ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (09:04 IST)

அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் இதையெல்லாமா செய்தது?

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானின் பிடியில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட விங் கம்மேண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் விதமாக ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியுள்ளது என்று சமூக ஊடகத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
 
"போர் விமானி அபிநந்தனை ஃபேஸ்புக் கௌரவிக்கிறது; நீங்கள் 'அபிநந்தன்' என்று தட்டச்சு செய்தால், அந்த சொல் ஆரெஞ்சு நிறத்தில் மாறி பின்னர், பலூனாக வெடிக்கிறது" என்று இந்த பதிவுகள் தெரிவிக்கின்றன.
 
அபிநந்தன் என்கிற மராத்தி (अभिनंदन) மற்றும் குஜராத்தி (અભિનંદન) மொழிகளிலுள்ள சொற்கள் இது போன்று நிறம் மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு கூறும் தகவல்கள் 'ஷேர்சேட்' மற்றும் 'வாட்ஸ்அப்' குழுக்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன.
 
ஆனால் அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய சிறப்பம்சத்தை உருவாக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் உண்மையல்ல. விங் கமாண்டர் அபிநந்தன் தொடர்பானதும் அல்ல.
 
சமீபத்தில் அபிநந்தனின் பெயரில் பல போலிச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஃபேக்புக்கில் ஏற்கெனவே உள்ள இந்த சிறப்பம்சம் விங் கமாண்டர் அபிநந்தனுக்காக உருவாக்கப்பட்டதாக கூறுவது தவறானது.
 
"டெக்ஸ்ட் டிலைட்" ("Text Delight") என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு அம்சத்தை ஃபேஸ்புக் 2017ம் ஆண்டு தொடங்கியது. அது முதல் இது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
 
2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டியின்போது அனிமேஷன் ஒன்றை ஃபேஸ்புக் வெளியிட்டது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துகையில், 15க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பல சொற்களையும், சொற்றொடர்களையும் எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக், அவற்றை தட்டச்சு செய்கிறபோது, அந்த எழுத்தின் தோற்றம் பிற எழுத்துகளைவிடப் பெரிதாகவும், நிறம் மாறும்படியும் செய்தது. இந்த சொற்களை நாம் சொடுக்கினால், அனிமேஷனும் இடம்பெறும்.
 
எடுத்துக்காட்டாக தமிழில் 'வாழ்த்துகள்' என்று டைப் செய்தால் அந்த சொல்லின் நிறம் மாறும். கிளிக் செய்தவுடன் பலூன் வெடித்துச் சிதறி கொண்டாட்டத்தைக் காட்டும் வகையில் ஒரு அனிமேஷன் தோன்றும்.
 
2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டியின்போது ஒரு கால்பந்து அணியை உற்சாகமூட்டும் விதமாக, ரசிகர்கள் "கோல்" (GOAL) என்று தட்டச்சு செய்தால், மகிழ்சியோடு கைகள் நடனமாடும் அனிமேஷனை திரையில் பார்க்கலாம்.
 
ஃபேஸ்புக்கில் "சிறந்த நேரம்" என் பொருள்படும் விதமாக "Great Time" என்று தட்டச்சு செய்தால், மலர்களோடு தோன்றும் கைகளின் அன்மேஷனை நீங்கள் காணலாம்.
 
இதுபோல, வரவேற்கிறோம் (Welcome), பாராட்டுக்கள் (Congratulations), வாழ்த்துக்கள் (Best wishes) போன்ற சொற்களுக்கும் பல அனிமேஷன்கள் உள்ளன.
 
"அபிநந்தன்" என்கிற சொல்லும் ஃபேஸ்புக்கின் இந்த அம்சத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சொல்லாகும்.
 
ஹிந்தி மொழியில் "அபிநந்தன்" என்று சொன்னால் பாராட்டுக்கள் (Congratulations) என்று பொருள்.
 
எனவே, "அபிநந்தன்" என்று தட்டச்சு செய்தவுடன் இந்த சொல்லும் நிறம் மாறி பலூன்கள் உடையும். இதற்கு டெக்ஸ்ட் டிலைட் (Text Delight) அம்சத்தில் இந்த சொல் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருப்பதே காரணமாகும்.
 
அபிநந்தனுக்காக என்ற இந்திய விமானப்படையின் விங் கமாண்டருக்காக, தனிப்பட்ட முறையில் ஃபேஸ்புக் இந்த சிறப்பு அம்சத்தை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை.
 
மராத்தி (अभिनंदन) மற்றும் குஜராத்தி (અભિનંદન) மொழிகளிலும் அபிநந்தன் என்று தட்டச்சு செய்தால் நிறம் மாறியதற்கு அந்த மொழிகளிலும் இந்த சொல் டெக்ஸ்ட் டிலைட் (Text Delight) அம்சத்தில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாகும்.