1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (19:51 IST)

குஷி விமர்சனம்: விஜய தேவரகொண்டா - சமந்தா ஜோடியின் காதல் மந்திரம் வெற்றி பெற்றதா?

khushi
விப்லவ் -ஆராத்யா இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளை இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரின் பின்னணியில் அழகாகப் படமாக்கி உள்ளார் இயக்குநர் சிவா.
 
மனதை வருடும் பாடல்கள், கதாநாயகன்-கதாநாயகிக்கு இடையே உண்டாகும் சிறு மோதல்கள், அதன்பின் இருவருக்கும் இடையே நிகழும் கெமிஸ்ட்ரி என்ற காதல் கதைகளுக்கான ஃபார்முலா சினிமாவில் எப்போதும் தோற்றதில்லை.
 
காதல் கதைகள் ரசிகர்களுக்கு எப்போதும் பசுமை மாறாத இனிய அனுபவத்தை அளிப்பதாகவே உள்ளன. இதனால் தான் வெள்ளித்திரையில் காதல் கதைகளை கருவாகக் கொண்ட சினிமாக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
 
ஆனால், காதலை கதைக்களமாக கொண்ட சினிமாக்களின் வருகையில், சமீபகாலமாக ஒரு சிறு தொய்வு இருந்து வந்தது.
 
இந்தக் குறையைப் போக்கும் விதமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வந்துள்ளது ‘குஷி’ திரைப்படம்.
 
இந்தப் படத்திற்காக ‘ஹ்ருதயம்’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் கொடுத்துள்ள பாடல்கள் ஏற்கெனவே ஹிட்.
 
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவுக்கு இடையிலான காட்சிகளை விவரிக்கும் போஸ்டர்கள் பார்வையாளர்களைச் சுண்டி இழுக்கின்றன.
 
ஆத்திகம் மற்றும் நாத்திகம் என்ற பேரில் கதையில் ஒரு வலுவான மோதலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி இயக்குநர் சிவா நிர்வாணா தனது குஷியின் மூலம் புதிதாகச் சொல்லியிருக்கும் செய்தி என்ன?
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தனக்கு முதல் வேலை கிடைக்கவே, மகிழ்ச்சியுடன் காஷ்மீருக்கு செல்கிறார் நாயகன் விப்லவ் (விஜய் தேவரகொண்டா).
 
வேலைக்குப் போன இடத்தில் நாயகி ஆராத்யாவை (சமந்தா) கண்டதுமே காதலில் விழுகிறார் நாயகன்.
 
ஆனால் தான் ஒரு முஸ்லிம் என்றும், பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்றும் கூறி, காதலைத் தவிர்க்க முயல்கிறார் நாயகி. ஆனாலும் பேகம்… பேகம்… என்று பாடியபடி அவரை நினைத்து உருகுகிறார் நாயகன் விப்லவ்.
 
இப்படி நினைத்தலும், தவிர்த்தலும் என்று காட்சிகள் நகர, ஒருகட்டத்தில் விப்லவ்வின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ஆராத்யா.
 
ஆனால், இருவரின் குடும்பப் பின்னணியும் வெவ்வேறாக இருப்பதில் இருந்து மோதல் தொடங்குகிறது.
 
நாயகன் விப்லவின் தந்தையான லெனின் சத்தியம் (சச்சின் கேத்கர்) ஒரு நாத்திகவாதி. அறிவியலை தவிர எதையும் நம்பாதவர்.
 
அவருக்கு நேர்மாறாக, நாயகி ஆராத்யாவின் தந்தை சத்ரங்கம் ஸ்ரீனிவாஸ் (முரளி சர்மா) மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஆன்மிகவாதி.
 
ஆத்திகவாதியான நாயகியின் தந்தைக்கும், நாத்திகவாதியான நாயகனின் தந்தைக்கும் இடையிலான மோதலில் இளம் ஜோடிகளின் காதல் எவ்வாறு நசுக்கப்படுகிறது?
 
இருவரையும் சமாதானப்படுத்தும் காதல் ஜோடிகளின் முயற்சி வெற்றி பெறுகிறதா? திருமணத்துக்குப் பிறகு இருவரும் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
 
காதல் சினிமாக்கள் பொதுவாக ரசிகர்களுக்கு ரம்மியான மனநிலையை கொடுக்கும் என்றால், நாயகன் -நாயகி காதல் புரியும் களம் ரசிகர்களின் இந்த மனநிலையை இரட்டிப்பாக்குகின்றன.
 
இந்த வகையில் விப்லவ் -ஆராத்யா இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளை இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரின் பின்னணியில் அழகாகப் படமாக்கி உள்ளார் இயக்குநர் சிவா.
 
