புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (15:36 IST)

சசிகலா இல்லாத நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களைக் கைவிட்டதா தினகரனின் அ.ம.மு.க?

சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகும் அ.ம.மு.க வேட்பாளர்கள் பலரும் சோகத்தில் உறைந்துள்ளனர். `கடைசி நிமிடம் வரையில் பணம் தராமல் தலைமை ஏமாற்றிவிட்டது' என அவர்கள் மனம் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அணிகளைத் தவிர்த்து தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையில் ஒரு கூட்டணியும், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. இதில், அ.ம.மு.கவுடன் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இந்தக் கட்சிகளில் தே.மு.தி.கவுக்கு 60 இடங்களும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 3 தொகுதிகளையும் தினகரன் ஒதுக்கினார். மற்ற தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் களமிறங்கினர்.

சசிகலாவிடம் ஆசி

`அ.தி.மு.கவை மீட்பதே நமக்கு இலக்கு' எனத் தொண்டர்களிடம் தினகரன் உறுதியாகப் பேசி வந்தார். அதற்கேற்ப, சசிகலாவின் தமிழக வருகையும் அ.ம.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அடுத்து வந்த நாள்களில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவிக்கவே, அ.ம.மு.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதன்பின்னர், சசிகலாவின் டெல்டா பயணத்தின்போது அவரை நேரில் சந்தித்து அ.ம.மு.க வேட்பாளர்கள் ஆசி பெற்ற சம்பவங்களும் நடந்தன.

``ஆனால், தேர்தலில் களநிலவரம் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. இந்தத் தேர்தலை முழு அக்கறையோடு தினகரன் கையாளவில்லை. அ.தி.மு.கவின் அமைச்சர் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை. மே 2 வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்தக் கட்சி இருக்குமா எனத் தெரியவில்லை" என வேதனையோடு பேசுகிறார் டெல்டா மாவட்ட தொகுதி ஒன்றில் போட்டியிட்ட அ.ம.மு.க வேட்பாளர் ஒருவர். தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார்.

 தேர்தல் பிரசாரத்தில் தங்களின் சொந்தப் பணத்தையே அ.ம.மு.க வேட்பாளர்கள் செலவிட்டனர். கட்சித் தலைமையில் இருந்து எந்த வேட்பாளருக்கும் பணம் சென்று சேரவில்லை. இந்தத் தேர்தலின் மூலம் பலரும் பெரும் கடனாளியாக மாறிவிட்டனர். டெல்டா மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.கவின் முக்கிய வேட்பாளர் ஒருவருக்கு மட்டும் பெரும் தொகை கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதுவும் 5 தொகுதிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அந்தத் தொகையை அவரே எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தலைமைக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்தல் பிரசாரத்தின் கடைசிக் காலகட்டத்தில் சென்னை புறநகர் வேட்பாளர் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது அவர்கள், ` சார்.. பூத் செலவுக்குக்கூட இன்னும் பணம் கொடுக்கவில்லை. கடைசி நாள் செலவுக்கு மட்டும் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எங்களிடம் சுத்தமாக பணம் இல்லை. இதையறிந்து பூத் நிர்வாகிகளும் வேலை பார்க்க மறுக்கின்றனர்' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதில் அளித்த முக்கிய நிர்வாகி ஒருவர், `

கட்சியில் இருக்க விருப்பம் இருந்தால் இரு.. இல்லாவிட்டால் போய்விடு' எனக் கூறியிருக்கிறார். இதனால் வேதனைப்பட்ட அவர்கள், அடுத்தகட்ட நிர்வாகிகளின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களால் எந்தப் பதிலையும் கொடுக்க முடியவில்லை. இப்படித்தான் கட்சியின் நிலைமை உள்ளது" என ஆதங்கப்பட்டார்.

