வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:20 IST)

திராவிடர் கழகம் 75 - "திராவிடர் கழகத்திற்கான தேவை முன்னெப்போதையும்விட இப்போதுதான் அதிகம்"

திராவிடர் கழகம் தனது பவள விழாவை இன்று (ஆகஸ்ட் 27) கொண்டாடும் நிலையில், அந்த இயக்கத்தின் தற்போதைய தேவை, சாதனைகள், எதிர்கால லட்சியங்கள், அக்கட்சி மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசினார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:

கே. இந்த இயக்கம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. திராவிடர் கழகம் என்ற இந்த அமைப்புக்கு இனிமேலும் தேவை இருப்பதாக நினைக்கிறீர்களா?

ப. கண்டிப்பாக. திராவிடர் கழகத்தின் அடிப்படையான கொள்கைகள் ஒன்று ஜாதி ஒழிப்பு. மற்றொன்று பெண்ணடிமைத் தனம் ஒழிப்பு. இதுதான் அடிப்படை. இதில் ஜாதி பிரச்சனை எந்த அளவுக்கு இருக்கிறதென்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பெண்களுக்கான சமஉரிமை விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்துப் பேச ஆரம்பித்து 25 ஆண்டுகளாகிவிட்டன. அதில் இன்னமும் குறுக்கு சால்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையான இரண்டு விவகாரங்களில், திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் இன்னமும் தீவிரமாகத் தேவைப்படுகிறது என்றுதான் கருதுகிறோம்.

அடுத்ததாக, இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு. இதைத்தான் அரசியல் சாஸனம் வலியுறுத்துகிறது. இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதனை ஏற்று, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுதான் வந்திருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக இந்து ராஜ்யத்தை ஆரம்பிக்கப்போவதாகப் பேசுகிறார்கள். ராமர் கோவில் கட்டப்போவதாகச் சொல்கிறார்கள்.

இதெல்லாம் எந்த அளவுக்கு மதச் சார்பின்மைக்கு உகந்ததாக இருக்க முடியும்? ஆக, இப்போது பெரியாரின் கொள்கை இந்தியா முழுவதுமே தேவைப்படும் ஒரு காலகட்டம் இது. அதனால்தான், நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க என்ற குரலும் வெல்க திராவிடம் என்ற குரலும் எழுகிறது.

பல ஆண்டுகாலமாகப் போராடி தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதை நாசமாக்கும் முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. சட்டத்தில் இடமில்லாத, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நரசிம்மராவ் காலகட்டத்தில் இதேபோல பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது, அது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பெரியாருடைய, திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகள் வேறு எந்த காலகட்டத்தையுவிட, தற்போது மிக அவசியமாக இருக்கிறது.

கே. நாடு முழுவதும் இந்து இயக்கங்கள், அமைப்புகள் மிக வலுவானதாக உருவெடுத்திருக்கின்றன.75 ஆண்டுகள் கழிந்த பிறகும் திராவிட இயக்கங்கள் அம்மாதிரி ஒரு வலுவைப் பெற முடியவில்லை..

. நாங்கள் தமிழ்நாட்டிற்குள் மட்டும்தான் இயங்குகிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்னவிதமான முடிவுகள் கிடைத்தன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதனால்தான் அவர்கள் பெரியார் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள். ஆகவே, பெரியாரிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் மிக உயிரோட்டமாக இயங்குகிறார்கள். ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாக திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றபோது, அதில் 20 - 25 வயதுள்ள இளைஞர்கள், மாணவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டனர். ஆகவே, பிரச்சாரம், போராட்டம் என்ற வகையில் இயக்கத்தை வலுவாகத்தான் வைத்திருக்கிறோம்.

