1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:07 IST)

மாதவிடாய் நாட்களில் விடுமுறை: பிகார் மாடலை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்ற முடியவில்லை?

மாதவிடாய் குறித்த கருத்துகளையும், அதுதொடர்பான விவாதங்களையும் பொதுதளங்களில் மேற்கொள்வதற்கு இந்தியா போன்ற நாடுகள் இன்றளவும் தயாராகவில்லை என்றே பெண்ணிய ஆர்வர்கள் கருதுகிறார்கள்.
 
இன்றைய காலகட்டத்திலும் மாதவிடாய் என்ற சொல்லைக் கூட பெண்கள் ரகசியமாகவே உச்சரிக்கின்றனர். மாதவிடாய் நாட்களில் தாங்கள் எதிர்கொள்ளும் வலிகள் குறித்து தங்கள் குடும்பங்களில் உள்ள ஆண்களிடம் கூட வெளிப்படையாக பேசுவதற்கு அவர்கள் தயங்கி வருகிறார்கள் என்ற கருத்து உள்ளது.
 
இப்படியான நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ’இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுப்புகள் அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. ‘பிகார் மாநிலத்தில் 30ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஏன் இதுபோன்ற திட்டங்கள் இன்னும் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
 
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷைலேந்திரா மணி திருப்பதி என்பவர்தான் தற்போது இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவர், "தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் இதுபோன்ற நிலைகள் இத்தனை ஆண்டுகளாக இந்த சமூகத்தால் கவனிக்கப்படாமலே வந்திருக்கிறது. ஆனால் தற்போது இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அடுத்த வாரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. 1912ஆம் ஆண்டு கொச்சினின் (தற்போதைய) எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரிபுனிதுரா பெண்கள் மேல்நிலை பள்ளி, இறுதியாண்டு தேர்வின்போது மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுப்பு எடுத்துக்கொண்டு பின்னொரு நாளில் அந்த தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்பின்னர் பிகார் மாநில அரசு மாதவிடாய் விடுப்பை அமல்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
 
பெண்களின் புரட்சியால் பிகாரில் அறிவிக்கப்பட்ட திட்டம்
1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிகாரில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசின் வரையறையின்படி மாநில அரசு ஆண், பெண் ஊதிய விகிதத்தில் பல முரண்பாடுகளை அமல்படுத்தியிருந்தது. அந்த ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநகராட்சியில் வேலை செய்பவர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
 
போராட்டத்தின் துவக்ககாலத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் தயக்கம் காட்டியுள்ளனர். ஆனால் அடுத்த சில நாட்களில் பிகாரின் பெண் இயக்கங்களின் முயற்சியால் ஆசிரியர்கள், செவிலியர்கள் என பல பெண்கள் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக இளம்பெண்களின் பங்களிப்பு இந்த போராட்டத்தில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களின் மற்ற உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். எனவே அந்த போராட்ட களத்தில் பெண்களின் அனைத்து பிரச்னைகளையும் குறிக்கும் வகையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது.
அப்போதுதான் ’தங்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களிடமிருந்து முதன்முதலாக கோரிக்கை எழுந்துள்ளது. சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த போராட்டம் பின்னாளில் ஒரு இயக்கமாக மாறியது. இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வந்த காலகட்டத்தில் பிகாரில் லாலு பிராசாத் யாதவின் ஆட்சி நடைபெற்று வந்தது.
 
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்குவது குறித்தான பேச்சுவார்த்தை துவங்கினாலும், இந்த போராட்டங்களுக்கான முழுமையான தீர்வுகள் வந்தபாடில்லை. அதன்பின்னர் போராட்டக்காரர்களுடன் லாலுபிரசாத் அரசு பல ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. இரவு 8 மணிக்கு துவங்கும் கூட்டம் நள்ளிரவு 2மணிவரைகூட நடைபெற்று வந்ததாக போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்கள் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தனர்.
 
அப்படி ஒருநாள் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தபோது, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் லாலுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு 5 நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த லாலுபிரசாத் யாதவ் பின்னர், ‘3 நாட்கள் முடியாது , 2 நாட்கள் வேண்டுமானால் கொடுக்கலாம்’ என்று ஒப்புதல் அளித்துள்ளார்.
 
அதன்பின்னர் பிகார் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மாதத்தில் 2 சிறப்பு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்றளவும் அமலில் இருந்து வருகிறது.
 
பிகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பிகார் பெற்றது.
 
மாதாவிடாய் நாட்களில் விடுமுறை அவசியமா?
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது அவசியமான ஒன்றுதான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பாலகுமாரி.
 