காஷ்மீர் வனப்பின் பின்னணியில் பசுமையுடன் படமாக்கப்பட்டுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைத் தொடுபவையாக உள்ளன.
 
காதலில் விழும் நாயகன் விப்லவின் அனுபவங்களை நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் விளக்கி பார்வையாளர்களை கதைக்குள் இழுக்க முயல்கிறார் இயக்குநர்.
 
ஆராத்யாவை கண்டதும் விப்லவ் காதலில் விழுவதில் லாஜிக் இல்லாவிட்டாலும் அதை ரசிகர்கள் யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
 
ஹீரோயினை ஹீரோ துரத்தித் துரத்தி காதல் புரிவது, அவரது காதல் வலையில் சிக்காமல் இருக்க பொய் கதைகளை நாயகி சொல்வது, அவர் சொல்லும் கதையை நம்பி, இல்லாத அவரின் அண்ணனை நாயகன் தேடுவது என காதலில் நகைச்சுவையையும் இழையோடச் செய்திருக்கிறார் இயக்குநர்.
 
நாயகன் - நாயகிக்கு இடையேயான சில நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக இருந்தாலும், மனதை மயக்கும் பாடல்கள், பின்னணி இசை, காஷ்மீரின் அழகு ஆகிய அம்சங்கள் ரசிகர்களைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
 
காதலும், நகைச்சுவையுமாக நாயகன்-நாயகியை மையமாகக் கொண்டே காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்க, அவர்களின் வீட்டில் பெரியவர்கள் பின்பற்றும் ஆத்திகம், நாத்திகம் என்ற இந்திய சமூகத்துடன் தொடர்புடைய விஷயத்தை இடைவேளைக்கு முன் இயக்குநர் கொண்டு வரும்போது திரைக்கதையில் சூடுபிடிக்கத் துவங்குவதாகத் தெரிகிறது.
 
காதலை களமாகக் கொண்ட எந்த சினிமாவுக்கும் அதன் இரண்டாம் பாதியை சுவாரஸ்மாகக் கொண்டு செல்வதுதான் இயக்குநர்களுக்கு உண்மையில் சவாலான விஷயமாக இருக்கும். இதற்கு குஷியும் விதிவிலக்கல்ல.
 
ஆத்திகம்-நாத்திகம் என்று எதிரெதிர் துருவங்களாக உள்ள தங்களின் தந்தையை ஏமாற்றி நாயகனும், நாயகியும் எவ்வாறு திருமணம் புரிந்தனர்? அவர்களுக்குள் எப்படி சண்டை வருகிறது? அதை அவர்கள் எவ்வாறு தீர்த்தார்கள்?
 
.
 
இரண்டாம் பாதியை மிகவும் நம்பிக்கையுடன் தொடங்கும் இயக்குநர், சிறிது நேரத்தில் தனது பாதையில் இருந்து மெதுவாகத் தடம் புரளுகிறார்.
 
இயக்குநர் மணிரத்னத்தின் சில படங்களின் தாக்கம், இயக்குநர் சிவ நிர்வாணாவுக்கு இருப்பது குஷியின் இரண்டாம் பாதியில் தெளிவாகத் தெரிகிறது.
 
குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள், கதை திருப்பங்கள் மணிரத்னத்தின் ‘சாகி’ திரைப்படத்தை நினைவூட்டுகின்றன.
 
அதாவது, புதிதாக திருமணமான தம்பதிகளின் குடும்பப் பின்னணி வேறுபட்டிருந்தால் அவர்களின் வீட்டில் எவ்வளவு கசப்பான நிகழ்வுகள் அரங்கேறும்? அதன் விளைவாக நாயகன்-நாயகிக்கு இடையே எவ்வளவு விரிசல்கள் உண்டாகும்?
 
ஆனால் இவை ஏதுமில்லாமல், விப்லவுக்காக ஆராத்யா நிறைய மாறுகிறார். கடைசியில் மீன் சூப் வைக்கவும் கற்றுக் கொள்கிறார்.
 
இதேபோன்று விப்லவ் தனது மனைவி ஆராத்யாவிற்காக விநாயகர் சிலையை வாங்கிச் செல்கிறார்.
 
இருவருமே தங்களின் குடும்பப் பின்னணியை மறந்து ஒருவருக்காக ஒருவர் வாழ்கின்றனர் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதாக இந்தக் காட்சிகள் உள்ளன.
 
நாயகன் -நாயகிக்கு இடையேயான தொடர்பை இவ்வளவு அழகாக காட்டிவிட்டு, திடீரென்று “கல்யாணம் வேண்டாம்… கல்யாணம் வேண்டாம்” என்று பாடல் வருவது முரணாக உள்ளது.
 
