வட சென்னையில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தால் ஏற்பட்ட மாசுபாட்டுக்காக, பலமுறை அந்த நிலையம் தண்டத்தொகை செலுத்தியதாகவும் அதை முறையாக செலவிட்டிருந்தால், மாசுபாட்டையாவது சரி செய்திருக்கலாம் என்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்டத்தொகையை அரசின் நிதியில் இருந்து செலவிடுவதற்கு பதிலாக, பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளின் சொந்த பணத்தில் செலவழித்தால்தான் மாசுபாடு குறையும் என்கின்றனர் எண்ணூர் மீனவர்கள். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
எண்ணூரில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தின் கழிவுகள் வெளிப்பகுதியில் கொட்டப்படுவதாகவும், அதனால் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எண்ணூர் மீனவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அனல் மின் நிலையத்தால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டது.
குறிப்பாக, அனல் மின் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யாத நிலங்களை, தமிழ்நாடு சதுப்புநில இயக்கத்தின் கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அனுமதி பெறாமல் இயங்கும் அனல் மின் நிலைய பகுதிகள்
தமிழ்நாட்டில் 100 சதுப்புநிலங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக தமிழக அரசின் சதுப்புநில இயக்கம் செயல்பட்டு வருகிறது..
மேலும், அனல் மின் நிலையத்தின் சில பகுதிகள் தேவையான அனுமதிகளைக் கூட பெறாமல் இயங்குவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமீறல்கள் மீதும் தீவிர நடவடிக்கை தேவை என்று தெரிவித்தனர்.
அரசு என்ன சொல்கிறது?
அனல் மின் நிலையத்தால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள மாசுபாடு தொடர்பான இந்த வழக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறுகிறார்.
மேலும், ''எண்ணூர் அனல்மின் நிலையத்தின் பாதிப்புகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அவர்களுக்கு கடுமையான அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை அபராதத்துக்காக செலவிட்ட தொகையை சுற்றுசூழலை பாதுகாப்பதற்காக அவர்கள் செலவிட்டிருந்தால் கூட இந்த மாசுபாட்டை சரி செய்திருக்கலாம்,''என்கிறார் அமைச்சர் மெய்யநாதன்.
அத்துடன், சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
"தற்போது, அனல்மின் நிலையத்தில் இருந்து கழிவுகள் வெளியேறும் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய் வேண்டும். சேதமடைந்த குழாய்கள் மாற்றப்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். தமிழக மின்சார வாரியத்திடம் மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு வலியுறுத்தியுள்ளோம்,'' என்கிறார் அமைச்சர்.
பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்ட உத்தரவில், எண்ணூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள் குறைகளை மாவட்ட நிர்வாகம் கேட்டறியவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த குறைகள் மீதான நடவடிக்கை எடுப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழு ஒன்று காலாண்டுக்கு ஒருமுறை கூடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் பகுதி மீனவரான ஸ்ரீனிவாசன் தொடர்ந்து மாசுபாட்டிற்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு குறித்து அவரிடம் பேசியபோது, எண்ணூர் பகுதியில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு என்பது தொடர்கதையாக இருப்பதாகவே கூறுகிறார்.
அடுத்த தலைமுறையாவது
''மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த பிரச்னையை சரியாக கையாளவில்லை என்பதுதான் உண்மை. இத்தனை ஆண்டுகளாக எப்படி பல விதிகளை மீறி ஒரு நிறுவனம் செயல்பட முடிகிறது? நாங்கள் பலமுறை , இந்த பிரச்னையை மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் துறை, மின்சாரத் துறை அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தோம். ஆனால், யாரும் எங்களின் உயிர்களை பற்றி கவலைப்படவில்லை.
நாங்கள் கடந்த ஆண்டு முதலமைச்சரிடம் முறையிட்டோம். அனல்மின் நிலையத்தின் நிலக்கரி சாம்பல் மாசுபாட்டாலும், சாலைகள், குழாய்கள், அனல்மின் நிலையங்களுக்கான அடிக்கட்டுமானங்கள், நிலக்கரி தளங்கள், துறைமுகங்கள் காரணமாக நாங்கள் நிறைய இழந்துவிட்டோம். எங்கள் காலத்தில் மாசுபாடு குறையுமா என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழவேண்டும். அதற்காக இப்போது நடவடிக்கை துரிதப்படுத்தவேண்டும்,''என்கிறார் ஸ்ரீனிவாசன்.
அறிக்கைகள் பயன் தருமா?
கடந்த ஆண்டு, ஜூலை 12 அன்று பேராசிரியர் எஸ் .ஜனகராஜன், இசைக்கலைஞரும் செயல்பாட்டாளருமான T.M. கிருஷ்ணா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ஆகியயோர் அனல்மின் நிலையத்தால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளன இடங்களைப் பார்வையிட்டு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், "தான் செய்துவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அரசிடம் தவறான தகவல்களைத் தருகிறார்கள்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுபோன்ற களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரப்பட்ட அறிக்கைகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், புதிதாக தயாராகவுள்ள அறிக்கை என சுற்றுசூழல்துறை அமைச்சர் கூறும் அறிக்கையாவது பலன் தந்தால் நன்மை ஏற்படும் என்கிறார் மீனவர் ஸ்ரீனிவாசன்.
மேலும், ''அனல்மின் நிலையம் அரசு நிர்வாகமாக இருப்பதால், தண்டத்தொகையை எங்களைப் போன்ற பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக, மாசுபாடு ஏற்படும் சமயத்தில், உரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் செய்த தவறுக்காக அபராதத் தொகையை அவர்களின் சம்பளத்தில் இருந்தே செலுத்தும் வகையில் விதிகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு உடனே தீர்வு பிறக்கும்,''என்கிறார் ஸ்ரீனிவாசன்.