கே. பெரியாருக்குப் பிந்தைய காலகட்டத்தில் இயக்கத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பெரியாருக்குப் பின்பும் கடுமையாகத்தான் செயல்படுகிறோம். உதாரணமாக, எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பைக் கொண்டுவந்தார். இதைக் கடுமையாக எதிர்த்தோம். திராவிடர் கழகம் போராட்டங்களை நடத்தியது. 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இடஒதுக்கீட்டில் கைவைத்ததுதான் இதற்குக் காரணம் என்பதை அவரே ஒப்புக்கொண்டார். இதற்குப் பிறகு, இடஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு, 69 சதவீதமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் திராவிட இயக்கங்கள்தான்.

அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென திராவிடர் கழகம் 42 மாநாடுகளை நடத்தியிருக்கிறது. 16 போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்திரா காந்தியின் வீட்டை மறித்துப் போராடியிருக்கிறோம். ஒரு மாதத்தில் 20 நாட்கள் தலைவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்.

கே. அகில இந்திய அளவில் பா..கவின் ஆட்சிக்கு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு சித்தாந்தப் பின்புலத்தையும் வலுவையும் அளிக்கின்றன. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு அப்படியான பின்புலத்தை திராவிடர் கழகத்தால் வழங்க முடிகிறதா?

. நிறையச் செய்திருக்கிறோம். எவ்வளவு பிரச்சார புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று பாருங்கள். பல மாநாடுகளை தொடர்ந்து நடத்துகிறோம். மதவெறி மாய்ப்போம், மனித நேயம் காப்போம் என்ற பெயரில் பல சிறிய கூட்டங்களை நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் நடத்துகிறோம். திராவிடக் கட்சிகள் தவறுகளைச் செய்யும்போது சுட்டிக்காட்டுகிறோம். முக்கியமான பிரச்சனைகளின்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்தொற்றுமையை ஏற்படுத்துகிறோம். போராட்ட வடிவங்களை கொடுக்கிறோம்.

இந்த நிலைப்பாட்டிற்கு மாறாக சொல்வதற்கு எந்த ஒரு கட்சியும் யோசிக்கும். அந்த அளவுக்கு வலுவாக திராவிடர் கழகம் இருக்கிறது.

கே. 1925ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய இயக்கமாக வளர்ந்திருக்கிறது. திராவிட இயக்கங்களால் அவ்வளவு பெரிய அளவுக்கு வளர முடியாமைக்கு என்ன காரணம்? கடவுள் மறுப்பை முன்வைத்ததை காரணமாகச் சொல்லலாமா?

ப. சுயமரியாதை இயக்கம், ஆர்.எஸ்.எஸ்., இந்தியப் பொதுவுடமை இயக்கம் ஆகிய மூன்றுமே 1920களின் மத்தியில்தான் துவங்கப்பட்டன. பொதுவுடமை இயக்கம் வலுவிழந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்கள் வலுவாகத்தான் இருக்கின்றன.

அகில இந்திய அளவில் பார்த்தால், துவக்கத்தில் காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய இயக்கமாக, கட்சியாக இருந்தபோது அதற்கு மாற்றாக பெரிய கட்சிகள் இல்லை. பொதுவுடமை இயக்கம் அந்தப் பாத்திரத்தை செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஆகவே, காங்கிரசிற்கு எதிர்ப்பான மன நிலையில் இருந்தவர்களுக்கான இயக்கமாக, அமைப்பாக இந்து அமைப்புகள், கட்சிகள் உருவெடுத்திருக்கின்றன. ஆனால், இந்த அமைப்புகள் சித்தாந்த ரீதியாக வலுவாக இருப்பதாகக் கூறுவது தவறு.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்தான். இந்தப் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான சித்தாந்தம் எப்படி வெற்றிபெற முடியும்? எப்படி வலுவான சித்தாந்தமாக நீடிக்க முடியும்?

