Ghost Stories - விமர்சனம்

papiksha| Last Updated: சனி, 4 ஜனவரி 2020 (14:35 IST)
இயக்கம்: ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோகர், அனுராக் காஷ்யப்.
நெட்ஃப்ளிக்ஸ் இதற்கு முன்பாக 2018ல் ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோகர், அனுராக் காஷ்யப் ஆகிய நான்கு பேரையும் வைத்து Lust Storiesஐ எடுத்து வெளியிட்டது. பெரும் கவனத்தை ஈர்த்த இந்தத் தொடர், பார்த்தவர்களிடம் அவ்வளவு சிறப்பான வரவேற்பைப் பெற்றதாகச் சொல்ல முடியாது.
 
இப்போது இந்த நான்கு பேரும் மீண்டும் இணைந்து Ghost Storiesஐ இயக்கியுள்ளனர். இந்த நான்கு பேரில் யாருமே இதற்கு முன்பாக பேய்க் கதைகளை இயக்கியவர்கள் அல்ல. 144 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தம் நான்கு கதைகள். ஆனால், தலைப்பிலேயே பிரச்சனை இருக்கிறது. பேய்க் கதைகள் எனப் பெயர் வைத்திருந்தாலும் கரண் ஜோகர் இயக்கியுள்ள கதையில் மட்டும்தான் பேய் வருகிறது. இப்படியாக, டைட்டிலிலேயே பேய்க் கதை ரசிகர்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.
 
இந்தத் தொடரில் முதல் கதையை, ஜோயா அக்தர் இயக்கியிருக்கிறார். சமீரா (c) ஒரு இளம் நர்ஸ். பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்கும் ஒரு முதிய பெண்மணியைப் (சுரேகா சிக்ரி)பார்த்துக் கொள்வதற்காக வருகிறாள் சமீரா. தன் மகன் பக்கத்து அறையில் தூங்குவதாகச் சொல்கிறாள் முதியவள். இருந்தபோதும் அப்படி யாரும் அந்த வீட்டில் இல்லை. ஆனால், இரவில் யாரோ உலவுவது போலவே இருக்கிறது. சமீராவைப் பார்க்கவரும் அவளது காதலனும் (ஏற்கனவே திருமணமானவன்) இதில் பயந்து போய் வெளியேறிவிடுகிறான்.
 
இந்தக் கதை சுவாரஸ்யமாகத் துவங்கினாலும் பாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பதால் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், சமீராவும் படுக்கையில் கிடக்கும் முதிய பெண்மணியும் எப்போதும் தம்மை முழுமையாகக் கவனிக்காத ஒருவருக்காக ஏங்குகிறார்கள் என்பது பல இடங்களில் குறிப்பால் உணர்த்தப்படுவது நன்றாக இருக்கிறது. சமீராவாக வரும் ஜானவி கபூரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆனாலும் ஏமாற்றமளிக்கும் குறும்படம்.
அடுத்த படம் அனுராக் காஷ்யபினுடையது. இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டனில் நடப்பது போல் இருக்கிறது கதை. இறந்துபோன தன் சகோதரியின் குழந்தையை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் பெண் (சோபிதா துலிபலா) கர்ப்பமடைகிறாள். ஆனால், அது சகோதரியின் குழந்தைக்கு (ஷசாரி ப்ராஸ்) சுத்தமாகப் பிடிக்கவில்லை. மேலும், தன் கரு கலைந்துவிடுமோ என்ற பயமும் அந்தப் பெண்ணை ஆட்டிப்படைக்கிறது. இதனால் நடக்கும் விபரீதங்கள் மீதக் கதை.
 
இந்த நான்கு படங்களிலேயே மிக சுமாரான எடுக்கப்பட்ட படம் இதுதான். சைக்கோ த்ரில்லரா, அமானுஷ்ய கதையா என்ற குழப்பத்திலேயே படம் முடிந்து விடுகிறது. 80களில் வெளியான ஈவில் டெட் பாணியில், மிகக் கோரமான, அருவெறுப்பூட்டும் காட்சிகளோடு இந்தக் கதை நிறைவடைகிறது. மர்மம், திகில், என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு எதையும் ஏற்படுத்தாமல், இந்தத் தொடரை இதற்கு மேலும் பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கதை.
 
