செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:18 IST)

பாலியல் தொந்தரவு: சிறார்கள் இலக்காகும் சம்பவங்களுக்கு தீர்வு என்ன?

தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தை ஒன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் - மாணவர் இடையிலான உறவு குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் தனியார் பள்ளிக்கூடமொன்றில் படித்துவந்த 17 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மரணத்திற்கு முன்பாக எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதத்தில், அந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு அந்த ஆசிரியர், அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கு முன்பாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு, சில தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து முடித்த மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொண்டனர்.

கோயம்புத்தூர் மாணவி சம்பவத்தைப் பொறுத்தவரை, இது தொடர்பாக பள்ளிக்கூடத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையிலேயே அந்த மாணவி உயிரிழந்திருக்கிறார். சென்னையில் நடந்த சில சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் படித்து முடிக்கும்வரை இது தொடர்பாக யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்துள்ளனர்.

தாங்கள் துன்புறுத்தப்பட்டு, அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற மன உளைச்சல் ஒருபுறமிருக்க, பல தருணங்களில் பெற்றோரையோ பள்ளி நிர்வாகத்தையோ நம்பி, இந்த விஷயங்களை பேசுவதற்கு மாணவர்கள் தயங்கியுள்ளனர்.

சமீபத்தில் வெகுவாக வெளியாகிவரும் இந்த நிகழ்வுகள், ஆசிரியர் - மாணவர் என்ற உறவு மீது ஒரு கரிய நிழலாக படிய ஆரம்பித்திருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர் - மாணவர் இடையிலான நம்பிக்கை இழைகளை அறுக்க ஆரம்பித்திருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

"ஆசிரியர் பணி என்பது என்றைக்கு வேலை என்ற வரையறைக்குள் வந்ததோ, அப்போதே இந்தப் பிரச்சனை துவங்கிவிட்டது. ஆசிரியர் பணியில் ஊதியம் கிடைத்தால்கூட, அதனை ஒரு வேலையாகப் பார்க்கக்கூடாது. அது ஒரு பணி. மருத்துவம், வழக்கறிஞர், பத்திரிகையாளர் போன்ற புரொஃபஷனல்களைப் போலத்தான் ஆசிரியர் பணியும். ஆனால், இப்போது அதுவும் ஒரு வேலையாகிவிட்டதால், யார் வேண்டுமானாலும் இந்தப் பணியில் நுழையலாம் என்றாகிவிட்டது" என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் பொறுப்புக்கு வருபவர்கள், தாம் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வர வேண்டும். அது மற்றொரு வேலை என நினைத்து வரக்கூடாது என்கிறார் பிரின்ஸ்.

நம்மை நம்பி குழந்தைகள் விஷயங்களைச் சொல்லும் அளவுக்கு ஆசிரியர்கள் அந்தக் குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைவாழ் குழந்தைகளுக்கான உண்டு - உறைவிடப் பள்ளியின் ஆசிரியரான மகாலட்சுமி.

"அந்த நம்பிக்கையை ஏற்படுத்த ஆசிரியர் குழந்தைகளிடம் தொடர்ந்து உரையாட வேண்டும். நம்மை நம்பி குழந்தைகள் எதையும் சொல்லத் தயங்கினால், ஏன் என யோசிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், வெளியில் சந்தித்த சம்பவங்கள் குறித்து அக்குழந்தை பேசக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்" என்கிறார் மகாலட்சுமி.

குழந்தைகளை நம்பி பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, குழந்தைகளும் நம்மை நம்பி விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்கிறார் மகாலட்சுமி. தான் இதுபோல பாதிக்கப்பட்ட சம்பவத்தை குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார் அவர். "என்னுடைய சிறுவயதில் சிலர் என்னை தவறாகத் தொட்டிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் நான் அதை வெளியில் சொன்னதில்லை. ஆனால்,நான் இப்போது இதை குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்கிறேன். அப்படிப் பகிர்ந்துகொள்ளும்போது, ஒரு பெண் குழந்தை என்னிடம் வந்து இதுபோல எனக்கும் நடந்தது என்று கூறியது. காரணம், என்னுடைய பகிர்வு ஏற்படுத்திய நம்பிக்கை" என்கிறார் மகாலட்சுமி.

