புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (15:27 IST)

திமுக-காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா? காலத்தின் கட்டாயமா?

பாஜக, அதிமுக மற்றும் பாமக இடையே செவ்வாய்க்கிழமையன்று தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனைவரின் கவனமும் திமுக-காங்கிரஸ் மீது திரும்பியுள்ளது.
இன்று (புதன்கிழமை) மாலையில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி உடன்பாடு குறித்த கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கும் நிலையில், இக்கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகள் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணியே இயற்கையான கூட்டணி என இக்கட்சிகளிடையே கூட்டணி ஏற்படும்போதெல்லாம் கூட்டணி தலைவர்களும், அரசியல் பார்வையாளர்களும் கூறுவது வழக்கம்.
 
1980-இல் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இணைந்து போட்டியிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004 நாடாளுமன்ற தேர்தலில்தான் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
 
இடைப்பட்ட 24 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது.
 
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் இறுதி காலகட்டத்திலும், அவரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திலும் காங்கிரஸ் பெரும்பாலான தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது.
 
அக்காலகட்டத்தில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலைவர்கள் 'அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியே இயற்கையான தேர்தல் கூட்டணி' என தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கினர். தற்போது அதுவே திமுக, காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் பயன்படுத்தும் கோஷமாக மாறிவிட்டது.
 
2004இல் துவங்கிய திமுக-காங்கிரஸ் கூட்டணி பயணம், 2004-09 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடியும் காலகட்டத்தில் சிறு விரிசலை கண்டது.
இலங்கை உள்நாட்டு போர் தொடர்பாக அப்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வரும் கருணாநிதி சில எச்சரிக்கைகளை விடுத்தார்.
 
2009 நாடாளுமன்ற கூட்டணியில் இலங்கை போர் மாற்றம் ஏற்படுத்தும் என்று நிலவிய எதிர்பார்ப்புக்கு மாற்றாக, மீண்டும் இக்கட்சிகள் கூட்டணி அமைத்தன.
 
2004-இல், இக்கூட்டணியில் இருந்த மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள், 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்தன.
 
2009 நாடாளுமன்ற தேர்தல் காலகட்டத்தில் நடந்த ஈழப்போருக்கும், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதாக வந்த செய்திகளுக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் மீது அதிமுக மட்டுமன்றி, மதிமுக, பாமக போன்ற கட்சிகளும் கடுமையாக குற்றம்சாட்டின.
 
ஆனால், பல கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இக்கூட்டணியில் இடம்பெற்றது. மீண்டும் மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது.
 
ஆனால், இரண்டாவது முறையாக அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக-காங்கிரஸ் உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது.
 
விஸ்வரூபம் எடுத்த 2ஜி ஊழல் குற்றச்சாட்டால் திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
2011 தமிழக சட்டமன்ற தேர்தல் காலகட்டத்தில், திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய கட்டடத்தின் மற்றொரு தளத்தில் 2ஜி வழக்கு தொடர்பாக கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது திமுக தொண்டர்களை அதிர்ச்சியுற செய்தது.
 
இன்றளவும் சில திமுக தொண்டர்கள் இதனை கசப்பான நிகழ்வாக சுட்டிக்காட்டுவதுண்டு.
மேலும், இந்த தேர்தலில் விடாப்பிடியாக 63 இடங்களை கேட்டு போராடி பெற்ற காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. திமுகவும் தோல்வியுற்று அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்த போதிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் தந்ததும் தங்கள் தோல்விக்கு காரணம் என சில இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள் பேசினர்.

 
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இதுவரை நடந்தது என்ன?
‘மோடியா லேடியா’ - ஜெயலலிதா; ‘தமிழக அரசு ஓர் ஊழல் அரசு’ - அமித் ஷா - மலர்ந்த கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணி உதயம்: இரட்டை இலையும் தாமரையும் இணைந்தது
 
திமுக அமைச்சர் அங்கம் வகித்த தொலைத்தொடர்பு துறையில் நடந்ததாக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தங்களின் ஆட்சியில் கறை ஏற்படுத்தி விட்டதாக சில காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியதாக சில செய்திகள் கூறின.
 
