திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (10:58 IST)

அதெல்லாம் நான் போடலைங்க.. போட்டோஷாப்! – ப்ரதீப் ரங்கநாதன் விளக்கம்!

Pradeep
லவ் டுடே படத்தின் மூலமாக பிரபலமாகியுள்ள இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் தனது பழைய பேஸ்புக் பதிவுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ள படம் லவ் டுடே. இந்த படத்தை இயக்கி நாயகராகவும் அறிமுகமாகியுள்ளார் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமான நிலையில் பிரச்சினைகளும் தேடி வந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த ப்ரதீப் அப்போதைய சமயங்களில் சினிமா, சினிமா பிரபலங்கள் குறித்த ட்ரோல் பதிவுகளை இட்டுள்ளார். அதை சிலர் தற்போது மீண்டும் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர். அதுபோல சிலர் அவர் பதிவிட்டது போன்ற போலியான எடிட் செய்யப்பட்ட பதிவுகளையும் ஷேர் செய்வதாக தெரிகிறது.


இதனால் ப்ரதீப் தனது பேஸ்புக் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டன.ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதை சரிசெய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை பதிவுகள் தொடர்பாக ப்ரதீப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சோசியல் மீடியாவில் பேசி வருகிறார்கள்.

Edit By Prasanth.K