1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:49 IST)

'தமிழ்நாட்டு மக்களுக்கு தலை வணங்குகிறேன்' - நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தோ்தல்களில் தொடா் தோல்விகளைச் சந்தித்த பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை என்று மக்களவையில் பிரதமா் நரேந்திர மோதி பேசினார் என்கிறது தினமணி செய்தி.

ஜனநாயகத்துக்கு விமா்சனங்கள் அவசியமானவை எனத் தெரிவித்த அவர், அனைத்து விவகாரங்களையும் காங்கிரஸ் கட்சி கண்மூடித்தனமாக எதிா்ப்பது முறையல்ல என்றும் கூறினார்.

நாட்டு மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து பிரிவினையைத் தூண்டி வருகிறது. தமிழ்நாடு மக்களின் உணா்வுகளைப் புண்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. ஹெலிகாப்டா் விபத்தில் காலமான முதல் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு தமிழக மக்கள் சாலையோரம் வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தினா். அதற்காக தமிழக மக்களுக்குத் தலைவணங்குகிறேன்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா செயல்பட்ட விதமானது, உலக நாடுகளுக்கே உதாரணமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து எல்லைகளையும் மீறியது. கொரோனா முதல் அலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடித்து வந்தபோது, மும்பை ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் கூடி அப்பாவி மக்களை அச்சுறுத்தினா். புலம்பெயா் தொழிலாளா்களை இக்கட்டான சூழலுக்கு காங்கிரஸ் தள்ளியது என்றும் நரேந்திர மோதி கூறினார்.

முகேஷ் அம்பானி வாங்கிய 13 கோடி ரூபாய் கார்

இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி ரூ.13.14 கோடியில் புதிதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் இது கல்லினன் பெட்ரோல் மாடலாகும். இந்த கார் தெற்கு மும்பை வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஜனவரி 31-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு வெளியான தகவலின்படி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மாடல் காரின் அடிப்படை விலை ரூ.6.95 கோடியாகும்.

12 சிலிண்டரைக் கொண்ட இந்தகாரின் எடை 2,500 கிலோாகும். இது 564 பிஹெச்பி திறனை வெளிப்படுத்தும். இதற்கு பிரத்யேக நம்பர் பிளேட் அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு முறை செலுத்தத் தக்க வரியாக ரூ.20 லட்சத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செலுத்தியுள்ளது. அத்துடன் கூடுதலாக ரூ.40 ஆயிரம் தொகை சாலை பாதுகாப்பு வரியாக செலுத்தப்பட்டுள்ளது. பிரத்தேயக எண் பெறுவதற்கு ரூ.12 லட்சத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செலுத்தியுள்ளது. வாகனத்தின் எண் 0001 என்று முடிவடையும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை- தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் தனியார் பள்ளி சார்பில் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கறிஞர் எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.