எல்லாம் சம்பிரதாயம்தான்

`` அ.தி.மு.கவை மீட்பதே இலக்கு என்றால், 30 அமைச்சர்களின் தொகுதிகளிலும் முறையாகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதுதொடர்பாக, நேர்காணலைக்கூட தினகரன் சரியாக நடத்தவில்லை. உதாரணமாக, வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும்போது, `சசிகலாவால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' என்றார். அவரைத் தோற்கடிக்க யாரை நிறுத்தலாம் என விவாதித்திருக்க வேண்டும். பத்து தொகுதிகளைச் சேர்ந்தவர்களை மொத்தமாக அமர வைத்து, `இந்தத் தொகுதியில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறீர்கள்?' என டி.டி.வி கேட்பார்.

இதையடுத்து, 12 பேர் எழுந்து நின்றால், `இவர்களில் ஒருவர்தான் வேட்பாளர். யாருக்கு சீட் கொடுத்தாலும் மற்றவர்களும் அவருடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும். தொகுதிக்குள் தேர்தல் வேலைகளைச் சிறப்பாகக் கவனியுங்கள். அ.தி.மு.கவை நாம் கைப்பற்றுவோம்' எனக் கூறிவிட்டு தினகரன் கிளம்பிவிடுவார். ஒரு சம்பிரதாயமாகவே இவையெல்லாம் நடந்தன" என்கிறார் தென்மாவட்டத்தில் போட்டியிட்ட அ.ம.மு.க வேட்பாளர் ஒருவர்.

பேச்சுக்காகத்தான் சொன்னேன்

"எங்களையெல்லாம் அழைத்து தஞ்சாவூர் ரங்கசாமி நேர்காணல் நடத்தினார். அவர் கேட்ட முதல் கேள்வியே, `உங்களால் ஒரு கோடி ரூபாயை செலவு செய்ய முடியுமா?' என்பதுதான். இதில் ஆச்சர்யமான விஷயம், ஒரு தொகுதியின் நேர்காணலின்போது, `நான் 1 கோடி ரூபாய் செலவு செய்வேன்' என நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அந்த நபர் விருப்ப மனுவையே கடன் வாங்கித்தான் வாங்கினார். அந்த நபரிடம், `சரி உனக்கு சீட் தருகிறோம். 3 நாளைக்குள் 1 கோடி ரூபாயை எங்கள் கண்களில் காட்ட வேண்டும்," எனக் கூறியுள்ளனர்.

அருகில் இருந்த இன்னொரு நிர்வாகியும், "பரவாயில்லை. அவருக்கு ஒரு கோடி செலவு பண்ற அளவுக்கு கெப்பாசிட்டி இருக்கு. அவருக்கே கொடுங்கள்' என அதிருப்தியை வெளிக்காட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார். அடுத்த 3 நாளில் அந்த நபருக்குப் போன் செய்தபோது, ` நான் ஒரு பேச்சுக்காகத்தான் சொன்னேன். உடனே பணம் கேட்பீர்களா?' எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்."

அலட்சியம் ஏன்?

அதன்பிறகு வேறொரு நிர்வாகியைத் தொடர்பு கொண்டு, `நீங்களாவது நிற்க வேண்டும்' எனக் கெஞ்சியுள்ளனர். அவரோ, ` என் தொகுதியில் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய்னு அமைச்சர் செலவு செய்ய உள்ளார். நீங்களும் உதவி செய்தால்தான் என்னால் போட்டியிட முடியும். இல்லாவிட்டால் கட்டு வெடிக்கு முன்னாடி பொட்டு வெடி வெடிப்பது போலத்தான் இருக்கும்' எனக் கூறியுள்ளார். ஒருகட்டத்தில் அந்தத் தொகுதியில் மிகக் குறைவான வாக்குகள் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுத்தனர். அமைச்சர்களைத் தோற்கடிப்பதுதான் இலக்கு என்றால், இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` ஒரு சில வேட்பாளர்களுக்கு மட்டும் 25 லட்ச ரூபாய் என்ற அளவில் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. ஆனால், `பெரும் தொகை கொடுப்போம்' என தொடக்கத்தில் உறுதி கொடுத்தனர். கடைசியில், `மூன்று இடங்களில் பணம் லாக் ஆகிவிட்டது. இப்போது எடுத்தால் சிரமம் ஆகிவிடும்' என மேலிடத்தில் இருந்து வேட்பாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தலைமை மீதான அதிருப்தியால் மாற்றுக் கட்சிகளில் இணைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொங்கு கொடுத்த அதிர்ச்சி

