1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:10 IST)

நான் துணை ஜனாதிபதியா? நிதீஷ் குமார் பலே காமெடி என பதிலடி!

நான் துணை ஜனாதிபதியாக ஆக விருப்பம் எதுவும் கிடையாது என நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

 
சமீபத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அழைத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி கருத்து கூறுகையில் துணை குடியரசு தலைவர் பதவி கிடைக்கும் என நிதிஷ்குமார் எதிர்பார்ப்பதாகவும், அதற்கு பாஜக மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 முறை பிரதமர் மோடி நிதீஷ் குமாரை சந்தித்ததாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அமித்ஷாவை சந்தித்த நிதிஷ்குமார், எந்த பிரச்சனையும் இல்லை என உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தன் மீதான இந்த கருத்துக்கு பதிலளித்துள்ளார் நிதிஷ்குமார். அவர் கூறியதாவது, நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று சுஷில் மோடி கூறியுள்ளார். என்ன ஒரு காமெடி. எனக்கு அதுபோன்ற விருப்பம் எதுவும் கிடையாது.

அவர்களுடைய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாங்கள் எப்படி ஆதரவளித்தோம் என்று அவர்கள் மறந்து விட்டார்களா? தேர்தல் முடியட்டும் என நாங்கள் காத்திருந்தோம். அதன்பின்பு எங்களது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஒரு பதவி கிடைக்கும் என்றால், என்னை பற்றி எதுவேண்டுமென்றாலும் அவர்கள் பேசி கொள்ளட்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் 14-வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.