 
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘ மாதவிடாயின்போது ஒவ்வொரு பெண்ணின் உடலும் ஒவ்வொரு மாதிரியாக எதிர்வினை ஆற்றும். 30 சதவீத பெண்கள் தங்களது மாதவிடாய் நாட்களின்போது கடுமையான வலிகளை எதிர்கொள்கின்றனர். அதேபோல் மாதவிடாயின்போது எந்தவொரு வலியோ, அசௌகரியமோ ஏற்படாத பெண்களும் உள்ளனர். இன்னும் சிலருக்கு பெரிதாக வயிற்று வலி ஏற்படாது. ஆனால் உடல்வலி ஏற்படுவது, வயிறு உப்பசமாக இருப்பது, உளவியல் ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொள்வது போன்ற பல தொந்தரவுகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் இரட்டை சுமையாய் அமைகிறது."
 
"எனவே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவியாய் அமையும். அதேசமயம், இந்த விடுப்பு அளிக்கும்பட்சத்தில் பெண்கள் அதனை முறையாக பயன்படுத்துவார்களா என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த விடுமுறையை உண்மையிலேயே மாதவிடாய் நாட்களுக்குதான் பயன்படுத்துகிறார்களா அல்லது வேறு காரணங்களுக்காக எடுத்து கொள்கிறார்களா என்பதை யாராலும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. ஒருவேளை இந்த திட்டம் விவாதத்திற்கு வரும்பட்சத்தில் இதுபோன்ற விஷயங்களையும் கவனத்தில் கொண்டு சட்ட வல்லுநர்கள் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்" என்று கூறுகிறார் மருத்துவர் பாலகுமாரி.
 
தமிழ்நாட்டில் சாத்தியப்படுமா மாதவிடாய் விடுப்பு ?
"தமிழ்நாட்டில் ஏற்கனவே பெண்களுக்காக பேறுகாலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது, ஓய்வூதிய கால பென்சன் தொகை வழங்குதல் போன்ற திட்டங்கள் அமலில் இருக்கின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் விடுப்பு வேண்டும் என்பது போன்ற விவாதங்கள் இதுவரை எழுந்ததேயில்லை" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
 
மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது,"நீண்ட நாட்களாக பெண்களுக்கு சரிசமமான வேலை வாய்ப்புகள் வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கான சூழலே இன்னும் அமையாத நிலையில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வேண்டும் என்று நாம் கேட்கும்போது முதலாளிகளும் , பல நிறுவனத்தை சேர்ந்தவர்களும் அதற்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது` என்கிறார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு தேவையா என்று கேட்டால் கட்டாயம் தேவை என்றுதான் சொல்லமுடியும். அதேசமயத்தில் ஒரு நிறுவனம் என்பது எல்லோருக்குமான தேவைகளை உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியான ஒரு முன்மாதிரி நிலையை இன்னும் நாம் அடையவில்லை. பெண்களுக்கு தேவையான எந்தவொரு சலுகை குறித்து பேசும்போதும் தங்களது உற்பத்தி பாதிக்கப்படுவதாகவே முதலாளி வர்க்கத்தினர் கருதுகின்றனர். எனவே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வேண்டும் என்ற பேச்சுகள் பொதுதளத்திற்கு வரும்போது., முதலாளி வர்க்கத்தினர் இதற்குதான் நாங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை" என்பது போன்ற வாதங்களை முன்வைக்கலாம்.
 
"அதேபோல் எல்லா பெண்களுக்கும் இதுபோன்ற விடுப்புகள் எடுக்க வேண்டும் என்ற தேவை இருக்காது. உண்மையிலேயே வலியால் பாதிக்கப்படும் பெண்கள் மட்டும் இந்த சலுகையை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே இதுபோன்ற விவாதங்களை முன்னெடுக்கும்போது மகப்பேறு மருத்துவர்களும், சட்ட வல்லுநர்களும், உளவியல் ஆய்வாளர்களும் கலந்தாலோசித்து மிகவும் சரியான முறையில் இந்த திட்டத்தை வடிவமைத்து அரசிடம் எடுத்துச்செல்ல வேண்டும்" என்கிறார் அருள் மொழி.
 
