வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (10:08 IST)

ராணுவ தினம்: இந்திய ராணுவத்தினருக்கு ஜன. 15-ல் டிஜிட்டல் பிரின்டிங் சீருடை!

இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புது சீருடையை ஜனவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

 
 
இந்திய ராணுவ தினம் ஜனவரி 15ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் 13 லட்சம் பேர் கொண்ட இந்திய ராணுவத்துக்கு புது வடிவ சீருடை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
 
இது பற்றி நீங்கள் அறிய வேண்டிய சில தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
இந்திய ராணுவத்தினருக்கான புதிய சீருடையை தேசிய ஆயத்த ஆடை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIFT) இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த புது வடிவ சீருடை அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் டிஜிட்டல் அச்சு வடிவிலான அம்சத்தைக் கொண்டது.
 
பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், காடு, மலை, பனிக்காலங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு உகந்ததாகவும் இந்த ஆடை இருக்கும்.

இந்த சீருடையில் மேல்சட்டையை ராணுவத்தினர் கால்சட்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியே தொங்க விட்டிருக்க வேண்டும்.
 
புதிய உருமறைப்பு வண்ணக்கலவை சீருடை மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்திய ராணுவ தின கொண்டாட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, வெவ்வேறு காலகட்டத்தில், குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் இருந்தது முதல் தற்காலம் வரை இந்திய ராணுவ பயன்படுத்தி வந்த சீருடைகளில் வீரர்கள் அணி, அணியாக அணிவகுத்துச் செல்வர்.
 
அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் அணிவகுப்பில் ஏந்திச் செல்வர்.
 
இந்த சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கும் வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
குடியரசு தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையிலேயே ராணுவ வீரர்கள் அணிவகுத்து செல்வர்.
 
இந்த ராணுவ சீருடைகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வராது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இதை பெற முடியும். போலிகளை கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய சீருடை தேசிய அளவில் முழுமையாக அமல்படுத்த 6 முதல் 8 மாதங்களவரை ராணுவ பிராந்திய தலைமையகங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
 
இதற்கு முன்பு எப்போது சீருடை மாற்றம் செய்யப்பட்டது?
இந்திய கடற்படை வீரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.
 
அதே சமயம், இந்திய ராணுவம், இதற்கு முன்பு மூன்று முறை அதன் சீருடையில் முழு மாற்றத்தை செய்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகளின் சீருடைகள் வித்தியாசமாக இருப்பதை உறுதி செய்வதற்காக முதல் மாற்றம் செய்யப்பட்டது.1980ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றம், போர்க்கள சீருடை முறை (டிபி) என்று அழைக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டில், மூன்றாவது முறையாக செய்யப்பட்ட மாற்றம், இந்திய துணை ராணுவ படைகளான சிஆர்பிஎஃப் என்றழைக்கப்படும் இந்திய ரிசர்வ் காவல் படை மற்றும் பிஎஸ்எஃப் என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களிடம் இருந்து தமது வீரர்களை தனித்துவப்படுத்திக் காட்ட மேற்கொள்ளப்பட்டது.