1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (09:54 IST)

ட்விட்டர் அலுலகங்களை அடுத்த வாரம் வரை மூடப்போவதாக ஈலோன் மஸ்க் அறிவிப்பு!

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் தனது ஊழியர்களிடம் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
 
பிபிசி பார்த்த ஒரு குறுஞ்செய்தியில், நவம்பர் 21 திங்கட்கிழமை அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நடவடிக்கைக்கான காரணத்தை ட்விட்டர் தெரிவிக்கவில்லை.
 
"அதி தீவிரமாக நீண்ட நேரம்” பணியாற்றுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று ஈலோன் மஸ்க் தெரிவித்ததை அடுத்து, ஏராளமான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
மேலும், அந்தக் குறுஞ்செய்தியில், “தயவுசெய்து நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்குவதைத் தொடரவும். சமூக ஊடகங்கள், செய்தி ஊடகங்கள், அல்லது பிற இடங்களில் நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிபிசி அதன் விளக்கத்தைத் தெரிந்துகொள்ள ட்விட்டரை அணுகியபோது உடனடியாக பதிலளிக்கவில்லை.
 
இந்த வாரம் ஈலோன் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களிடம், “அதிக தீவிரத்துடன்” நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார்.
 
ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் புதிய உரிமையாளர், ஊழியர்கள் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் எனக் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
 
வியாழக்கிழமைக்குள் பதிவு செய்யாதவர்களுக்கு மூன்று மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்று மஸ்க் கூறினார்.
 
இந்த மாதத் தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் தனது பணியாளர்களில் 50 சதவீதத்தைக் குறைப்பதாகக் கூறியது.
 
ஈலோன் மஸ்க்கின் புதிய விதிமுறைகளை ஏற்காததால் தற்போது ஏராளமான ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்ததற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு மத்தியில் ட்விட்டர் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டதாக இன்றைய அறிவிப்பு வந்துள்ளது.
 
பணியாற்றிய இடத்தை விரும்ப வேண்டும் என்பதைக் குறிக்கும் #LoveWhereYouWorked என்ற ஹேஷ்டேக் மற்றும் சல்யூட் செய்யும் எமோஜியை பயன்படுத்தி, ஊழியர்கள் ட்வீட் செய்து தாங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதைக் காட்டுகின்றனர்.
 
பெயர் வெளியிட விரும்பாத ஒரு முன்னாள் ட்விட்டர் ஊழியர் பிபிசியிடம், “இந்தப் பரபரப்பு அடங்கும்போது 2000க்கும் குறைவான ஊழியர்களே எஞ்சியிருப்பார்கள்” என்று தான் கருதுவதாகக் கூறினார்.
 
தங்கள் குழுவிலிருந்து அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
 
“அந்தக் குழுவின் மேலாளரும் அவரது மேலாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பிறகு அந்த மேலாளரின் மேலாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு மேலே உள்ளவர் முதல் நாளில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளில் ஒருவர். எனவே அந்தச் சங்கிலியில் இருந்த ஊழியர்கள் யாரும் இப்போது இல்லை.”
 
ட்விட்டரின் கட்டுப்பாட்டை மஸ்க் எடுப்பதற்கு முன்பு, நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் இருந்தனர். நிறுவனம் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஈலோன் மஸ்க் கோரிய அதிகமான பணிச்சுமையை ஏற்கத் தயாராக இருந்தபோதிலும் தாங்கள் ராஜினாமா செய்ததாக மற்றொரு நபர் கூறினார்.
 
“நான் ஏற்கெனவே வாரந்தோறும் 60-70 மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்தபோது, ‘விதிவிலக்காக சிலர் மட்டுமே இங்கு வேலை செய்ய வேண்டும்’ என்று பலமுறை மின்னஞ்சல் மூலம் எங்களை அச்சுறுத்திய ஒருவருக்காக நான் பணியாற்ற விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
 
கடந்த மாதம் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் நிறுவனத்தை வாங்கிய பிறகு உலகின் மிகப்பெரிய பணக்காரரான மஸ்க் ட்விட்டரின் தலைமை நிர்வாகியானார்.
 
ட்விட்டரின் அலுவலகங்கள் மூடப்பட்டது பற்றிய தகவல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றிய வெளிப்படையான குறிப்பில், “சமூக ஊடகங்களில் எப்படி சிறிய செல்வத்தைச் சம்பாதிக்க முடியும்? பெரியதிலிருந்து தான் தொடங்க வேண்டும்,” என்று மஸ்க் ட்வீட் செய்தார்.