அபிநந்தன் பிடிபடவில்லை; மோடிதான் அனுப்பி வைத்தார் – நெட்டிசன்ஸ் ரவுசு !
பாகிஸ்தான் விமானத்திற்கெதிராக எதிர்த்தாக்குதலின் போது பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தனைப் பற்றி ஏராளமான வதந்திகள் இணையத்தில் உலாவர ஆரம்பித்துள்ளன.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் இந்தியாவிற்கு வருவதற்குள்ளாகவே அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் அவற்றில் வழக்கம் போல சில உண்மையில்லாதத் தகவல்கள் சேர்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலாவர ஆரம்பித்தன. அவற்றில் ஒன்றாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் செய்தி உங்கள் பார்வைக்கு
'அபிநந்தன் பிடிபடவில்லை, திட்டமிட்டு அவரே பிடிபடுவது போல் நடித்தார். காரணம், நமது பாரத பிரதமர் ஸ்ரீ மோடிஜியின் நேரடி கண்காணிப்பில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில்,புனேயை சேர்ந்த "ஸ்கை நெட்" நிறுவனம் கண்டுபிடித்த "ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்".
இதன் மூலம் இதை அணிந்து இருக்கும் நபர், தனது கண் பார்க்கும் விஷயத்தை வீடியோ படம் எடுத்து நேராக உளவு சாட்டிலைட் மூலம் அதை அனுப்பியும் விட முடியும்.’
இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பிப் பகிர்ந்து வரும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.