பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.
பனிப்பொழிவு
தலைநகர் இஸ்லமாபாத்திற்கு வடக்கே அமைந்துள்ள மலை நகரம் தான், முர்ரே. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவைக் காண கடந்த சில நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கார்கள் முர்ரேக்குள் நுழைந்தன. இதனால், நகருக்குள்ளும் வெளியே செல்லும் சாலைகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது ஆறு பேர் தங்கள் கார்களில் உறைந்து இறந்தனர். ஆனால் மற்றவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். புகையை உள்ளிழுத்த பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
தற்போது அந்தப் பகுதி பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அங்கிருந்து விலகியே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
"மக்கள் பயங்கரமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்," என்று கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவே நகரத்தில் சிக்கியிருக்கும், உஸ்மான் அப்பாசி என்ற சுற்றுலாப் பயணி ஏ.எஃப்.பி செய்தியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
"சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, உள்ளூர் மக்களும் எரிவாயு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்," என்று அவர் கூறியுள்ளார்.
"15 முதல் 20 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் முர்ரேயில் குவிந்தனர். இதுவொரு பெரிய நெருக்கடியை உருவாக்கியது," என்று ரஷீத் காணொளி தகவலில் கூறினார்.
பிரதமர் இம்ரான் கான், சுற்றுலாப் பயணிகளின் இறப்பு குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
"இதுபோன்ற துயரங்களை தடுப்பதை உறுதி செய்வதற்காக, விசாரணைக்கு உத்தரவிட்டு வலுவான விதிமுறைகளை வகுத்துள்ளேன்," என்று இம்ரான் கான் ஒரு டிவீட்டில் கூறியுள்ளார்.
முர்ரே 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் காலனித்துவ துருப்புகளுக்கான மருத்துவ தளமாகக் கட்டப்பட்டது.
என்ன நடந்தது?
"மலைகளின் ராணி," என்று அழைக்கப்படும், மலைப்பகுதி நகரமான முர்ரே குளிர்காலத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும். நூற்றுக்கணக்கான வாகனங்களால் அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலைகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் பனிப்பொழிவின் கீழ் சாலையில் இரவைக் கழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு இஸ்லமாபாத்-முர்ரே நெடுஞ்சாலையை மூடியுள்ளது. அதோடு, முர்ரே மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் குடிமைப்பணி நிர்வாகத்திற்கு உதவ ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.