1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (22:04 IST)

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக புகார் அளித்த பெண் விசாரணையில் இருந்து விலகல்

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய உச்சநீதிமன்ற முன்னாள் பணியாளர், அதுதொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு ஏற்பட்டுள்ள தீவிரமான கவலைகள் மற்றும் தயக்கங்களின் காரணமாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
"எனது புகாரை உச்சநீதிமன்றத்தை சாராத குழுவொன்று விசாரிக்க வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அதற்கு மாறாக உச்சநீதிமன்றத்தை சேர்ந்த மூன்று நீதிபதிகளின் கீழ் அமைக்கப்பட்ட குழு எனது புகாரை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த நீதிபதிகள் எனது துன்பங்களை புரிந்துகொண்டு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்பினேன்" என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் கடந்த 26, 29ஆம் தேதிகளில் நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகளின் முன்பு தான் ஆஜரானதாகவும், ஆனால் தனக்கு ஏற்படுள்ள தீவிரமான கவலைகள் மற்றும் தயக்கங்களின் காரணமாக இந்த வழக்கில் இனி ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
 
"இந்த வழக்கு தொடர்பாக 26ஆம் தேதி நடந்த முதல் விசாரணையில், நான் ஆஜரானபோது, இந்த வழக்கு விசாகா அமைப்பின் வழிமுறைகளுக்கு உட்பட்டும், வேலையிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையை தடுக்கும் சட்டப்படியும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், தலைமை நீதிபதிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக உள்ள ரமணா இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்பது சரியாக இருக்காது என்றும் தெரிவித்திருந்தேன். இதையடுத்து, நீதிபதி ரமணா அவர்கள் தானாக முன்வந்து பதவிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நீதிபதி இந்து மல்கோத்ரா சேர்த்துக்கொள்ளப்பட்டார்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
"ஆனால், அதற்கு அடுத்ததாக 29ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இது உச்சநீதிமன்றத்தின் உட்குழுவினாலோ அல்லது விசாகா அமைப்பின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டோ நடத்தப்படவில்லை என்றும், முறைசாராமல் இது விசாரிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குரைஞரை நியமிப்பது, விசாரணையை காணொளியாக பதிவு செய்வது, அலைபேசி உரையாடல்களை சரிபார்ப்பது உள்ளிட்ட நான் முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இனி இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க கூடாது என்று முடிவெடுத்தேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுமட்டுமின்றி, முதல் நாள் விசாரணை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தன்னை பின்தொடர்ந்ததாகவும், அதுகுறித்தும் தனது உதவிக்கு ஒரு நபரோ அல்லது வழக்குரைஞரோ நியமித்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று விசாரணை குழுவிடம் கூறியபோதும் அவர்கள் அதை ஏற்காததால், இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தனக்கு நீதியை பெற்றுத் தராது என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இனி பங்கேற்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதியிருந்தார்.
 
இதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியோடு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 
அப்போது தம் மீதான புகார்களை மறுத்த ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நீதித்துறை பலிகடா ஆகக்கூடாது என்றும் கூறினார்.
 
அந்தப் பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக தாம் எதுவும் விசாரிக்கப் போவதில்லை, பிற மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்தார்.
 
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், தலைமை நீதிபதியின் அலுவலகம் செயல்படுவதை முடக்கும் நோக்கத்துடன் இதன் பின்னால் பெரும் சக்திகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்றார்.
 
ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கேசப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "குவஹாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" என்ற புத்தகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருந்த ரஞ்சன் கோகோய் பற்றிய ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
 
அசாமில் முன்னாள் முதலமைச்சரும் ரஞ்சன் கோகாயின் தந்தையுமான கேசப் சந்திர கோகாயிடம் அவரது நண்பர் ஒருவர், உங்களது மகனும் ஒருநாள் அரசியலில் குதித்து முதலமைச்சராவாரா என்று கேட்டார். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய மகன் திறைமைவாய்ந்த வழக்கறிஞர் என்றும், அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கேசப் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.
 
இதற்கு முந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கியமான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே விசாரணைக்காக ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்னர் ரஞ்சனும் மற்ற வேறு சில உச்சநீதிமன்ற நீதிபதிகளும், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைப் பற்றி சக நீதிபதிகளால் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது அதுவே முதல்முறை.