செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (22:25 IST)

கொரோனா வைரஸ்: மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் புதிதாக 109 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியான நிலையில், 120 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் இன்று 23 வயது இளம்பெண் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது மலேசியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 1,608 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இது நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 38 விழுக்காடாகும். தற்போது 72 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 43 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார்.

சுயதொழில் புரிவோரில் 50 விழுக்காட்டினருக்குக் கடும் பாதிப்பு

 

 

இதற்கிடையே மலேசியாவில் சுயதொழில் செய்பவர்களில் குறைந்தபட்சம் சரிபாதி எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்ப்படும் பட்சத்தில் சுயதொழில் செய்வோர் மேலும் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மலேசிய புள்ளிவிவரத்துறை சார்பில் நாடு தழுவிய அளவில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 23 முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் 11.7 விழுக்காட்டினர் சுயதொழில் புரிபவர்கள், மற்றும் அவர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆவர்.

'பொருளாதாரமும் தனி நபரும் - கோவிட் 19ன் தாக்கம்' என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கருத்து தெரிவித்த சுயதொழில் புரிவோரிடம் பணியாற்றும் தொழிலாளர்களில் 46.6 விழுக்காட்டினர் தங்கள் வேலையை இழந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

சுயதொழில் புரிவோரில் சுமார் 4,877 பேர் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 24 விழுக்காட்டினர் இனி தொழிலைத் தொடர்ந்து நடத்த இயலாத அளவுக்கு கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சுயதொழில் புரிவோரிடம் பணியாற்றும் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினர் தங்களது ஊதியம் குறைந்துவிட்டதாகவும், 35 விழுக்காட்டினர் தங்களது ஊதியம் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக சரிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

சுயதொழில் புரிவோரும், அவர்களிடம் பணியாற்றுவோரும் தங்களிடம் உள்ள சேமிப்பைக் கொண்டு ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் தாங்கள் பாதிக்கப்படவில்லை என ஆறு விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ள நிலையில் 52 விழுக்காட்டினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே பொதுநடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை ரமலான் முடியும் வரை நீட்டிக்க வேண்டும் என மலேசிய மருத்துவ அகாதெமி வலியுறுத்தி உள்ளது.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை ஒட்டி பலரும் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்புவது, ஒரே இடத்தில் அதிகளவில் ஒன்று கூடுவது, போக்குவரத்து அதிகரித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலையை மோசமடையச் செய்யும் என மருத்துவ அகாதெமி கவலை தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வு பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கேள்விக்குறியாகும் என்றும், இதனால் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அகாதெமி சுட்டிக்காட்டியுள்ளது.

நான்கு வாரங்களாக கடைபிடிக்கப்படும் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் விளைந்த பலன்கள், நன்மைகள் சீர்குலைந்து போகும் என்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பயனற்றதாக்கிவிடும் என்றும் மலேசிய மருத்துவ அகாடமி அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளது.

பெருநாளின்போது நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிட விரும்புவர். எனினும் இதுவரை கேள்விப்பட்டிராத கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்வரை இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம்.

"நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால் இந்தத் தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்," என மலேசிய மருத்துவ அகாதெமி வலியுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பொதுக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்து 23 நாட்களாகி உள்ள நிலையில் இன்னமும் பலர் அதை மீறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தடைக்காலத்தில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிவதாக மூத்த அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசு உத்தரவை மீறுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், கடந்த செவ்வாயன்று கைதானோரின் எண்ணிக்கை 13 விழுக்காடு அதிகரித்ததாக சுட்டிக் காட்டினார். கடந்த திங்கட்கிழமை 403 பேர் மீதும், செவ்வாய்க்கிழமை 456 பேர் மீதும் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக மலேசியப் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் உறவினர் வீடுகளுக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது போன்ற தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று சங்கிலியை உடைக்க அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஒட்டுமொத்த மலேசியர்களின் பொறுப்பு என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 10ஆம் தேதி பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்

 

 

இதற்கிடையே, பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஏப்ரல் 10ஆம் தேதி முடிவு செய்யப்படும் என மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

நாளை காலை தானும், சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமரை நேரில் சந்திக்க இருப்பதாக சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்தார். அச்சமயம் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை பிரதமரிடம் அளிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"தற்போது கைவசம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். அதன் அடிப்படையில் பிரதமரிடம் சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் ஒப்படைக்கப்படும்," என்றார் நூர் ஹிஷாம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா, அதுகுறித்து பிரதமர் எப்போது அறிவிப்பார்? என்ற கேள்விக்கு, "இதுகுறித்துப் பிரதமரிடம்தான் கேட்கவேண்டும்," என நூர் இஷாம் பதிலளித்தார்.

எனினும் தற்போதைய சூழலில் மலேசியாவில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என்றே பரவலாகப் பேசப்படுகிறது."