திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2024 (14:33 IST)

தமிழ் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்?

Seeman Vijay

‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) மாநாட்டில் விஜய் பேசியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார்.

 

 

இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் என்ற தன்னுடைய தனித்த வாக்கு வங்கிக்கு விஜயின் தமிழ் தேசியம் குறித்த பேச்சால் ஆபத்து ஏற்படும் என்பதாலேயே சீமான் இப்படி விமர்சித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

அதேசமயம், “எங்களுடைய விமர்சனம் கோட்பாட்டு ரீதியிலானது மட்டுமே, வெற்றி குறித்ததோ, வாக்கு வங்கி குறித்ததோ அல்ல,” என்கின்றனர், நாம் தமிழர் கட்சியினர்.

 

இதற்கு, “எங்களுடைய எதிரிகள் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தான், நாம் தமிழர் கட்சி எங்கள் எதிரி அல்ல,” என த.வெ.க தரப்பிலிருந்து பதில் வருகிறது.

 

கடந்த அக்டோபர் 27-ஆம் த.வெ.க மாநாடு நடைபெற்ற திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ராணி வேலுநாச்சியார் என, நாம் தமிழர் முன்னெடுக்கும் மன்னர்களைப் போற்றும் அரசியலை விஜயும் முன்னெடுப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. மேடையில் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என விஜய் பேசியதிலிருந்து, தமிழ் தேசியத்தையும் அவர் தழுவிக்கொள்ள நினைத்தது தெளிவானதாக, அரசியல் ஆய்வாளர்கள் அச்சமயத்தில் கூறியிருந்தனர்.

 

இந்நிலையில் தான், தமிழ் தேசியம் குறித்த விஜயின் பேச்சைக் கடந்த இரு தினங்களாக விமர்சித்துவந்தார் சீமான். “வேலுநாச்சியார், மூவேந்தர்கள், அஞ்சலை அம்மாள் குறித்து விஜய்க்குத் தெரியாது,” என நேரடியாகவே விமர்சித்தார். “திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றல்ல. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்,” என்றார் சீமான்.

 

சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 01) நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தில் தான் இவ்வாறு சீமான் பேசியிருந்தார்.

 

சீமானது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

 

வாக்கு வங்கி அரசியலா?
 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போது வரை நடந்திருக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறது. முதல் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1% ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1% வாக்குகள் கிடைத்தன. இதன் காரணமாக, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும் அந்தஸ்தை எட்டியது நாம் தமிழர் கட்சி.

 

Seeman
 

ஒவ்வொரு தேர்தலிலும் முதன்முதலாக வாக்களிக்க வரும் புதிய தலைமுறையினர், தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு எதிராக மாற்று அரசியலை நாடும் இளைஞர்கள் ஆகியோர்தான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை வாக்காளர்கள். தற்போது சீமான் பேசும் தமிழ் தேசிய ஆதரவை பெரியார் ஆதரவுடன் விஜய் முன்வைப்பதால், தன்னுடைய அடிப்படை வாக்காளர்கள் த.வெ.க பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், சீமான் சற்று கலக்கம் அடைந்திருப்பதாக தெரிகிறது என்கின்றனர், மாநில அரசியலை உற்றுநோக்கும் அரசியல் நிபுணர்கள்.

 

எனினும், கணிசமாக அந்த வாக்குகள் குறையுமா என்பதைத் தற்போது சொல்ல முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

“கொள்கை அடிப்படையிலான மோதல் என்பதைவிட இது வாக்கு வங்கி சம்மந்தப்பட்டது. விஜய் திராவிடம், பெரியாரை முன்னிறுத்தியது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். விஜய் மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் சீமானுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

 

சீமானின் விமர்சனம் அதீதமானதா?
 

மாநாட்டுக்கு முன்னதாகப் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் விஜயை ‘தம்பி’ என அழைத்துவந்தார் சீமான். ஆனால், தற்போது கொள்கை முரண் காரணமாக, “கொள்கை வேறாக ஆனபின் அண்ணன் என்ன, தம்பி என்ன?” என்றும் சீமான் பேசியிருந்தார்.

