வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (10:04 IST)

மும்பையிலும் திரண்டனர் விவசாயிகள்: மகாராஷ்டிரம் முழுவதிலும் இருந்து பேரணியாக வந்தனர்

டெல்லி விவசாயிகள் போராட்டம் தற்போது இந்தியாவின் இன்னொரு மாநகரமான மும்பையிலும் எதிரொலிக்கிறது.
 
இந்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.
 
இதில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில், ஒப்பீட்டளவில் ஒரு தென் மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் மும்பையில் இன்று கூடுகின்றனர்.
 
இதற்காக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாக மும்பை நோக்கி வருகின்றனர்.
 
ஜனவரி 23-ம் தேதி நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி ஒரு விவசாயிகளின் வாகனப் பேரணி தொடங்கியது.
 
இதில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.
 
இவர்கள் அனைவரும் இன்று இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பை ஆசாத் மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். பிறகு ஆளுநர் மாளிகைக்கு சென்று மனு கொடுக்கப்படும்.
 
இதில் மாநிலத்தின் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அமைச்சர்கள் பாலாசஹிப் தொராட், சுற்றுலா அமைச்சர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்கிறது பிபிசி மராத்தி சேவை.
 
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் இயக்கம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஜனவரி 23 முதல் 26 வரையில் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணிகளை நடத்தும்படி அறைகூவல் விடுத்திருந்தது.
 
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் 100 விவசாயிகள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து 'சம்யுக்த ஷேத்காரி காம்கர் மோர்ச்சா' என்ற இயக்கத்தை ஜனவரி 12ம் தேதி உருவாக்கின.
 
இந்த இயக்கமே இப்போது மும்பையில் நடைபெறும் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
 
இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் செய்யும் வகையில் மத்திய அரசு ஒரு சட்டம் நிறைவேற்றவேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள்.
 
இந்தப் போராட்டத்தை ஒட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் போலீஸ் கண்காணிப்பு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.