வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (16:33 IST)

கொரோனா வைரஸ்: 2000-ஐ கடந்த பாதிப்பு- இந்தியாவுக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர்கள் நிதியுதவி

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301ஆக உயர்ந்துள்ளது. அதில் 156 பேர் குணமாகியுள்ளனர், என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உள்ளது.

இன்று (ஏப்ரல் 3) இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு, ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், மற்றும் மாநிலங்களின் நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கலந்துரையாடினர்.

பிரதமர் மோதியின் செய்தி

அந்த காணொளியில், ``கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான நமது போராட்டத்தை குறிக்கும் வகையில் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு மொபைல் போனின் பிளாஷ் லைட் அல்லது அகல் விளக்கை, 9 நிமிடங்கள் ஏற்றி வையுங்கள்`` என மோதி தெரிவித்திருந்தார்.

அதே சமயம் இந்த நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்த்து தங்கள் வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியிலோ விளக்குகளை ஏற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டாலைரை வழங்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை எதிர்த்து போராடும் வளர்ந்த நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த அவசர நிதியம் வழங்கப்படவுள்ளது.

"கோவிட் 19க்கு எதிராக போராடும் வளர்ந்துவரும் நாடுகளின் திறனை வளப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக அந்நாடுகள் விரைவில் மீண்டு வரவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்." என உலக வங்கியின் தலைவர், டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. அவர் தங்கியிருந்த கட்டடம் முழுக்க சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாட்டில் நேற்று 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என மாநில அரசு தெரிவித்திருந்தது.

நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், தற்போது தமிழ்நாட்டில் 309 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இவர்களில் 264 பேர் டெல்லி மாநாடு தொடர்புடைய நோயாளிகள் என அறியப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று மாலை முதல் இன்று காலைவரை 399 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 118 இரு சக்கர வாகனங்கள், 4 இலகு ரக வாகனங்கள், 4 ஆட்டோக்கள் உள்பட 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 144 தடை உத்தரவைச் செயல்படுத்த நகரம் முழுவதும் 148 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.