அவர்களை எதிர்க்க சரியான சித்தாந்தம் பெரியார், அம்பேத்கரின் தத்துவங்கள்தான். இங்கே நாம் செய்வதைப் போன்ற பிரச்சாரத்தை வடக்கில் செய்தால், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, இடஒதுக்கீட்டில் ஒரு அரசு கைவைத்தால் பாதிக்கப்படப்போவது யார்? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள்தானே? இதனை மக்களிடம் எடுத்துச் சென்றால், அவர்களது சித்தாந்தம் வீழும். ஆனால், அம்மாதிரிப் பிரச்சாரம் வட மாநிலங்களில் நடக்கவில்லை என்பது உண்மையான கருத்துதான்.

கே. திராவிடர் கழகம் தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறதா? அதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறதா?

. பெரியார் திராவிடர் கழகத்தை ஆரம்பித்தது கடவுள் மறுப்புக்காக அல்ல. அவருடைய அடிப்படையான கொள்கைகள், ஜாதி மறுப்பு மற்றும் பெண்ணடிமைத் தன ஒழிப்பு. இதைப் பிரச்சாரம் செய்யும்போது, இந்த அடிமைத்தனத்தை நாங்கள் செய்யவில்லை; கடவுளே செய்த ஏற்பாடு என்றார்கள். அம்மாதிரி வாதம் வரும்போது, ஜாதி ஒழிப்புக்கு எதிராக இருக்கும் அனைத்தையும் அவர் எதிர்க்க வேண்டியதாயிற்று. அப்படித்தான் கடவுள் மறுப்பு என்பதைத் துவங்கினார் பெரியார்.

இருந்தபோதும் தன் கொள்கைகளை வலியுறுத்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்களை வைத்து கூட்டங்களை நடத்தினார். அம்மாதிரி கூட்டங்களை நடத்தும்போது கடவுள் மறுப்பு கோஷங்களைச் செய்யாதீர்கள் என்று தன் தொண்டர்களிடம் சொல்வார் பெரியார். ஆகவே, பெரியாரின் நோக்கம் என்பது ஜாதி ஒழிப்பு. அதற்குத் தடையாக இந்த கடவுள் நம்பிக்கை, வேதம், புராணம் ஆகியவை இருந்ததால் அவற்றை அவர் எதிர்த்தார்.

அதன் உச்சமாக, பகுத்தறிவின்பாற்பட்டு கடவுள் இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

ஜாதியைப் பாதுகாக்கும் எல்லாவற்றையுமே பெரியார் எதிர்த்தார். அரசியல் சட்டம் மதத்தையும் ஜாதியையும் பாதுகாப்பதாக நினைத்ததால், 1957 நவம்பர் 26ல் அதனை எரித்தார். கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் சிறை சென்றார்கள். ஆகவே, ஜாதியை ஒழிக்கவே கடவுள் மறுப்பை பெரியார் முன்வைத்தார் என்பதை தமிழக மக்கள் ஏற்கிறார்கள்.

1971ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, பெரியார் ராமனை செருப்பால் அடித்தார் என பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனைத் தி.மு.கவுக்கு எதிராகத் திருப்பினார்கள். என்ன ஆனது? 1967ல் 138 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க., அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றிபெற்றது. இதுதான் தமிழ்நாடு. கடவுளுக்காக மக்கள் பெரியாரை வெறுக்கவில்லை. அவர் எதற்காக அதைச் சொன்னார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

கே. இப்போதும் இதைச் சொல்ல முடியுமென நினைக்கிறீர்களா?

. சொல்லிக்கொண்டுதானே இருக்கிறோம். அதையேதான் பேசுகிறோம். பெரியார் சிலைகளைத் திறக்கிறோம். பிரச்சாரம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

பெரியாரை யாரும் கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்க்கவில்லை. நம் சமூகத்தை மேம்படுத்த வந்தவராகவே, பாதுகாவலராகவே மக்கள் பார்க்கிறார்கள். திருப்பத்தூரில் பெரியாரின் சிலை தாக்கப்பட்டது.
போராட்டத்தில் இறங்கியவர்கள் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். நாமம், பட்டை அணிந்தவர்கள்தான். கடவுள் மறுப்பாளர் என்பதைத் தாண்டி, நம் கல்வி உரிமைக்கு, பெண்கள் உரிமைக்கு, வேலைவாய்ப்புகளுக்கு அவர் காரணமாக இருந்தார் என்ற உணர்வு கட்சிக்கு அப்பாற்பட்டு நம் மக்களுக்கு இருக்கிறது.

