ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:13 IST)

நுரை தள்ளிய மெரினா கடற்கரை - தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட நுரையில் விளையாடும் சிறுவர்கள்

மெரினா கடற்கரையில் நீர் மாசினால் ஏற்பட்ட நுரை குறித்து பிபிசியில் வெளியான செய்தியின் அடிப்படையில், ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டுமென தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத் துவக்கத்தில் சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில் பெரிய அளவில் நுரை தென்பட்டது. கரையோர கடல்நீரிலும் மணற் பகுதியிலும் இந்த நுரை படிந்திருந்தது. கழிவுநீர் ஆற்றில் கலந்து, அந்த நீர் கடலில் கலந்ததால் இந்த நுரை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக பிபிசி ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தது.

பிபிசி வெளியிட்ட இந்த வீடியோவைப் பார்த்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல்செய்யும்படி மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் கூறியது.


இதன்படி இந்த அமைப்புகளின் கூட்டுக் குழு, அறிக்கை ஒன்றை பிப்ரவரி ஆறாம் தேதியன்று பசுமைத் தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நவம்பர் 29ஆம் தேதிவாக்கில் இந்த நுரை ஏற்பட்டதென்றும் அதற்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

"முதலாவதாக, பருவமழையால் ஆறுகளில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் அடியில் கிடந்த சகதி மேலெழும்பி நீரில் கலந்து இதுபோன்ற நுரை ஏற்பட்டிருக்கிறது. கரை ஒதுங்கிய குப்பைகளே இதற்கு ஆதாரம்.

நுரை தள்ளும் மெரினா கடற்கரை; அச்சத்தில் மக்கள் - காரணம் என்ன?

இரண்டாவதாக, சென்னை ரிவர் ரெஸ்டெரேஷன் ட்ரஸ்ட் என்ற அமைப்பு அடையாறு ஆற்றை தூர்வாரி வருகிறது. இதனால் ஆற்றடி படிமங்கள் கடலைச் சென்றடைந்து நுரை ஏற்பட்டிருக்கலாம்.

நீரை ஆய்வுசெய்து பார்த்தபோது, நுரை ஏற்பட்ட தினத்தன்று, நீரின் தரத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது. அதில் மழை நீரும் கழிவு நீரும் கலந்திருந்தது தெரியவந்தது. மழைக்காலத்தில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத நீர் வெளியேறியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது, நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் பல்லாவரத்தில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகளுக்கான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மழைக் காலங்களில் கண்காணிக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் Flow meterஐ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தம் அலுவலகத்திலிருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

அடையாறு நதியை தூர்வாரிவரும் சென்னை ரிவர் ரெஸ்டொரேஷன் ட்ரஸ்ட், நீர் மாசு படுவதைத் தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவு நீருக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து ஆற்றில் கலக்காமல் தடுத்தல், நதியை அகலப்படுத்தி, ஆழப்படுத்துதல் ஆகிய ஆலோசனைகளைத் தந்திருக்கிறது."

இந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், மாசு எங்கேயிருந்து ஏற்படுகிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ரகசியமாக கழிவுநீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள், அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.