திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2022 (15:06 IST)

COP27: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன?

வெப்பக்காற்று, புயல், சீரற்ற பருவமழை, வெள்ளம், வறட்சி என தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதில் பல நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளதா?

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தாண்டின் பருவநிலை மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக்கில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

இது காலநிலை தொடர்பான 27ஆவது மாநாடு என்பதால் COP27 என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி உதவி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா மாதிரியான நாடுகள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன என்பது குறித்து அறியவும் இந்த மாநாடு நல்வாய்ப்பாக இருக்கும்.

இந்தியா என்ன வாக்கு கொடுத்துள்ளது?

உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக்கூடாது என்பதை வலியுறுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 200 நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதை வலியுறுத்துகின்றன.

எனவே ஒவ்வொரு நாடும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் (NDC) தொடர்பான விவரங்களை சமர்பிக்க வேண்டும். அதில், ஒரு நாடு எவ்வளவு கார்பன் உமிழ்வைக் குறைக்க உறுதியளிக்கிறது மற்றும் அவை எவ்வாறு சாத்தியப்படுத்தப்படும் என்ற விவரங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியா அளித்துள்ள மூன்று வாக்குறுதிகள்

இந்தியா தன்னுடைய கார்பன் உமிழ்வை 2030ஆம் ஆண்டிற்குள் 45 சதவிகித அளவிற்கு குறைக்கும்.

2030ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்.

காடுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்தி 2.5 முதல் 3 பில்லியன் டன் மதிப்பிலான கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வளிமண்டலத்தில் மட்டுப்படுத்தும்.

இதற்கு என்ன அர்த்தம்?

சுத்தமான எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், குறைவான உமிழ்வு கொண்ட பொருட்கள் மற்றும் மின்னணு வாகனங்கள் போன்ற பல திட்டங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்றும் அதற்கான உதவிகள் வழங்கும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட NDC பற்றிய தகவலை வெளியிடும் போது, மத்திய அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், "இந்தியாவின் NDC தனிப்பட்ட எந்தத் துறையையும் சார்ந்தது அல்ல என்றும் ஒட்டுமொத்த உமிழ்வு தீவிரத்தை குறைப்பதும், காலப்போக்கில் அதன் பொருளாதாரத்தின் ஆற்றல் திறனை மேம்படுத்துவதும், அதே நேரத்தில் நமது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரம் மற்றும் பிரிவுகளைப் பாதுகாப்பதும் இந்தியாவின் குறிக்கோள் என்று குறிப்பிடப்பட்டிருந்த்து.

கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 மாநாட்டில், இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய பிரதமர் நரேந்திர மோதி இலக்கு நிர்ணயித்தார்.

ஐ.நா. வரையறையின்படி, 'நிகர பூஜ்யம்' என்பது பசுமை இல்ல வாயு உமிழ்வின் அளவும், அது உறிஞ்சிக்கொள்ளப்படும் அளவும் சமமாக இருப்பதாகும்.

ஒரு நாடு வளிமண்டலத்தில் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் முற்றிலும் உறிஞ்சிக்கொள்ளப்படும்போது நிகர பூஜ்ஜிய இலக்கு அடையப்படும்.

இந்த இலக்கை அடையும் பொருட்டு, இந்திய ரயில்வே 2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்திய ரயில்வே ஆண்டுதோறும் அதன் உமிழ்வை 60 மில்லியன் டன் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல, இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி விளக்கு இயக்கம் ஆண்டுதோறும் 40 மில்லியன் டன் உமிழ்வைக் குறைக்கிறது.

ஆற்றல் துறையில் உள்ள சவால்கள்

2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியா கூறியுள்ளது.

நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் உயிரி ஆற்றல் உதவியுடன் அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும்.

சுத்தமான எரிசக்தியின் பயன்பாடு தற்போது அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிந்தாலும், அதன் வேகம் இந்தியா எதிர்பார்த்த அளவில் இல்லை.

இன்றும்கூட, புதைபடிவ எரிபொருள் மூலம் கிடைக்கும் அனல் மின்சாரத்தையே இந்தியா பெரும்பாலும் சார்ந்துள்ளது. இந்த முறையில் நிலக்கரி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் நிறுவப்பட்ட புதிய மின்நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் 60 சதவிகிதம் அனல் மின் நிலையங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் நிலக்கரி பயன்பாடு குறைவதற்குப் பதிலாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் இதை சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில், மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையின்படி சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியா பின்தங்கியே உள்ளது. 2022 டிசம்பருக்குள் அதன் திறனை 175GW ஆக உயர்த்தவும், சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கில் இருந்து இந்தியா வெகு தொலைவில் உள்ளது. இந்தியா தற்போது 116 ஜிகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த வகையில் உற்பத்தி செய்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எரிசக்தி தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சுத்தமான ஆற்றல் ஆதாரங்கள் மூலம் மட்டுமே அதில் தன்னிறைவு அடைவது பெரும் சவால்.

காடு வளர்ப்பில் உள்ள பிரச்னை

2.5 முதல் 3 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சக்கூடிய அளவிற்கு காடுகள் மற்றும் மரங்களை வளர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

வன ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் 2019-21ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் உண்மை வேறு மாதிரி இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிபுணர் அதுல் தியோல்கோகர் சுட்டிக்காட்டுகிறார்.

பச்சை நிறத்தால் மூடப்பட்ட அனைத்து இடங்களும் காடுகள் அல்ல. இந்தியாவில், காடுகளின் பரப்பை அளவிடும் போது, தாவரங்களின் அடர்த்தி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் புதர்கள் மற்றும் பயிர் செய்யப்படும் இடங்கள்கூட காடுகளாக கணக்கிடப்படுகின்றன.

காடுகள் இயற்கையாக உருவாகும் என்றும் அதற்கு சிறந்த பாரம்பரியம் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

2019 மற்றும் 2021ஆம் ஆண்டு வன ஆய்வு அறிக்கையை ஒப்பிடுகையில், சதுப்புநிலங்களின் பரப்பளவு 17 சதுர கி.மீ மட்டுமே அதிகரித்துள்ளது. இது போதுமானதா?

மாநில அரசின் திட்டங்கள் என்ன?

NDC இலக்குகளை அடைய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்தாண்டு செப்டம்பரில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது, இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில், மாநில அரசின் செயல் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்ட்து.

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது.

இந்தாண்டு மார்ச் மாதத்தில் மும்பை நகருக்கான காலநிலை செயல்திட்டத்தை மும்பை மாநகராட்சி அறிவித்த்து. நிகர பூஜ்ஜிய இலக்கை மும்பை 2050ஆம் ஆண்டிற்குள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவநிலை இலக்கை ஆதரிப்பதற்கான நிதி உதவி

கார்பன் உமிழ்வைக் குறைப்பது என்பது வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு எளிதானது அல்ல என்பதால் COP 27 மாநாட்டில் நிதி உதவி குறித்த விவாதம் மையமாக இருக்கும்.

மின்சார விநியோக தேவையைப் பூர்த்தி செய்ய, சுத்தமான எரிசக்தி துறையில் பெரிய முதலீடுகள் அவசியம். இந்தியாவும் ஆற்றலைச் சேகரிப்பதற்கான சேமிப்புத் திறனைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக இந்தியாவிற்கு 401 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா சர்வே கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவாதங்களும் COP27 மாநாட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு 2020ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக கடந்த 2009ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் பணக்கார நாடுகள் உறுதியளித்தன.

இந்தாண்டு அது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளரும் நாடுகள் சார்பாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.