1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (13:37 IST)

சென்னையில் ஒரு பகுதி மூழ்கப்போகிறதா?

சென்னை மாநகராட்சி, பருவநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

 
அதில், கடல் மட்ட உயர்வால் சென்னையில் ஒரு பகுதி மூழ்கும் என்றும், குடிசைப்பகுதிகள் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகளைக் கையாள்வதற்காக சி40 கூட்டமைப்பு, நகர்ப்புற மேலாண்மை மையம் (Urban Management Centre) ஆகியவற்றுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் செயல்திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளன.

என்ன சொல்கிறது அறிக்கை?
  • 67 சதுர கி.மீ. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி, அதாவது 16% பகுதி, 2100ம் ஆண்டில் வெள்ளத்தில் நிரந்தரமாக மூழ்கும்.
  • இதனால், சென்னையில் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
  • மேலும், மொத்தம் உள்ள குடிசைப் பகுதிகளில் 17% குடிசைப் பகுதிகளில் உள்ள (215 குடிசைப் பகுதிகள்) 2.6 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
  • 28 எம்.டி.சி பேருந்து நிலையங்கள், 4 புறநகர் ரயில் நிலையங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், இரண்டு அனல் மின்நிலையங்கள் ஆகிய கட்டுமானங்களும் 2100ம் ஆண்டுகளில் வெள்ளத்தில் மூழ்கும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரும் என்பதால், 100 மீட்டர் நீள கடற்கரை பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • நீர் பற்றாக்குறை காரணமாக, 53% வீடுகள் குடிநீருக்கான வெளிப்புற ஆதாரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
  • 2018ம் ஆண்டில் சென்னையில் 14.38 மில்லியன் டன் கார்பன் - டை - ஆக்சைடு வெளியிடப்பட்டுள்ளது, சராசரியாக தனிநபர் ஒருவர் 1.9 டன் கார்பன் - டை - ஆக்சைடை வெளியிட்டுள்ளார்.
செயல்திட்டம் என்ன?
2050ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் வகையில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள், போக்குவரத்து, நிலையான கழிவு மேலாண்மை, நகர்ப் புறங்களில் வெள்ளம் மற்றும் தண்ணீர் நெருக்கடியை சமாளித்தல், பாதிக்கப்படும் மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் ஆகிய 6 துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படுவதாக அடையாளம் காணப்படும் மக்களுக்கு காலநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் விதமான வீடுகளை கட்டமைத்தல், சுகாதார அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய இரு நோக்கங்களையும் இந்த செயல் திட்ட அறிக்கையில் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அதிகரிக்கும் வெப்பநிலை, நீர் பற்றாக்குறை, கடல்நீர் மட்டம் உயர்வு, வெள்ளம் மற்றும் புயல் ஆகிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.