கள்ளச் சந்தையில் குழந்தையை விற்றதாக பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்ட கென்ய மருத்துவமனை ஊழியர் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
நைரோபியின் மாமா லூசி கிபாகி மருத்துவமனையில் பணிபுரிந்த ஃபிரெட் லெபரான், மருத்துவமனையில் இருந்த ஆண் குழந்தையை $2,500-க்கு (இந்திய மதிப்பில் ரூ.2,08,024) விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிபிசி ஆப்பிரிக்கா ஐ-இன் புலனாய்வைத் தொடர்ந்து ஃபிரெட் லெபரான் 2020இல் கைது செய்யப்பட்டார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக அவருடன் மற்றொரு மருத்துவமனை ஊழியரான செலினா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தை கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து செலினா விடுவிக்கப்பட்டாலும், குழந்தைகளிடம் அலட்சியமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர்களுக்கான தண்டனை செப்டம்பர் 26ஆம் தேதி அறிவிக்கப்படும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் பணியாற்றிய மூத்த ஊழியர் ஒருவர் சட்டவிரோதமாக குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறார் என்று கிடைத்த தகவலையடுத்து பிபிசி ஆப்பிரிக்கா ஐ நிருபர் ஒருவர் குழந்தையை வாங்குபவர் போல் நடித்து லெபரானை அணுகினார்.
மருத்துவமனையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண் குழந்தையை விற்பதற்கு முன்பு அவர்களின் நிலைமையைப் பற்றி லெபரான் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது பிபிசி நிருபர் தனக்கும் தனது கணவருக்கும் கருத்தரிப்பதில் சிரமம் இருப்பதாக லெபரானிடம் கூறினார்.
குறிப்பிட்ட ஆண் குழந்தையை மற்ற இரு குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து அரசுக்குச் சொந்தமான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்ற வேண்டிய நாளில், லெபரான் ஆவணங்களில் மூன்று குழந்தைகளை இரண்டு குழந்தைகளாகத் திருத்தம் செய்தது படம் பிடிக்கப்பட்டது.
மூன்று குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதை பிபிசி குழு உறுதி செய்தது. அதேநேரம் லெபரான் ஆவணங்களில் திருத்தம் செய்து குழந்தைகளை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியதை அவருக்குத் தெரியாமல் பிபிசி ஆப்பிரிக்கா ஐ குழு படம்பிடித்தது.
அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தும், வழக்கு விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. தனக்காக வாதிட கென்யாவின் சிறந்த சட்டக் குழுவை லெபரான் அமர்த்தினார். ஆனாலும் வாக்குமூலத்தில் அவரது சாட்சியம் சீரற்றதாகவும், ஏமாற்றும் வகையிலும் இருந்தது.
வீடியோவில் இருப்பது அவர்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்று அவர் வாதிட்டார். பின்னர், சில வார்த்தைகள் தன்னுடையதுதான் என்று அவர் ஒப்புக்கொண்டார்.
இதேபோல், குழந்தையைத் திருடுவதற்கும் விற்பதற்கு மருத்துவமனையில் அவர் ஏற்பாடு செய்யப்பட்ட இடமும் வீடியோவில் பதிவாகியிருந்தது. அப்போது, மூன்று ஆண்டுகளாக தான் பணியாற்றி வந்த மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளையே அடையாளம் தெரியவில்லை என்று லெபரான் கூறினார்.
மாமா லூசி மருத்துவமனையில் இருந்து ஒரு குழந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சியை பிபிசி புலனாய்வுக் குழு பதிவு செய்திருந்தது. அதேநேரத்தில், பெயரை வெளியிட விரும்பாத மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த 2 மாதங்களில் மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக பிபிசி ஆப்பிரிக்கா ஐ குழுவினரிடம் கூறினார்.
“பலரும் ஊழல்வாதிகளாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது சிறியதாகக் கிடைத்தால்போதும், இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள்,” என்று ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவது குறித்து அவர் பேசினார்.
கென்யாவில் குழந்தைகளை கள்ளச்சந்தையில் வாங்குவது என்பது அதிகளவில் உள்ளது. கருவுறுதலில் உள்ள பிரச்னை, குழந்தைகளை தத்தெடுப்பில் உள்ள சட்ட சிக்கல் போன்றவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.
இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது, இதில் லெபரான் மூலம் அரங்கேற்றப்பட்ட மோசடி என்பது ஒரு சிறிய பகுதி மட்டுமே. சட்டவிரோத வீதியோர சிகிச்சை மையங்களில் குழந்தைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்ததையும் வீதியில் வசிக்கும் நபர்களிடம் இருந்து குழந்தைகளைப் பறித்து விற்பனை செய்வதையும் பிபிசி ஆப்பிரிக்கா ஐ குழுவினர் படம் பிடித்தனர்.
மேரி ஆமா, இதுபோன்ற ஒரு சிகிச்சை மையத்தை நடத்தி வந்தார். பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தாய்மார்கள் தங்கள் குழந்தையை இந்த சிகிச்சை மையத்தில் பிரசவித்து மேரி ஆமாவிடம் குழந்தையை விற்று வந்தனர்.
இந்தக் குழந்தைகளை அதிக விலைக்கு விற்று மேரி பணம் ஈட்டி வந்தார். பிபிசி குழு ரகசியமாக வீடியோவை படம் பிடித்ததைத் தொடர்ந்து மேரி தலைமறைவானார். சமீபத்தில் நைரோபிக்கு சென்றபோது அவர் குறித்து எந்தத் தடயமும் கிடைக்கவில்லை, அவரின் சிகிச்சை மையமும் மூடப்பட்டுள்ளது.
ஆனால், நைரோபியில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கிறது. மூடப்பட்டுள்ள மேரியின் சிகிச்சை மையத்தின் படிகளுக்கு அருகில் ஒரு பெண்மணி காணாமல் போன தனது ஐந்து வயது பேத்தி செல்சியா அக்கினியின் படம் பொறித்த காகிதத்தைக் கையில் ஏந்தியபடி நம்மிடம் பேசினார்.
ஓராண்டுக்கு முன்பு செல்சியா தெருவில் பறித்துச் செல்லப்பட்டார் என்றும் தினமும் அவரைத் தேடி வருவதாகவும் அவரது பாட்டி ரோஸ்மேரி கூறினார்.
தனது பேத்தி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார் என்றும் நன்றாகப் படிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
“பள்ளி முடிந்து அவள் வீட்டுக்கு வந்ததும், வெளியே சென்று விளையாடுவதற்கு முன்பாக வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காக அருகில் உள்ளவர்களை நாடுவாள்.
செல்சியாவை நான் புசியா வரை சென்று தேடிவிட்டேன். சில நேரங்களில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அவளைத் தேட புறப்பட்டுச் செல்வேன்,” என்று ரோஸ்மேரி கூறினார்.
கென்யாவில் குழந்தைக் கடத்தல் பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் சில உள்ளன. நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சரவை செயலர் ஃப்ளோரன்ஸ் போரின் கூற்றுப்படி, ஜூலை 2022 முதல் மே 2023 வரை 6,841 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 1,296 பேர் மட்டுமே அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
வாரத்துக்கு 5 குழந்தைகள் காணாமல் போவதாக தங்களுக்குப் புகார்கள் வருவதாக குற்றப் புலனாய்வுக் குழந்தைகள் கடத்தல் பிரிவு இயக்குநரகத்தைச் சேர்ந்த முனி முதிஸ்யா, பிபிசியிடம் கூறினார்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
பிபிசி ஆப்பிரிக்கா ஐ மேற்கொண்ட ஆரம்பகட்ட புலனாய்வின் தகவல்கள் வெளியிடப்பட்ட மறுநாள், 2020இல், கென்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சைமன் செலுகுய், குழந்தைகள் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் உறுதியளித்தார்.
கென்யாவில் குழந்தைப் பாதுகாப்பை வலுப்படுத்திய புதிய சட்டங்கள் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தன. ஆனால் முவேனியின் கூற்றுப்படி இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
ஒரு குழந்தை துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றோ கடத்தப்பட்டிருக்கலாம் என்றோ சந்தேகம் இருந்தால் அதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவான புதிய சட்டங்கள் தேவை என்று அவர் கூறுகிறார்.
ஏழ்மையான குடும்பங்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகிறார் கென்யாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான அறக்கட்டளையின் தலைவரான மரியான முயெண்டோ.
"நைரோபியில் உள்ள குடிசைப் பகுதிகளில் இருந்து தற்போதும் எங்களுக்கு அதிகளவில் புகார்கள் வருகின்றன," என்று முனியெண்டோ கூறினார். தினமும் குறைந்தது மூன்று குழந்தைகளைக் காணவில்லை என்று தனக்கு புகார் வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.