புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2019 (20:30 IST)

டைட்டானிக் கப்பல் இப்போது எப்படி உள்ளது? - ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஆழ் கடலில் மூழ்கி தேடியபோது, டைட்டானிக்கின் சில பகுதிகள் மறைந்து வருவதை அறிய முடிந்தது.
சுமார் 15 ஆண்டுகளில் முதன்முறையாக டைட்டானிக்கை தேடி கடலில் இறங்கியவர்கள், உடைந்த அந்தக் கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாகக் கூறியுள்ளனர்.
 
சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின்போது, அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.
 
உடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சர்யப்படத் தக்க அளவுக்கு நல்ல நிலையில் உள்ள நிலையில், மற்ற சிறப்பு அமைப்புகள் கடலில் சிதைந்து போயுள்ளன.
 
அதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.
 
ஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் ``அதிர்ச்சிகரமானதாக'' இருந்தன என்று டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார்.
 
``டைட்டானிக் பற்றி ஆர்வம் காட்டுபவர்களுக்கு பிடித்தமானது அதனுடைய கேப்டனின் குளியல் தொட்டி - இப்போது அதைக் காணவில்லை'' என்கிறார் அவர்.
 
``அந்தப் பக்கம் உள்ள கேபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகிறது, அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன. இந்த சிதைவு தொடர்ந்து கொண்டிருக்கப் போகிறது' என்று அவர் தெரிவிக்கிறார்.
 
``டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
வலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.
 
ஆழ்கடலில் அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழும் வகையில் உருவாக்கப்பட்ட டிரிட்டான் நீர்மூழ்கியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
 
ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிக் கிடக்கிறது - கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோ மீட்டர் (370 மைல்கள்) தொலைவில் கடலில் கிடக்கிறது.
 
அந்தக் காலத்தில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட, அந்தப் பயணிகள் கப்பல் 1912ல் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப் பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் 2,200 பேர் மற்றும் கப்பல் பணியாளர்களில், 1,500 க்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்து போனார்கள்.
 
மரியானா மர்மக் கடலில் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர். பசிபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதியில் அவர்கள் சென்றிருக்கின்றனர்.
 
இந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீட்டர் நீளம், 3.7 மீட்டர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் - டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் என்ற - நீர்மூழ்கியில் மேற்கொள்ளப் பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டான் நீர்மூழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
 
600 மீட்டர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைச் சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விஷயம்.
 
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவான கீழ் நீரோட்டமும் இந்த நீர்மூழ்கி பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.
 
டைட்டானிக்கை தேடிய ஆய்வுப் பயணத்தின் வரலாறு
படத்தின் காப்புரிமைPA

 
1912 ஏப்ரல் 10 ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் இருந்து புறப்பட்ட ஆர்.எம்.எஸ். டைட்டானிக்
1985 - டைட்டானிக் உள்ள இடத்தை அமெரிக்க - பிரெஞ்ச் குழுவினர் கண்டறிந்தனர்
 
1986 - கப்பலின் உடைந்த பாகங்களை ஆல்வின் நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்தது
 
1987 - முதலாவது மீட்பு பயணத்தில் டைட்டானிக்கின் 1,800 கலைப் பொருட்கள் சேகரிக்கப் பட்டன.
 
1995 - உடைந்த கப்பலுக்கு ஜேம்ஸ் கேமரூன் பயணம் மேற்கொண்டார் - அப்போது எடுத்த காட்சிகள் அவருடைய டைட்டானிக் திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டன.
 
1998 - முதலாவது சுற்றுலாவாசிகள் அங்கு மூழ்கி பயணம் செய்தனர்
 
1998 - டைட்டானிக் கப்பல் கூட்டின் ஒரு பகுதி மேலே கொண்டு வரப்பட்டது.
 
2005 - இரண்டு வீரர்களைக் கொண்ட நீர்மூழ்கிகள் உடைந்த கப்பலுக்குச் சென்றன
 
2010 - தானியங்கி ரோபோக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்தன
 
2012 - உடைந்த கப்பல் இப்போது யுனெஸ்கோவால் பாதுாகப் பட்டுள்ளது
 
2019 - டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் நீர்மூழ்கி ஐந்து முறை நீர்மூழ்கிப் பயணம் மேற்கொண்டது.
 
நீரில் மூழ்கிய பயணங்களை, பின்னர் தயாரிக்கப்படவுள்ள ஆவணப் படத்துக்காக அட்லாண்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்தாரால் பதிவு செய்யப் பட்டுள்ளன.
 
காட்சிகளைப் படம் எடுப்பதுடன், இந்த ஆய்வுப் பயணத்தில் உள்ள விஞ்ஞானிகள், உடைந்த கப்பலில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
 
உறைய வைக்கும் சூழ்நிலைகளில், கும்மிருட்டான நீரில், அதி திவீரமான அழுத்தத்திலும் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.
 
டைட்டானிக் சிதைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுப் பயணத்தில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானி கிளாரே பிட்ஜ்சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
 
``உடைந்த கப்பலில் நுண்கிருமிகள் உள்ளன. அவை தான் உடைந்த பாகத்தில் உள்ள இரும்பையும் சாப்பிடுகின்றன. அதனால் துருவேற்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன. அது உலோகத்தின் பலவீனமான நிலையாகக் கருதப் படுகிறது'' என்று அந்தப் பெண் விஞ்ஞானி கூறுகறார்.
 
 
1996ல் ஆய்வுப் பயணம் சென்ற போது படம் பிடிக்கப்பட்ட கேப்டனின் குளியல் தொட்டி - இப்போது காணவில்லை.
 
உடைந்த பாகங்களில் துருவேறிய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புகள் - மிகவும் பலவீனமானவையாக இருப்பதால், ஏதும் இடையூறுகள் ஏற்பட்டால் முற்றிலும் நொறுங்கி சரியக் கூடியவையாக உள்ளன.
 
அட்லாண்டிக் ஆழ் கடலில் வெவ்வேறு வகையான உலோகங்கள் எப்படி அரிப்புக்கு ஆட்பட்டிருக்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். டைட்டானிக் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பதை மதிப்பிடுகிறார்கள்.
 
உடைந்த கப்பல் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆழத்துக்குச் சென்று ஆவணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று கிரீன்விச்சில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளித் கூறுகிறார்.
 
``டைட்டானிக் பேரழிவுக்கு சாட்சியாக இப்போது இருப்பது இந்த உடைந்த கப்பல்தான்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
``அப்போது உயிர் தப்பிய அனைவரும் இப்போது காலமாகிவிட்டார்கள். எனவே, உடைந்த பாகங்கள் சொல்வதற்கு ஏதோ தகவல் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்'' என்கிறார் அவர்.