வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (20:02 IST)

சினிமா விமர்சனம்: தேவராட்டம்

திரைப்படம் தேவராட்டம்
நடிகர்கள் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, போஸ் வெங்கட், வினோதினி, ஃபெப்சி

விஜயன், வேல ராமமூர்த்தி
 
இசை நிவாஸ் கே பிரசன்னா
 
ஒளிப்பதிவு சக்தி சரவணன்
 
இயக்கம் முத்தைய்யா
 
 
`கொம்பன்', 'குட்டிப்புலி', `மருது', `கொடிவீரன்' படங்களுக்கு அடுத்து முத்தைய்யா இயக்கியிருக்கும் படம் தேவராட்டம்.
 
அவரது முந்தைய படங்களின் வரிசையை வைத்து இந்தப் படத்தின் பின்னணியை ஒருவாறாக யூகித்துக்கொள்ள முடியும்.
 
மதுரை மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வெற்றியை (கௌதம் கார்த்தி) அவரது சகோதரிகள் வளர்த்து, படிக்கவைக்கிறார்கள். வழக்கறிஞர் ஆகிறார் வெற்றி.
 
அதே மாவட்டத்தைச் சேர்ந்த கொடும்பாவி கணேசன் (ஃபெப்சி விஜயன்) தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவிக்கும் நபர்.
 
கணேசனின் மகன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு பெண் விவகாரத்தில் தலையிட நேர்ந்தபோது, கணேசனின் மகனை வெற்றி கொலைசெய்துவிடுகிறான்.
 
அதற்கு பழிவாங்கத் துடிக்கும் கணேசன், வெற்றியின் சகோதரியையும் (வினோதினி) அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொன்றுவிடுகிறான். பிறகு என்ன நடக்கும்.. அதேதான்.
 
அநியாயத்தைக் கண்டால் தட்டிக்கேட்கும் ஓர் இளைஞன், கொடூரமான வில்லனின் வழியில் குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன் - லைன்.
 
ஆனால், இதைத் திரைக்கதையாக்கும்போது ஏகப்பட்ட பாடல்கள், சண்டைகள், சிரிப்பே வராத காமெடி காட்சிகள் ஆகியவற்றைச் சேர்த்து ரொம்பவும் அலுப்பூட்டியிருக்கிறார் முத்தைய்யா.
 
அதுவும் கதாநாயகன் - கதாநாயகி இடையிலான காட்சிகள் படத்தில் புதிதாக எந்தக் கோணத்தையும் சேர்க்கவில்லை. திரைக்கதையில் அந்தக் காதலுக்கு எந்த இடமும் இல்லை.
 
கதாநாயகன் செய்த இரண்டு கொலைகளுக்காக கைதுசெய்யும் காவல்துறை, வில்லன் கணக்கே இல்லாமல் செய்யும் எந்தக் கொலையையும் கண்டுகொள்வதில்லை.
 
ஓர் ஆய்வாளாருக்குப் பணம் கொடுத்தால் மாவட்டம் முழுக்க செய்யப்படும் கொலைகளை காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா?
 
தனது முந்தைய படங்களில் போகிறபோக்கில், ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்பை சுட்டிக்காட்டிய முத்தையா, இந்தப் படத்தில் காட்சிகள், வீடுகளில் மாட்டியிருக்கும் புகைப்படங்கள், சிலைகள் என வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார். பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, ஜீவா ஆகியோரையும்கூட விட்டுவைக்கவில்லை.
 
முந்தைய படமான கொடிவீரன் படத்திலேயே பல ரத்தக்களறியான காட்சிகளை வைத்திருந்த முத்தையா, இந்தப் படத்திலும் அந்த ட்ரெண்டைத் தொடர்ந்திருக்கிறார். படத்தில் உள்ள ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளில் குறைந்தது 40 - 50 கைகளாவது முறிந்திருக்கும்.
 
'நான் விட்டுக்கொடுத்துப் போறவன் இல்லை; வெட்டிப்புட்டுப் போறவன்', 'வெட்டுகுத்து எங்களுக்கு வென்னீர் வைக்கிறது மாதிரி', 'எதிர நின்னாலே விடமாட்டேன், எதிர்த்து நின்னா விட்டுறுவனா', 'மண்ணைத் தொட்டவனை விட்றலாம்; பொண்ணைத் தொட்டவன விடமாட்டேன்' - எனப் படம் நெடுக காது கிழியும் அளவுக்கு படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களும் பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். குறிப்பாக வில்லனாக வரும் ஃபெப்சி விஜயனுக்குத்தான் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள்.
 
படத்தில் பெண் ஒருவர் பேசுவதாக வரும் 'இவனுக 400 ரூவா ஜீன்சையும் 200 ரூபாய் பனியனையும் போட்டுக்கிட்டுவந்து வாழ்க்கையைக் கெடுக்குறானுக' என்ற வசனத்திற்கு தமிழக அரசியல் சார்ந்த அர்த்தங்களும் உண்டு.
 
"பெண்கள் பொக்கிஷங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைத் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல; கருவறுக்கப்பட வேண்டியவர்கள்" என்ற செய்தியுடன் படம் முடிகிறது.
 
முத்தையாவின் பட வரிசையை எடுத்துக்கொண்டாலே இந்தப் படம், கடைசி இடத்தைத்தான் பிடிக்கும்.