இறுதியில் 2013-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து திமுக விலகியது.
 
தொடர்ந்து வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனியாக களம் கண்ட காங்கிரஸ் கட்சியும், சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுகவும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றன.
 
2016 சட்டமன்ற தேர்தல், மீண்டும் இந்த கட்சிகளை கூட்டணி அமைக்க வைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மிக அதிகம் என சில அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
 
மிக குறைந்த வித்தியாசத்தில் பல தொகுதிகளை இழந்த திமுக, 89 தொகுதிகளை வென்றது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி எட்டு தொகுதிகளை மட்டுமே வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் அதிமுகவே வென்றது. இதுவே திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியாததற்கு காரணம் என சில திமுக ஆதரவாளர்களை சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்ய வைத்தது.
 
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 தொகுதிகள் ஒதுக்கவுள்ளது என செய்திகள் வந்தவண்ணமுள்ளது. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தாராளமாக ஒதுக்கி, தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு திமுக பாதகத்தை ஏற்படுத்துகிறதா என சிலரால் ஐயம் தெரிவிக்கப்படுகிறது.
 
திமுக -காங்கிரஸ் தேர்தல் கூட்டணி குறித்தும், அதன் தாக்கம் தேர்தலில் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன் பிபிசி தமிழிடம் பேசினார்.
 
''அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக அமையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒர் இயற்கையான அரசியல் கூட்டணி என்றே கூறவேண்டும். இவ்விரு கட்சிகளும் 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களிலும், 2006 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளன,'' என்று நினைவுகூர்ந்தார்.
 
2011,2016 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் திமுகவுக்கு பாதகம் ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து பதிலளிக்கையில் ''சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. 2011,2016 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் தோற்றாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படும். அதன் பங்களிப்பும் தேர்தலில் அவ்வாறே அமையும்,'' என்று தெரிவித்தார்.
 
''திமுக கூட்டணியில் பல சிறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கலாம். அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே காங்கிரஸுக்கு திமுக இடங்களை ஒதுக்கும்'' என்று தெரிவித்தார்.
 
''வாசன் தற்போது காங்கிரஸ் கட்சியில் இல்லாதது அக்கட்சிக்கு ஓரிரு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மாற்று தேர்வாக காங்கிரஸ் கட்சி கருதப்படலாம்,'' என்று இளங்கோவன் மேலும் குறிப்பிட்டார்.
 
'அதேவேளையில் கடந்த கால வாக்கு சதவீதங்களை கணக்கில் எடுத்து கொண்டால் அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணியே , திமுக-காங்கிரஸ் கூட்டணியைவிட பலம் வாய்ந்தது. ஆனால் தற்போதுள்ள சூழலில் மக்களின் வாக்கு எந்த கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெளிவாக தெரியும்'' என்று இளங்கோவன் கூறினார்.
 
2004 காலகட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா காந்தியை ஒரு பொதுக்கூட்டத்தில் 'சொக்கத்தங்கம்' என திமுக தலைவர் கருணாநிதி புகழ்ந்தது பெரும் கவனத்தை ஈர்த்தது. இரு கட்சி தொண்டர்களிடையே கூடுதல் பிணைப்பையும் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
 
பின்னர் 2013-ஆம் ஆண்டு 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கருணாநிதி கூறியது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கொண்ட கூட்டணி குறித்துதான் என்று கூறப்பட்டது. இன்றளவும் இந்த வாக்கியம் அரசியல் மேடைகளிலும் சமூகவலைதளங்களிலும் விவாதப்பொருளாக அமைந்துள்ளது.
 
2011, 2014, 2016 என மூன்று பொது தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ள திமுகவும், காங்கிரஸும் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்கள். வெல்வார்களா? தமிழக அரசியலில் எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலளித்த காலமும், மக்களும் இந்த கேள்விக்கும் பதிலளிப்பர்.