நீட் எதிர்ப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது! – சி.விஜயபாஸ்கர் பேச்சு!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அதிமுகவின் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வில் விலக்கு பெற கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நீட் விலக்கிற்கு ஆதரவாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் “மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுபள்ளி மாணவர்களுக்கு கேட்காமலே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. யாருமே கேட்காத சூழலில் மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்ற நிலைபாட்டில் அதிமுக அனைத்து காலகட்டத்திலும் உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.