வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (11:58 IST)

டிரைவர் ஜமுனா - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ ரஞ்சனி, ஆடுகளம் நரேன்; இயக்கம்: கின்ஸ்லின்.
 
ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு முன்பாக நடித்து வெளிவந்த பூமிகா, சுழல் ஆகியவை, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்த நிலையில், தற்போது வெளிவந்திருக்கும் டிரைவர் ஜமுனாவும் அதே பாணியில் அமைந்திருக்கிறது. இயக்குநர் கின்ஸ்லின் இதற்கு முன்பாக வத்திக்குச்சி படத்தை இயக்கியவர்.
 
டிரைவர் ஜமுனா படத்தின் கதை இதுதான்: தனது தந்தை கொலைசெய்யப்பட்ட பிறகு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் செய்து வந்த  கால் டாக்ஸி ஓட்டுநர் பணியை செய்ய ஆரம்பிக்கிறார் ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்).
 
வீட்டை அடமானம் வைத்து விட்டு ஓடிவிட்ட தம்பி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அம்மா (ஸ்ரீ ரஞ்சனி) என வீட்டில் நெருக்கடியான சூழல். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏவான மரகதவேலை (ஆடுகளம் நரேன்) கொலை செய்யக் கிளம்பும் ஒரு கூலிப்படை, ஜமுனாவின் கால் டாக்சியில் ஏறுகிறது. பின்னர், அந்தக் கூலிப்படையைத் துரத்தி வருகிறது போலீஸ்.
 
கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா, இவர்களுக்கும் நாயகியின் தந்தை கொலைசெய்யப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான விமர்சனங்கள், படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன.
 
இதுவும் வழக்கமான சினிமாவா?
"பார்வையாளர்களுக்கு ஒரு தீவிரமான உணர்வைத் தர தீவிரமாக முயற்சிக்கிறது டிரைவர் ஜமுனா. ஆனால், படத்திற்குள் மோதல்கள் குறைவாக இருப்பதும் மேம்போக்கான காட்சிகளும் சேர்ந்து ஒரு வழக்கமான சினிமாவைத் தந்திருக்கின்றன," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.
 
"பாத்திரங்களை அறிமுகப்படுத்தவும் அவர்களது நோக்கங்களைச் சொல்லவும் நேரம் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் கின்ஸ்லின். படத்தின் மையக் கதாபாத்திரம் ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ளும்போது கதை சுவாரஸ்யமானதாக மாறுகிறது. 
 
கூலிப்படையினர் ஜமுனாவின் காருக்குள் ஏறும்போது பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. ஆனால், அந்த த்ரில் அரைமணி நேரம் கூட நீடிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய ஏமாற்றம்."
 
"பெரிதாக ஏதோ நடக்குமென எதிர்பார்க்கும்போது, கதை சொல்லும் விதம் பலவீனமடைந்து பாத்திரங்கள் அபத்தமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. 
 
உதாரணமாக, ஒரு கூலிப் படை கொலையாளி கதாநாயகியை எளிதில் கொலை செய்திருக்க முடியும் என்ற நிலையில், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, கொல்லாமல் விடுகிறார். கதையின் முக்கியமான கதாபாத்திரம், படம் நெடுக வர வேண்டுமென்றால், அதற்கான புத்திசாலித்தனமான காட்சிகள் வேண்டும்.
 
உச்சகட்ட காட்சிகளில் வரும் திருப்பம் சிறப்பாக இருக்கிறது. ஜமுனாவின் பின்னணிக் கதையும் அவர் இந்த வேலையை எடுத்துக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்கின்றன.
 
ஆனால், முக்கியக் கதாபாத்திரங்களோடு ஒன்றச் செய்யும்வகையில் சம்பவங்கள் இல்லை. மேலும் காவல்துறையினர் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதும் தெரியவில்லை. 80களில் வரும் படத்தைப் போல, கதாநாயகி அவர்களை அழித்த பிறகுதான் காவல்துறையே வருகிறது" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.
 
சிந்திக்க வைக்கும் கின்ஸ்லினின் இயக்கம்
படத்தின் துவக்கம் சிறப்பாக இருந்தாலும், போகப்போக திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் விட்டிருப்பதாக விமர்சித்துள்ளது இந்தியா டுடே இணையதளம்.
 
"'டிரைவர் ஜமுனா சிறப்பாகத்தான் துவங்குகிறது. ஆனால், அவர் கொலைகாரர்களிடம் மாட்டிக்கொண்டதும், அந்த சிறப்பான தன்மை முடிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு வரும் கதையில் ஏகப்பட்ட லாஜிக் கோளாறுகள்.
 
கின்ஸ்லின் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பல இடங்கள் அதிர வைக்கின்றன. மிகப் பெரிய லாஜிக் ஓட்டைகளையெல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
 
கொலைகாரர்களை காவல்துறை தேடுகிறது. ஏதாவது ஒரு சோதனைச் சாவடியில் அவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடும். ஆனால், படம் போகும் திசையைப் பார்க்கும்போது, கொலைகாரர்கள் - காவல்துறையினர் இந்த இருவரில் யார் கேலிக்குள்ளானவர்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது. முடிவில், படம்பார்த்த நாம்தான் கேலிக்குள்ளானவர் என்பது புரிகிறது.
 