 

அதேபோன்று, மாநாட்டுக்கு முன்பாக தனக்கு ஒத்த கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என சீமான் எதிர்பார்த்திருக்கலாம் என ப்ரியன் கூறுகிறார். இரு கட்சிகளும் கூட்டணியாகக் கூடப் போட்டியிடலாம் என்ற யூகங்கள் கிளம்பியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

Vijay
 

விஜயை விமர்சிக்க வேண்டாம் என்ற முடிவை மாநாட்டுக்கு முன்னதாகவே தங்களின் உயர்மட்டக் குழுவில் சீமான் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறுகிறார், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்.

 

“அவருடைய கொள்கை தெரிவதற்கு முன்பாகவே மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விஜயை வாழ்த்தினோம். அவர் நம் தோழமை சக்தி என்ற நிலைப்பாட்டை சீமான் எடுத்தார்,” என்கிறார் கார்த்திக்.

 

திராவிடம், தமிழ் தேசியம் இரண்டையும் ஆதரித்திருக்கும் விஜயின் த.வெ.க-வை, அவற்றை ஏற்கெனவே பேசிவரும் இருவேறு கட்சிகளும் தங்களின் எதிரிகட்சியாக பார்க்கிறது.

 

“திராவிடம் - தமிழ் தேசியம் இரண்டும் நெடுங்காலமாக வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுகுறித்த எதிரெதிர் விமர்சனப் பார்வைகள் தி.மு.க, நா.த.க-வுக்கு உண்டு. நடுநிலையான நிலைப்பாட்டை விஜய் எடுத்திருக்கிறார். சர்ச்சையில் சிக்க வேண்டாம் என நினைத்திருப்பார்,” என்கிறார் ப்ரியன்.

 

மாநாட்டுக்குப் பின்னர் சீமான் கட்சியிலிருந்து இளைஞர்கள் விஜய் கட்சிக்குச் செல்வார்கள் என பரவலாக அரசியல் மட்டத்தில் பேசப்படுவதை சீமான் ரசிக்கவில்லை, அதனாலேயே இத்தகைய எதிர்வினையை அவர் ஆற்றியிருப்பதாகவும் கூறுகிறார் ப்ரியன்.

 

“ஆனால், அவருடைய விமர்சனங்கள் செயற்கையாக இருக்கின்றன. மாநாட்டுக்கு முன்பு ஒருமாதிரியும் இப்போது ஒருமாதிரியும் பேசுகிறார். தேவையில்லாத வார்த்தைகளால் விமர்சிப்பது அதீதமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.

 

நாம் தமிழர் கட்சிக்குள் அதிருப்தியா?
 

நாம் தமிழர் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியிருப்பதாக ப்ரியன் கூறுகிறார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக, கடந்த செப்டம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சீமான் ‘தவறான அணுகுமுறையை கையாள்வதாக’ அவர்கள் தெரிவித்திருந்தனர்.

 

“சீமானின் கட்சியில் 4-5 மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. தொடர்ச்சியாக நிர்வாகிகள் விலகுகின்றனர்,” என்கிறார் ப்ரியன்.

 

“தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழர்களைப் பிரிக்கிறார் சீமான். ஆனால், எல்லா தமிழர்களுக்குமான உரிமை, நல்லிணக்கம் குறித்து விஜய் பேசுகிறார். வரும் காலங்களில் சீமானுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பார் விஜய்,” என்று அவர் கூறுகிறார்.

 

ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக், “மொழியை சாதி, மதத்துடன் ஒப்பிடுகின்றனர். சாதி ரீதியான அரசியலை நாங்கள் செய்வதாகக் கூறும் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். தேர்தல் பரப்புரைகளில் நாங்கள் சாதியை எதிர்த்துப் பேசுகிறோம்,” என்றார்.

