திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (11:27 IST)

கால்நடை மருத்துவர்களுக்கான காலி இடங்களை நிரப்ப வேண்டும்… தமிழக அரசுக்கு ஜி கே வாசன் கோரிக்கை!

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள கால்நடைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் கால்நடைகள் நோயால் பாதிக்கப்படுகின்றன. மாநிலத்தின் சில இடங்களில் கால்நடைகள் நோய் தாக்கியதால் இறந்துவிட்டன.

கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றால் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இருக்க வேண்டும். அதாவது கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை மருத்துவர் காலிப் பணியிடங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுமார் 5 கிராமப்புறப் பகுதியில் உள்ள கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. பல கால்நடை மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் கூடுதல் பொறுப்பாக மருத்துவர்களுக்குப் பணி அமைந்திருக்கிறது. ஏற்கெனவே கால்நடைகளைப் பாதுகாக்க போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டதால் பல கிராமப்புறப் பகுதிகளில் கால்நடைகளைப் பாதுகாக்கும் பணியில் தடை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கால்நடை மருந்தகங்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். போதிய தடுப்பூசி மருந்துகள் இல்லாத காரணத்தால் கால்நடைகள் பாதிக்கப்படும்போது மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு கால்நடைகளைப் பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. எனவே தமிழக அரசு, கால்நடை பெருமருத்துவமனைகள், பன்முக மருத்துவமனைகள், நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் ஆகியவற்றின் மூலம் கால்நடைகளைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யவும், கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசி, மருந்துகள் ஆகியவை தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், கால்நடைகள் வளர்ப்புக்கு ஊக்கம் அளிக்கவும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.