ஒரு முக்கியமான காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் அன்னியன் படத்தில் வருவதைப் போல நடிக்கிறார். ஆனால், எதிரிலிருக்கும் காவல்துறை அதிகாரிக்கு கதாநாயகி என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. பல காட்சிகளை வேகவேகமாக நகர்த்தியிருக்கிறார்கள். நாம்தான் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
 
ஆனால், உச்சகட்ட காட்சிகள் படத்தை சற்று காப்பாற்றுகின்றன. படத்தில் வரும் எல்லாக் கதைகளும் ஒரு புள்ளியில் வந்து இணைந்து, ஏற்கத்தக்க ஒரு முடிவைத் தருகின்றன. ஆனால், படத்தோடு உணர்ச்சிகரமான இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கதை இல்லை. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.
 
"ஆரம்ப விறு, விறு - கடைசியில் என்னாச்சு"
ஆரம்பத்தில் விறுவிறுப்பாகத் துவங்கும் படத்தின் பிற்பாதியில் கதைக்கான காட்சிகளுக்கு பதிலாக காட்சிகளுக்கேற்றவாறு கதையை வளைத்திருப்பதால், படத்தின் சுவாரஸ்யம் குறைந்திருப்பதாகக் கூறுகிறது இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம்.
 
"ஒரே கிக்கரில் ஸ்டார்ட் ஆகி புறப்படும் வண்டியைப்போல தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பை கூட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
 
கூலிப்படையினரை ஏற்றிக்கொண்டு ஜமுனா பயணிக்கும் காரில் நிலவும் அமைதியும் அச்சமும் கச்சிதமாக பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது. அடுத்து என்ன நடக்குமோ என எதிர்நோக்கி காத்திருக்கும் பார்வையாளர்களின் ஆர்வத்தை முடிந்த அளவுக்கு தக்க வைக்கிறது திரைக்கதை.
 
 
 
ஒருவித பயத்துடன் அமைதியாக பயணிக்கும் காரின் இறுக்கத்தை தளர்த்த மற்றொரு கதாபாத்திரத்தை பயன்படுத்தி ஆசுவாசப்படுத்தியது, தனக்கு பின்னால் இருப்பவர்களால் ஆபத்து நேரலாம் என தெரிந்தே பயணிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் உணர்வின் மீட்டரில் பார்வையாளர்களையும் பொருத்தியது என முதல் பாதியில் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர்.
 
இரண்டாம் பாதியில் கதையை சொல்லியாக வேண்டிய தேவையின்போது, திரைக்கதை 'டீசலை' கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்குகிறது.
 
கதைக்கான காட்சிகளுக்கு பதிலாக காட்சிகளுக்கேற்றவாறு கதையை வளைத்திருக்கும் உணர்வு எழாமலில்லை. காரணம், சுற்றியிருக்கும் காவல் துறையிடமிருந்து குற்றவாளிகள் தப்பிப்பது, வேண்டுமென்றே கொலையாளிக்கு பதிலாக மற்றவரை வெட்டும் கூலிப்படையினர், பிரதான கதாபாத்திரத்தின் எஸ்கேப் என அங்காங்கே தெரியும் தர்க்க ஓட்டைகளில் வெளிச்சம் பளீச்சிடுகிறது.
 
பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமென வைக்கப்பட்ட படத்தின் திருப்பம் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தனித்து தெரிகிறது. திருப்பதை அடிப்படையாக வைத்து எழுப்பப்பட்ட மொத்த திரைக்கதை அதன் இயல்பிலிருந்து விலகி செயற்கைத்தனத்தை தாங்கி நிற்கிறது.
 
ஒரு கட்டத்தில் ஜமுனா கதாபாத்திரத்தின் அழுத்தமின்மையும், அந்த கதாபாத்திரத்திற்கான போதிய தேவையும் எழாமலிருப்பது படத்துக்கும் பார்வையாளருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்திவிட ஒன்ற முடியாமல் போகிறது" என விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.
 
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டு
ஆனால், பொதுவாக எல்லா விமர்சனங்களுமே ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பையும் பிற நடிகர்களின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளன.
 
படத்தைக் காப்பாற்றும் ஒரே அம்சம், ஐஸ்வர்யா ராஜேசும் அவரது அட்டகாசமான நடிப்பும்தான் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.  "‘கெத்தாக’ நின்று டீ குடித்து காலி டம்ளரை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த உடல்மொழி, அப்படியே வலுவிழந்து கூலிப்படையினரிடம் சிக்கி செய்வதறியாமல் திகைக்கும் முகபாவனை, அம்மாவை எண்ணி உருகுவது என தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார். கார் ஸடண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கும் அவரது மெனக்கெடல் கவனிக்க வைக்கிறது.
 
விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்திற்கு நடிப்பில் நியாயம் சேர்க்கிறார். தவிர, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக் குமார், இளையபாண்டி ‘பிக்பாஸ்’ பாஸ் மணிகண்டன் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்" என்கிறது இந்து தமிழ் திசை.
 
எல்லா விமர்சனங்களுமே 'ஒளிப்பதிவு' மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றன.
 
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஐந்துக்கு இரண்டரை நட்சத்திரங்களும் இந்தியா டுடேவில் ஐந்துக்கு இரண்டு நட்சத்திரங்களும் இந்தப் படத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.