திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (16:04 IST)

'மின்னஞ்சல் கூட அனுப்பாமல் பணிநீக்கம்' - குமுறும் ஐ.டி. ஊழியர்கள்

IT
தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் உலகளாவிய தலையீடுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் காரணமாக பெருமளவிலான பணிநீக்கங்களை அறிவிப்பதால் ஆயிரக்கணக்கான இளம் இந்தியர்கள் திடீரென்று நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளார்கள்.

அவர்களில் பலரும் இந்த விஷயத்தில் அமைதி காக்க மறுக்கிறார்கள். அக்டோபரில், ரவி (அவர் கோரியதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு பெரிய இந்திய கல்விசார் தொழில்நுட்ப நிறுவனத்தில் அவரும் பல சக ஊழியர்களும் தங்கள் பணியை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்தபோது, அவர் உடனடியாக அவர்களோடு ஒரு தனிப்பட்ட செய்திப் பறிமாற்றக் குழுவை உருவாக்கினார்.

ரவி மற்றும் அவரது குழுவினர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தவும் நிர்வாகத்தைக் கையாள்வதற்கான உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி விவாதிக்கவும் தேவைப்பட்ட “பாதுகாப்பான இடமாக” அந்தக் குழு விரைவில் மாறியது.

“இது குழுவிலுள்ள பலருக்கும் நிறுவனத்துடன் சிறந்த வெளியேற்றக் கொள்கைகளுக்கான பேச்சுவார்த்தை நடத்த உதவியது,” என்று ரவி கூறுகிறார்.

கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்குக் கடினமான காலமாக உள்ளது.

கல்விசார் தொழில்நுட்ப நிறுவனங்களான பைஜூஸ், அனாகாடமி, நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் குறைத்துள்ளன. சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தியர்கள் உட்பட அதன் 87,000 பணியாளர்களில் சுமார் 13% பேரை நீக்கியது.

தொடர் பணிநீக்கங்கள் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. மற்ற நாடுகளிலுள்ள அவர்களுடைய சகாக்களைப் போல, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவும் ஆதரவு வளையத்தை உருவாக்கவும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இணையத்தை நோக்கித் திரும்புகிறார்கள்.

அவர்கள் முறையற்ற பணிநீக்கம் குறித்து ட்விட்டரில் பதிவிடுகின்றனர், லிங்க்ட் இன்னில் வேலை கேட்கின்றனர், வாட்ஸ் ஆப், ஸ்லாக் போன்ற மெசேஜிங் தளங்களைப் பயன்படுத்தி சக ஊழியர்களை ஒன்று திரட்டுகின்றனர், அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்ட செய்தியாளர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


வெகுஜன பணிநீக்கங்கள் மிகவும் பொதுவானதாகி வருவதால், ஒரு காலத்தில் இந்தியாவில் பணிநீக்கங்களைச் சுற்றியிருந்த அவமானம் மற்றும் மௌன கலாசாரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறை நிபுணரான ப்ரீதா தத், இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட, பணிநீக்கங்கள் “செயல்திறன் சிக்கலாக” இருந்திருக்கலாம்.

“இன்று, பணிநீக்கங்கள், ஆட்குறைப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக நடைமுறைகளாகிவிட்டன. எனவே பணிநீக்கங்கள் இனி விவாதிக்கத் தடை செய்யப்பட்ட விஷயமாக இருக்கப் போவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்கள் தீர்வுக்கான ஒரு கருவியாக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றாலும், குரல்களை ஒன்றிணைக்கவும் வலுப்படுத்தவும், குறிப்பாக தொழிற்சங்கங்கள் முன்பு இருந்ததைப் போல சக்தி வாய்ந்ததாக இல்லாத சூழலில் உதவுவதாகவும் கூறுகிறார்கள்.

லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்னும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவற்றின் ஒட்டுமொத்த இயக்கம் பல ஆண்டுகளாக பலவீனமடைந்து கொண்டே வருகிறது. பெருகிவரும் தனியார் துறை வேலைகள், புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் ஒப்பந்த வேலைகளின் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் வலிமையைக் குறைப்பதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.

“முதலாளிகள் தங்களை அணுகக்கூடியவர்களாக மாற்றிக்கொண்டு வருவதோடு, சமூக ஊடகங்களும் ஊழியர்களுக்கு அவர்களின் குறைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகின்றன. இது பாரம்பரியமாக தொழிற்சங்கங்கள் பங்கு வகிக்கும், ஒரு மத்தியஸ்தரின் தேவையைக் குறைக்கிறது,” என்று கூறுகிறார் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் பேராசிரியர் சந்திரசேக ஸ்ரீபதா.

2,500 ஊழியர்களை “லாபத்தை அடைவதற்காக” பணிநீக்கம் செய்வதாக அக்டோபரில் பைஜூஸ் அறிவித்த பிறகு, அதன் ஊழியர்களில் பலர், பெரும்பாலும் அநாமதேயமாக ஊடகங்களில் நிறுவனத்தின் கலாசாரம், அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் பற்றிப் பேசி வருகின்றனர்.

