின் மிடுக்கை, முகபாவனை மட்டுமல்லாமல் உடல்மொழிலியும் வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் ஜோஜு ஜார்ஜ்.
 
மாநாடு - தனுஷ்கோடி
பல்வேறு சர்ச்சைகளையும் தடைகளையும் கடந்து வெளியாகி, வெகுநாட்களுக்குப் பிறகு, தியேட்டர்களை ரசிகர் கூட்டத்தால் நிறைத்த சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் வில்லன் தனுஷ்கோடி கதாப்பாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. தொடக்கத்தில் சிம்புவுக்காகவும், பின்பு சுவாரசியமான டைம் லூப் கதைக்களத்திற்காகவும் கொண்டாடப்பட்ட படம், போகப்போக வில்லன் எஸ்.ஜே.சூர்யாவுக்காகவும் ஓட ஆரம்பித்தது. ``அவருக்கு இதெல்லாம் சாதாரணம்பா`` என்று கூறும் எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களே, க்ளீஷேவாக இருந்தாலும் ரொம்ப நாளாச்சே என்று ரசித்து மகிழ்ந்தனர்.
 
டிக்கிலோனா - மாறன்
 
சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வெளியான முழுநீள நகைச்சுவைப் படம்தான் டிக்கிலோனா. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படத்தில், கடைசி சில நிமிடங்கள் மட்டுமே மன நோயாளியாகத் தோன்றும் நகைச்சுவை நடிகர் மாறன் அட்டகாசம் செய்திருப்பார். மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் காட்சியின்போது, ஒவ்வொரு கட்டத்திலும், "என்ன நீ இன்னும் பத்தியம்னு நினைக்கிறல" என்று அவர் பேசும் வசனம், ரசிகர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் பேசிக்கொள்ளும் சராசரி வகனமாகவே மாறிவிட்டது. அந்த வசனத்தை வைத்து பலவிதமான மீம்களும் இணையத்தில் வைரலாகின.
 
டாக்டர் - ரெடின் கிங்ஸ்லி
நகைச்சுவைக்கே உரித்தான ரைமிங் - டைமிங் என எந்த நேர்த்தியும் இல்லாமல், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் ரெடின் கிங்ஸ்லி. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரது திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரது தனித்துவமான டயலாக் டெலிவெரிதான் காரணம் என்பது அவருக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.