மூத்த அண்ணன் தோரணையில் செயல்படும் அரசியல்வாதிகள்
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை போன்ற அணுகுமுறையை எஸ்.பி.ஐ. வங்கி மேற்கொண்டது. அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் மற்றும் பல செயல்பாட்டாளர்களும் இதனை கண்டித்து கடிதங்கள் எழுதி அழுத்தம் கொடுத்த பின்னர் எஸ்.பி.ஐ வங்கி தனது தவறை ஒப்புக்கொண்டு அந்த நிலையில் இருந்து பின்வாங்கியது. நமது நாட்டின் உண்மையான சூழல் இப்படியிருக்கும்போது இவர்களிடம் எப்படி நம்மால் மாதவிடாய் கால விடுப்புகள் குறித்து பேச முடியும் என ஆவேசப்படுகிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண் உரிமை செயற்பாட்டாளர் கவிதா கஜேந்திரன்.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நமது நாட்டில் பெண்களை நேர்காணல் செய்யும் நிறுவனங்கள் அவர்களின் திருமணம் தொடர்பான கேள்விகளை கேட்கும் நிலை இன்றும் இருக்கிறது. இந்த கேள்வியை யாரும் ஆண்களிடம் கேட்பதில்லை. இனப்பெருக்கம் என்ற ஒன்றை பெண்களால்தான் மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படை புரிதல் எவரிடமும் இல்லை. அதனால்தான் நமது அரசியல்வாதிகள் பெண்களின் நலத்திட்டங்கள் தொடர்பாக பேசும்போதும், சலுகைகள் குறித்து அறிவிக்கும்போதும் மூத்த அண்ணன் தோரணையிலேயே செயல்படுகின்றனர். தமிழ்நாடு எத்தனையோ வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று நாம் கூறினாலும் கூட பெண்களின் நலனை கையாள்வதில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது என்பதுதான் உண்மை" என்கிறார் கவிதா.
 
மேலும், "ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கு ஏற்படும்போது அவர்கள் அனுபவிக்கும் வலிகளை இந்த பொதுச்சமூகமானது மிகவும் இயல்பான ஒரு விஷயமாக மாற்றி வைத்திருக்கிறது. பெண்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட கேட்பதற்கு வழி இல்லாமல் இந்த முதலாளித்துவ சமூகம் அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறது. இப்படியான சமூகத்திடம் பெண்கள் மாதவிடாய் விடுப்பு கேட்டால், வேலையைவிட்டு சென்றுவிடுங்கள் என்று கூறுவார்கள். "
 
"இதனால்தான் தமிழகத்தில் இதுவரை இப்படியான ஒரு விவாதம் எழுவதற்கான வாய்ப்பே ஏற்படவில்லை. அதேபோல் ஏற்கனவே பெண்களுக்காக இருக்கும் நலத்திட்டங்களை அமல்படுத்துவதிலேயே இங்கே நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பாலின சமத்துவத்தை சரியாக கையாளும் வகையில் அரசுகள் அமைந்தால்தான் இதுபோன்ற நிலைகள் மாறும்" என்று கூறுகிறார் கவிதா கஜேந்திரன்.
 
பலமுறை கழிவறைக்கு செல்லும் பெண்கள்
 
மாதவிடாயின்போது எனக்கு பெரிதாக எந்த வலியும் ஏற்பட்டதில்லை. ஆனால் என்னுடன் இருக்கும் பெண்கள் பலர் வலியால் துடிப்பதை பார்த்திருக்கிறேன் என்கிறார் சென்னையை சேர்ந்த ஐ.டி.ஊழியர் இலக்கியா.
 
பிபிசி தமிழிடம் பேசிய அவர் "வேலை நாட்களில் மாதவிடாய் ஏற்படும்போது வலிகள் ஏற்படுவது, அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படுவது மற்றும் அடிக்கடி நாப்கின் மாற்றுவது போன்ற பல விஷயங்களை பெண்கள் கையாளவேண்டும். ஆனால் இது எல்லாவற்றையும் விட மிகவும் சிரமமானது அந்த நாட்களில் பயணம் மேற்கொள்வதுதான். சிலர் பேருந்துகளிலும், ரயில்களிலும் வருவார்கள், சிலர் ஷேர் ஆட்டோகளிலும் சிலர் நடந்தும் வருவார்கள். உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் தங்களது உடையில் கறை எதுவும் படுகிறதா என்பதை பதற்றத்துடன் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்."
 
"சிலர் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டியதிருக்கும். மாதவிடாய் வலிகளை தாங்கமுடியாத எத்தனையோ பெண்கள் அதை வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டு, வேறு காரணங்கள் கூறி loss of pay-ல் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள்.இப்படி எத்தனையோ சங்கடங்களை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். எனவே மாதவிடாய் கால விடுமுறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் எங்களை போன்ற உழைக்கும் வர்க்க பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும்" என்று கூறுகிறார் இலக்கியா.