கே. திராவிட இயக்கங்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்திய அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் நலனைப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

. இது தவறு. துவக்கத்தில் திராவிட இயக்கத்திற்கு பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்றுதான் பெயர். துவக்கத்தில் பெரியார் கிராமங்களுக்குச் சென்று தாழ்த்தப்பட்ட மக்களிடையேதானே சுயமரியாதைத் திருமணங்களை நடத்திவைத்தார். இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சட்டப்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே அவர்களுக்காகத்தானே போராட முடியும்?

1971ல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சேர்ந்து ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் பெரியாருக்கு ஒரு விருந்தளித்தார்கள். அப்போது பெரியார் ஒரு கேள்வி கேட்டார்: சென்னை உயர் நீதிமன்றம் துவங்கி 100 ஆண்டுகள் ஆன பிறகும் ஏன் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட உயர்நீதிமன்ற நீதிபதியாகவில்லை எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கு பதிலே இல்லை. பிறகு, பேசிய அவர், ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வர வேண்டுமென முதலமைச்சர் கலைஞருக்குக் கூறுகிறேன் என்றார்.

பத்தே நாளில் வரிசையில் 8வது இடத்தில் இருந்த வரதராஜனை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கினார். அவர்தான், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல் நீதிபதி. இதைவைத்துப் பார்த்தாலே, அவருடைய அக்கறை யார் மீது இருந்தது என்பது தெரியும்.

தவிர, தாழ்த்தப்பட்டவர்களைத் தனியாகப் பிரிப்பது, அவர்களுக்கென தனிப் பள்ளிகள் நடத்துவது, தனியாக கிணறுகள் அமைப்பது ஆகியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. காங்கிரசில் இருக்கும்போதே இதையெல்லாம் எதிர்த்திருக்கிறார். ஜாதியை ஒழிக்க இது பயன்படாது என அவர் கூறினார்.
அம்பேத்கரின் Annihilation of Caste நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் பெரியார்தான். கிட்டத்தட்ட அறுபது - எழுபது பதிப்புகள் இதுவரை வெளியாகிவிட்டன. தான் செய்யும் காரியத்தைத்தான் தமிழ்நாட்டில் பெரியார் செய்துவருவதாக அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.

திருச்சி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விவசாய சங்கங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எங்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். திராவிட இயக்கங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது விஷமப் பிரச்சாரம்.

கே. திராவிட இயக்கங்கள் அடையவிரும்பி, அடைய முடியாமல் இருக்கும் லட்சியங்களாக எதையாவது கருதுகிறீர்களா?

ப. தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால், சாதிப் பெயரைப் போட எல்லோரும் வெட்கப்படுகிறார்கள். தமிழகத்திற்கு வெளியில், கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடுவதில்லை. தமிழ்நாட்டில் அந்தச் சூழல் இல்லை. இது வெட்ககரமானது என நினைக்கிறார்கள். பார்ப்பனர்கள்கூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போடுவதில்லை. 1929ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாட்டில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை அந்த நிலை நீடிக்கிறது.

அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென பெரியார் நினைத்தார். இதற்காக கலைஞர் சட்டத்தைக் கொண்டுவந்தார். நீதிமன்றத் தடைகள் வந்தன. இப்போது மதுரையில் ஒரு பிற்படுத்தப்பட்ட அர்ச்சகர் இருக்கிறார். இதெல்லாம் மிகப் பெரிய புரட்சி.

இன்றைக்கு சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் பல வகைகளில் தந்திரமாக செயல்படுகிறார்கள். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.