திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (15:38 IST)

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை: ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவா?

. பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை முழுமையாக விசாரிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ஓபிஎஸ் தரப்பினருக்கு சாதகமாகவும், ஈபிஎஸ் தரப்புக்கு சற்றே பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.


இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது," என்று உத்தரவில் குறிப்பிட்டது.

இது ஓபிஎஸ் தரப்பினருக்கு சாதகமாக அமைந்த உத்தரவு என்று கூறுகிறார் ஓபிஎஸ் ஆதரவாளரான ஆர். வைத்திலிங்கம். நீதிமன்ற உத்தரவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்பது. தற்போது இந்த பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்திருப்பதும், அடுத்த விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதையும் பார்க்கும்போது, அன்றைய விசாரணையில் அவர்கள் தரப்பு எடுத்த அத்தனை தீர்மானங்களும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

தற்போதைய உத்தரவின் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம்தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார் வைத்திலிங்கம்.

பின்னணி என்ன?
  • கடந்த ஜூலை மாதம், சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது அதிமுக.
  • எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்த, ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முந்தைய இரட்டை தலைமை நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
  • செப்டம்பர் மாத தொடக்கத்தில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது.
  • இந்நிலை, அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முழுமையாக விசாரித்து முடிவெடுக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு நிரந்தரதத் தடையை விதிக்கவில்லை. ஈபிஎஸ் தரப்பு தாமாக முன்வந்து இந்த தேர்தலை நடத்த மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது. அதன் பேரில்தான் உத்தரவு வந்துள்ளது என்கிறார், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை.

"சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "கடந்த ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் (ஓபிஎஸ் தரப்பு) கேட்டார்கள்."

"ஆனால், உச்சநீதிமன்றத்தில் வெளிக்கிழமை நடந்த விசாரணையின்போது, 98 சதவீத உறுப்பினர்கள் கூடி எடுத்த தீர்மானங்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இறுதியாக அவர்கள் தடை விதிக்க மறுத்து விட்டார்கள். அப்படியெனில், ஈபிஎஸ் தொடர்ந்து பொதுச் செயலாளராக நீடிப்பார். ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது தொடரும். திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்தது தொடரும் என்பதுதான் இதன் பொருள்.

ஏற்கெனவே இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் சேர்த்து விசாரிக்கும் என்று தெரிவித்தனர் இதில் பின்னடைவு என்று எதுவும் இல்லை," என்கிறார் இன்பதுரை.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், "கடைசி விசாரணை நடக்கும் வரை நாங்கள் எந்த தேர்தலும் நடத்த மாட்டோம் என்று நாங்களாகவே தான் நீதிமன்றத்தில் முன்வந்து கூறினோம்," என்கிறார் அவர். மேலும் ஓபிஎஸ் தரப்பினர் இது தொடர்பாக தவறாக செய்திகளில் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அதற்கு எப்படி தடை விதிக்க முடியும்? இதை தடை என்று ஓபிஎஸ் தரப்பினர் எப்படி கூறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது," என்கிறார் இன்பதுரை.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "பொதுக்குழு தேர்தல் நடத்த ஈபிஎஸ் தரப்பினர் அவசரப்படுகிறார்கள், இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று எங்கள் வழக்கறிஞர்கள் கேட்டனர். அதன் பிறகே, ஈபிஎஸ் தரப்பில் தாமாக முன்வந்து நாங்கள் எந்த தேர்தலும் நடத்த மாட்டோம் என்று கூறப்பட்டது.

அதன் பிறகுதான் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான்," என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில், நவம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி பிறப்பிக்கும் இறுதி உத்தரவே, அதிமுக கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.