சீனாவை விட பிற நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!!
கொரோனா வைரஸ் தொற்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.
உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.இரண்டாவது நாளாக சீனாவுக்கு வெளியே அதிகப்படியான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இரான் மற்றும் இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டிலிருந்து பயணம் செய்பவர்களாலும் இந்த தொற்று பரவி வருகிறது.
இரானில் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரான் பெண்கள் மற்றும் குடும்ப நல விவகாரங்களின் தலைவர் மாசுமே எப்டெகாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சுமார் 50 நாடுகளில் 80,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் பலர் சீனாவின் ஹூபே மாகணத்தை சேர்ந்தவர்கள்.
பல நாடுகளில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வர்த்தக போக்குவரத்து குறையலாம் என்ற அச்சத்தால் பங்குச் சந்தை மதிப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.