 

தமிழ் தேசிய அரசியல்
 

இரண்டு, மூன்று முறை தங்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள் கூட விஜய்க்கு செலுத்துவார்கள் என்ற பயம் சீமானுக்கு இருக்கிறது, என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். “அ.தி.மு.க, தி.மு.க வேண்டாம் என நினைப்பவர்கள், புதிதாக வரும் கட்சிக்கு வாய்ப்பளிக்கலாம் என நினைப்பார்கள். இம்முறை அது சீமானாக இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்,” என்கிறார் அவர்.

 

எனினும், தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கு தற்போது எந்த இடமும் இல்லை என்றும், தமிழ் தேசியத்தைக் கையிலெடுத்த ஈ.வெ.க.சம்பத், மா.பொ.சி., பழ.நெடுமாறன் ஆகியோர் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

 

“சீமான் பேசும் தமிழ் தேசியம் நீர்த்துப்போன, தோற்றுப்போன கொள்கை. மாறாக, திராவிடமும் தமிழர் நலனைத்தானே பேசுகிறது. அதில் குறைகள் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் திராவிடத்தால் ஒன்றும் நிகழவில்லை என கூறிவிட முடியாதுதானே,” என்கிறார் அவர்.

 

தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி எனப் பல கட்சிக் கொள்கைகளின் கலவையாக விஜய் தன் கொள்கையை அறிவித்திருக்கிறார் எனக்கூறும் குபேந்திரன், அது தன்னை மற்றக் கட்சிகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ளும் முயற்சி என்கிறார்.

 

தமிழ் தேசியம் குறித்த விளக்கத்தையோ, தமிழ் தேசியம் - திராவிடம் இரண்டு கண்கள் என கூறியதற்கான அர்த்தத்தையோ மாநாட்டில் விஜய் விளக்கவில்லை. தமிழ் தேசியம் தொடர்பாக தன்னுடைய முன்னோடி யார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை என விமர்சனங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

 

த.வெ.க., நா.த.க கட்சியினர் கூறுவது என்ன?
 

சீமானின் விமர்சனம், விஜய் மீதான தனிப்பட்ட வன்மமோ, கோபமோ, காழ்ப்புணர்ச்சியோ அல்ல என்கிறார், நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக்.

 

“இது தத்துவார்த்த ரீதியான முரண் தான். சித்தாந்தப் போர் இது. நாம் தமிழரை விட நாங்கள்தான் மாற்று என்று சொல்லியிருந்தால் கூட கடந்துபோயிருப்போம், எதிர்வினையாற்றியிருக்க மாட்டோம். வாக்குகள் போய்விடும் என எந்தக் கணக்கும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதோ, கமல் கட்சி தொடங்கியபோதோ எங்கள் கட்சியிலிருந்து யாரும் அங்கு செல்லவில்லை, வாக்களிக்கவும் இல்லை. எங்கள் கட்சியினர் கொள்கைத் தெளிவு உள்ளவர்கள்,” என்கிறார் அவர்.

 

அதேசமயம், நா.த.க., எங்களின் எதிரி அல்ல என்கிறார், தமிழக வெற்றிக் கழகச் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.

 

“மதச்சார்பற்ற சமூக நீதிதான் எங்கள் கருத்தியல். திராவிடம், தமிழ்தேசியம் இரண்டுக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. அதை அனைத்துக் கட்சிகளும் நிரூபித்திருக்கின்றன. அனைத்து மக்களுக்குமான கட்சியாக வரும்போது எங்களுக்கு இரண்டும் வேண்டும். எல்லோருக்கும் பொதுவான தலைவர்தான் விஜய். நாங்கள் இனவாதம், தூய்மைவாதம் பேசும் தமிழ் தேசியத்தைப் பேசவில்லை. தமிழர்களின் வாழ்வியலைப் பேசுகிறோம்,” என்கிறார்.

 

மேலும், நாம் தமிழரும் நல்ல கட்சிதான், அவர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள், என்றும் எங்களின் பிரதான எதிரி பா.ஜ.க, தி.மு.க தானே தவிர நா.த.க அல்ல என்றும் அவர் கூறினார்