வாழ்வு தேடி அலையும் 6 கோடி மக்கள்! தீர்வு என்ன? – இன்று உலக அகதிகள் தினம்!
இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் சூழலில் உலகம் முழுவதும் 6 கோடிக்கும் மேலான அகதிகள் அடிப்படை வசதிகளே கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் காலம் காலமாகவே போர் காரணங்களால் பல மக்கள் அகதிகளாக அலையும் சூழல் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. ஆனால் தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் இந்த நிலை தொடர்வது மனித வளர்ச்சியில் மிகப்பெரும் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 6.53 கோடி மக்கள் வலுகட்டாயமாக பல்வேறு காரணங்களால் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு, பிறநாட்டு போர்கள், பொருளாதார நெருக்கடி, பஞ்சம், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பலர் அகதிகளாக நாடு நாடாக செல்லும் நிலை உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொண்டாலும் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து தருவதில் அந்த நாடுகளுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.
வரலாற்று காலத்திலிருந்தே அகதிகள் பிரச்சினை இருந்து வந்தாலும், அகதிகள் குடிப்பெயர்வு பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் கவனத்தி எடுத்துக் கொள்ள தொடங்கியது 2000களின் தொடக்கத்தில்தான். 2001ம் ஆண்டில்தான் ஆண்டுதோறும் ஜூன் 20ம் தேதியை உலக அகதிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று உலக அளவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
2000களுக்கு பிறகு இன்று வரை இலங்கை அகதிகள், ரொஹிங்கியா இஸ்லாமிய அகதிகள், சிரியா உள்நாட்டு போர் அகதிகள், மெக்சிகோ வறுமை காரணமாக அமெரிக்காவில் நுழையும் அகதிகள் என ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற நாடுகளுக்கு செல்கின்றனர்.
உலக அகதிகள் தினத்தில் ஏற்புரையாக ”Whoever, Whatever, Whenever. Everyone has the right to seek safety” என்ற உறுதி ஏற்கப்படுகிறது. இதன் பொருள் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும். பாதுகாப்பைத் தேடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” என்பதாகும். இந்த உலக அகதிகள் தினத்தில் அகதிகள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.