மூன்றாவது கதை, திபாகர் பேனர்ஜி இயக்கியது. பீஸ்கரா என்ற கிராமத்திற்கு ஒரு நபர் (சுகந்த் கோயல்) வருகிறார். ஆனால், அந்த கிராமத்தில் ஒரு சிறுவன் (ஆதித்யா ஷெட்டி), சிறுமியை (இவா அமீத் பர்தேசி) தவிர யாரையும் காணவில்லை. சௌகாரா என்ற பெயரில் பக்கத்தில் ஒரு பெரிய கிராமம் இருக்கிறது.
 
திரைத்துறையில் பெண்கள் நுழைவதை தடுப்பது எது? - சில்லுக் கருப்பட்டி இயக்குநர் நேர்காணல்
பொன்னியின் செல்வன்: வைரமுத்து இல்லையா? யார் யார் பணியாற்றுகிறார்கள்?
அதைச் சேர்ந்தவர்கள் மனித மாமிசத்தைத் தின்கிறார்கள். அவர்களால், இந்த கிராம மக்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சிறுவர்கள் சொல்கின்றனர். சிறுமியின் தந்தையும் (குல்ஷன் தேவய்யா)இப்படி மாமிசத்தைத் தின்று, அரக்கனாகிவிட்டார். இந்த மனித மாமிசத்தை சாப்பிடும் 'ஜோம்பி'களிடமிருந்து இவர்களால் தப்ப முடிந்ததா என்பதுதான் கதை.
 
இந்தத் தொடரிலேயே சற்று உருப்படியான கதை இதுதான். இந்தக் கதையைப் பார்க்கும்போது 'ஜோம்பி' படங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், நகர்மயமாக்கம், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட அரசியல் கருத்துகளோடும் இந்தப் படத்தை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது கதை. மேலும், தாங்கள் விரும்பியதுதான் நடக்க வேண்டும், உயிரோடு இருக்க வேண்டுமானால், தாம் சொல்வதைச் செய்யவேண்டும் என்ற திணிப்பு எங்கே போய் முடியுமெனக் காட்டுகிறது படம். அந்த வகையில் குறிப்பிடத்தக்க கதை இது.
 
நான்காவது கதை, கரண் ஜோஹர் இயக்கியது. இராவுக்கும் (மிருனாள் தாகூர்) பணக்கார இளைஞனான த்ருவுக்கும் (அவினாஷ் திவாரி) கல்யாணம் ஆகிறது. ஆனால், முதல் இரவிலேயே கண்ணுக்குத் தெரியாத தன் பாட்டியோடு த்ருவ் பேசுவதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள் இரா. பிறகுதான் பாட்டி எப்படி இறந்து பேயாக உலவுகிறாள் என்பது தெரியவருகிறது. அந்த மரணத்திற்கும் அங்கே வேலை பார்க்கும் பெண்ணுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
 
இந்த நான்கு கதைகளிலேயே பேய் வரும் ஒரே கதை இதுதான். ஆனால், எந்த வித திகிலையோ, எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தாமல் நாம் ஏற்கனவே பல பேய்ப் படங்களில் பார்த்த படுசுமாரான காட்சிகளோடு கடந்து போகிறது இந்தக் கதை. தவிர, கதையின் துவக்கத்தில் கரண் ஜோஹரின் பிற குடும்பக் கதை திரைப்படங்களின் சாயலும் தென்படுவதால், நாம் ஒரு திகில் படம் பார்க்கிறோம் என்ற எண்ணமே மறந்துவிடுகிறது.
 
ஒரு வகையில் பார்த்தால், Lust Storiesஐவிட மிக சுமாரான கதைகளின், படங்களின் தொகுப்பு இது.

இதில் மேலும் படிக்கவும் :