மயிலாடுதுறையில் போட்டியிட விரும்பிய நிர்வாகி ஒருவர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செம்பனார்கோவில் சேர்மனாக இருந்தார். அவருக்கு சீட் கிடைக்காததால், அ.தி.மு.கவில் இணைந்துவிட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான நிலக்கோட்டை சுந்தர்ராஜனுக்கு சீட் கொடுக்காமல், அந்தத் தொகுதியை தே.மு.தி.கவுக்கு ஒதுக்கிவிட்டனர். இதனால் கொதித்துப் போன சுந்தர்ராஜனும் பரமக்குடி முத்தையாவும் அ.தி.மு.கவில் இணைந்துவிட்டனர். இந்தத் தேர்தலில் பலரும் அ.தி.மு.கவில் இணைந்ததைப் பார்க்க முடிந்தது.

நாமக்கல் மாவட்ட வேட்பாளர் ஒருவர், ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். அங்கு பிரசாரம் செய்வதற்கு தினகரன் சென்றபோது, வேட்பாளரும் இல்லை, மாற்று வேட்பாளரும் இல்லை. இதனால் அதிருப்தியடைந்து பிரசாரம் செய்யாமல் திரும்பிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் காட்டிய ஆர்வத்தைக்கூட இந்தத் தேர்தலில் தினகரன் காட்டவில்லை. தேர்தல் செலவுக்கு சசிகலா தரப்பில் இருந்து பணம் கொடுக்கப்படவில்லை. மே 2ஆம் தேதிக்குப் பிறகு அ.ம.மு.க என்ற கட்சி இருக்குமா என்ற சந்தேகமும் எங்களுக்குள் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகும் வேட்பாளர்களின் துயரங்களைக் களைவதற்கான முயற்சிகளில் தினகரன் ஆர்வம் காட்டவில்லை" என்கிறார்.

தினகரனின் சூழல் அப்படி

வேட்பாளர்களின் துயரங்கள் தொடர்பாக, அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தலைமை எந்தச் சூழலிலும் அலட்சியமாக இல்லை. சொல்லப் போனால், எங்கள் தலைமையின் சூழல் அப்படி அமைந்துவிட்டது. சின்னம்மாவும் லாக் ஆகிவிட்டார். டி.டி.வி.தினகரன் சாரும் லாக் ஆகிவிட்டார். மற்றபடி, நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகச் சிறப்பாக வேலை பார்த்தார்கள்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` தென் மாவட்டத்திலும் டெல்டாவிலும் களநிலவரத்தை முழுமையாகக் கவனித்தோம். நாங்களே எதிர்பார்க்கவில்லை. இதில் பலரும் பணத்தை எதிர்பார்க்காமல் அ.ம.மு.கவுக்காக கடுமையாக தேர்தல் வேலை பார்த்தார்கள். கூட்டணிக் கட்சியாக தே.மு.தி.கவும் எங்களோடு இணைந்து உழைத்தது. நாமக்கல் உள்பட ஒரு சில தொகுதிகளில் உள்ள சிலர் மட்டும் அ.தி.மு.க பக்கம் சாய்ந்தார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் 95 சதவிகித நிர்வாகிகள் சிறப்பாகத் தேர்தல் வேலை பார்த்தார்கள். இந்தத் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்" என்கிறார்.