இதனால் ஒரு கட்டத்தில், இது விப்லவ் - ஆராத்யா காதல் கதையா அல்லது இவர்களின் தந்தைகளுக்கு இடையேயான ஈகோ மோதலா என்று பார்வையாளர்களுக்கு குழப்பம் வரும்படி படத்தின் இரண்டாம் பாதி அமைந்துள்ளது.
 
விப்லவ் -ஆராத்யா தம்பதிக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருக்கிறது. இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில் நாயகன் கருத்தரிப்பு மையத்துக்குச் செல்வது போலவோ, தன் மனைவிக்காக ஹோமம் செய்வது போலவோ காட்சிகள் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அப்படியான காட்சிகள் எதுவும் குஷியில் இல்லை.
 
இதனால் இரண்டாம் பாதியில் பல காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. கடைசியில் நாயகியின் தந்தை ஸ்ரீனிவாசுக்காக, நாயகனின் தந்தை லெனின் சத்யம் இறங்கி வரும் காட்சிகளில் ஸ்ரீனிவாஸின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை என்றுதான் சொல் வேண்டியுள்ளது.
 
குஷியில் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் திரைத்தோற்றம் மிகவும் நன்றாக உள்ளது. திரையில் அவர் மிகவும் கவர்ச்சியாகத் தோற்றம் அளிக்கிறார்.
 
குஷியில் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் திரைத்தோற்றம் மிகவும் நன்றாக உள்ளது. திரையில் அவர் மிகவும் கவர்ச்சியாக தோற்றம் அளிக்கிறார்.
 
காதல் கதைகள் அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. அவர் பேசும் இயல்பான வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.
 
ஆனால் நாயகி சமந்தா ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமாகத் தெரிகிறார். சில காட்சிகளில் அவர் மிகவும் மந்தமாகக் காணப்படுகிறார். ஒருவேளை அவரது கதாபாத்திரத்துக்கு இப்படி மாறுபட்டுத் தோன்றுவதுதான் சரியாக இருக்கும் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.
 
லெனின் சத்தியமாக வரும் சச்சின் கேத்கரும், சத்ரங்கம் ஸ்ரீனிவாஸ் தோற்றத்தில் வரும் முரளி சர்மாவும் தங்களின் இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கின்றனர்.
 
இவர்களைப் போன்றே பாபு கோகினேனி, சாகந்தி கோட்டேஸ்வர ராவ் ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளனர்.
 
ஆனால் ஜெயராம், ரோஷினி கதாபாத்திரங்களை இயக்குநர் இன்னும் வலுவாகக் கட்டமைத்திருக்கலாம்.
 
படத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் (டைட்டில் சாங்), ‘ஆராத்யா’ பாடல் இரண்டும் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கின்றன.
 
இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை ட்ரெய்லரிலேயே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
 
சில படங்களில் அடுத்த காட்சியில் என்ன நடக்கும் என்பதை யூகிப்பது பார்வையாளர்களுக்கு அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது. இதற்கு குஷியும் விதிவிலக்கல்ல.
 
படத்தின் பல காட்சிகளை பார்வையாளர்களால் முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. இப்படி வழக்கமான காட்சிகளுக்கும், திரைக்கதைக்கும் இடையிலும் ரசிகர்களால் சலிப்பின்றி படம் பார்க்க முடிகிறதென்றால், அதற்கு முக்கிய காரணம் படத்தின் இசை தான்.
 
படத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் (டைட்டில் சாங்), ‘ஆராத்யா’ பாடல் இரண்டும் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கின்றன. குஷியில் இடம்பெற்றுள்ள பாடல்களில் இசை மற்றும் கவித்துவம் மிரள்கிறது என்று சொல்லலாம்.
 
இதேபோன்று படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அருமை.
 
இரண்டு மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் குஷி படத்தின் படத்தொகுப்பு (எடிட்டர்) சிறப்பு என்று சொல்வதற்கில்லை. படத்தொகுப்பில் எடிட்டர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
 
நல்ல தலைப்பு, நட்சத்திரப் பட்டாளம், திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாம் இருந்தாலும், இவர்களைக் கொண்டு அழுத்தமான காதல் கதையை இயக்குநர் சிவா நிர்வாணால் தர முடியவில்லை.
 
ஒரு காதல் கதையில் ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் இணைப்பது நல்ல யோசனைதான். ஆனால், அதை திரைக்கதையாகக் கொண்டு வந்திருப்பதில் இயக்குநர் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்வதாக இல்லை குஷி.
 
மொத்தத்தில் குஷி படம் எப்படி இருக்கிறது என்று ஒற்றை வரியில் சொல்வதாக இருந்தால், வழக்கமான காதல் கதையை வழக்கமான திரைக்கதையால் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர்.