பணிநீக்கம் செய்யபட்ட ட்விட்டர் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ட்விட்டர் ஊழியர் ஒருவர், “உறுதிப்படுத்தலுக்கான மின்னஞ்சல் கூட இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். நிலைமை இன்னும்கூட மோசமாக முடியும்,” என்று எழுதியுள்ளார்.

“வேலை சந்தை விரிவடைந்து வருவதால், ஊழியர்கள் தங்கள் திறன்களின் சந்தைப்படுத்தல் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆகவே, சமூக ஊடகங்களில் ஒரு நபரை அல்லது நிறுவனத்தைக் குறிப்பிட்டு விமர்சிப்பதன் மூலம் தங்களுக்கான வாய்ப்பு தவறிப்போகும் என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களின் உரிமைகளுக்காக நிற்பதற்குத் தயங்குவதும் இல்லை,” என்று ப்ரிதா தத் கூறுகிறார்.

இந்தப் பொதுச் சீற்றம் சிலநேரங்களில் உதவலாம், உணர்ச்சியற்ற முறையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததற்காக அல்லது நச்சு மிகுந்த பணியிடகலாசாரத்தை ஊக்குவிப்பதற்காக முதலாளிகள் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும்.


ஆனால், இந்த வெற்றி ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவும் குறுகிய காலமே இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காமல் போகலாம். இது எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பாதிக்கலாம் அல்லது தங்கள் முதலாளியிடம் இருந்து சட்டபூர்வ நடவடிக்கை வரலாம் என்று கவலைப்படுவதால் பலர் பேசுவதற்கு அஞ்சுகின்றனர்.

அதனால் தான் பல ஊழியர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவும் வேறு வழிகளைத் தேடுகிறார்கள்.

திருவனந்தபுரத்தில், தங்களை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாகக் கூறி 140 பைஜூஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கேரள அமைச்சர் ஒருவரையும் சந்தித்தனர். அவர் இந்த விஷயத்தில் விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் தனது செயல்பாட்டை நிறுத்தும் முடிவை மாற்றிக்கொண்டதாக பைஜூஸ் கூறியது.

ஒரு கல்விசார் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூன்று முன்னாள் ஊழியர்கள் பிபிசியிடம் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையோடு பேசியபோது, நிறுவனத்துடன் பணிநீக்கம் மற்றும் நோட்டீஸ் காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் ஒரு தொழிற்சங்கத்துடன் இணைந்து வேலை செய்ததாகத் தெரிவித்தனர்.

2018 முதல் நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தொழிலாளர் தகராறுகளில் உதவி செய்து வரும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமான, அகில இந்திய ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பணியாளர்கள் சங்கத்தின் பெங்களூரு பிரிவின் தலைவர் சுமன் தஸ்மஹாபத்ரா, சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை சீராக வளர்ந்து வருவதாகக் கூறினார்.

மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது இன்னும் சிறிய அளவு தான் என்பதை ஒப்புக்கொள்பவர், பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தொழிற்சங்கங்களின் ஒரு பகுதியாக இருப்பதில் இன்னும் சங்கடம் இருப்பதாகக் கூறுகிறார். அதற்குக் காரணம், நிர்வாகம் பழிவாங்கிவிடுமோ என்ற அச்சம் அல்லது “அவர்கள் தங்களை ஒரு ‘தொழிலாளராக’ கருதுவதில்லை.”

ஆனால் உலகப் பொருளாதார சக்திகள் மற்றும் வேலை சந்தைக்கு நடுவிலான முரண்கள் மேலும் நிலையற்றதாக மாறுவதால், தொழிற்சங்கமயமாக்கலில் இந்தியா மீண்டும் எழுச்சி பெறும் என்று தான் நம்புவதாக தஸ்மஹாபத்ரா கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், அமேசான், ஸ்டார்பக்ஸ், ஆப்பிள் போன்ற அமெரிக்க ஜாம்பவான்கள் தங்கள் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்குவதைக் கண்டுள்ளனர். மேலும், தொழிற்சங்கத்திற்கான அழைப்புகள் இன்னும் அதிகமாக வளரக்கூடும் என்றும் அனைத்து தொழில்களுக்கும் பரவக்கூடும் என்றும் இதைக் கூர்ந்து கவனித்து வரும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் பேராசிரியர் ஸ்ரீபதா இதை ஏற்கவில்லை. முற்போக்கான, மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் பணியிடங்கள் ஏற்கெனவே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டதால், தொழிற்சங்கங்களின் பெருக்கம் மற்றும் அதை வலுப்படுத்துவது தேவையில்லை என்று அவர் கூறுகிறார்.

“தொழிற்சங்கங்கள் மோசமான மக்கள் நிர்வாகத்தின் ஒரு விளைபொருள். முதலாளிகள் தோல்வியடையும்போது, தொழிற்சங்கங்கள் எழுகின்றன. இன்று முதலாளிகளுக்குப் பின்னறிவு பலன் உள்ளது. எனவே மக்களை வணிகத்தின் மையமாக மாற்றும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

“ஆனால், அடிக்கடி நாம் காண்பதைப் போல, நிறுவனங்கள் உணர்ச்சியற்ற, இரக்கமற்ற முறையில் மக்களைப் பணிநீக்கம் செய்வதைத் தொடர்ந்தால், கதை வேறுமாதிரியாக இருக்கலாம்.