அரசுப் பள்ளிகளில் இதுபோல நடப்பது குறைவா?

தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுகையில் அரசுப் பள்ளிகளில் இதுபோல நடப்பது குறைவு என்ற பார்வை இருக்கிறது.

"அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கு. வேலை பாதுகாப்பு இருக்கு. அந்த வேலைபோனால், வேறு எங்கும் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்ற அச்சம் இருக்கும். அதையெல்லாம்விட முக்கியமான காரணம், அரசு பள்ளிகள் என்பவை சமூக சொத்து. ஒரு பெற்றோரோ, ஊரின் பெரிய மனிதரோ பள்ளிக்குள் நுழைந்து தலைமையாசிரியரைச் சந்தித்து கேள்விகேட்க முடியும். வகுப்புகளைப் போய்ப் பார்க்க முடியும். தனியார் பள்ளிகளில் பெற்றோர் உள்ளே நுழைவதே கடினம். இப்படியான சூழல்தான் தவறுசெய்யும் துணிவை ஆசிரியர்களுக்குத் தருகிறது." என்கிறார் பிரின்ஸ்.

அரசுப் பள்ளிகளிடம் படிக்கும் குழந்தைகள் விரைவிலேயே இதனை வெளியில் பரப்பிவிடுவார்கள். அது குறித்த அச்சம் ஆசிரியர்களுக்கு இருக்கும். ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் துணிச்சல்தான் முதலில் குறைக்கப்படுகிறது. ஆகவே குழந்தைகளிடம் தொடர்ந்து பேச வேண்டும் என்கிறார் மகாலட்சுமி.

ஆனால், ஒட்டுமொத்த சமூகத்திடமுமே பிரச்சனை இருக்கிறது என்கிறார் மனநல நிபுணரான டாக்டர் சிவபாலன். "தற்போதைய காலகட்டத்தில், மனித மதிப்பீடுகளே குலைந்து போயிருக்கின்றன. ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் அனைத்தும் குலைந்துபோயிருக்கின்றன. சமூகமே பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் சிவபாலன்.

குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே என்று அங்கலாய்க்கும் காலம் இனி கிடையாது; நடந்தால் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற விதத்தில்தான் இதனை அணுக வேண்டும் என்கிறார் அவர்.

பெற்றோரைப் பொறுத்தவரை இதுபோன்ற கொடுமைகளை இரண்டு - மூன்று விதமாக அணுகுகிறார்கள். ஒன்று, இதனை மூடிமறைப்பார்கள். யாரிடமும் சொல்லக்கூடாது என குழந்தையிடமும் சொல்லிவிடுவார்கள். இரண்டாவது வகையினர், அந்தக் குழந்தையையே குற்றம்சாட்டுவார்கள். மூன்றாவது வகை, எந்தக் கெட்டெண்ணமும் இல்லாமல் ஆசிரியர் தொடுவதை நீ பெரிதுபடுத்துகிறார் என்பார்கள். இது எதுவுமே குழ்தைக்கு உகந்ததல்ல என்கிறார் சிவபாலன்.

இந்தக் கொடுமைக்கு தீர்வு என்ன?

இதற்கு சில தீர்வுகளை முன்வைக்கிறார் பிரின்ஸ். முதலாவதாக பள்ளிக்குள்ளேயே பெற்றோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழு, அவ்வப்போது குழந்தைகளிடம் பேசி குறைகளைக் கேட்க வேண்டும். இரண்டாவதாக, ஒரு குழந்தை ஒரு விஷயத்தை பெற்றோரிடமோ, தலைமையாசிரியரிடமோ வந்து சொன்னால், அதனை நம்பி விசாரிக்க வேண்டும். பெற்றோரும் நம்ப மாட்டார்கள், ஆசிரியர் துன்புறுத்துவார், தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றால் அந்தக் குழந்தை என்னதான் செய்யும்?

மூன்றாவதாக, பாடத்திட்டத்தில் சமூக ஏற்றத்தாழ்வு, பாலின ஏற்றத்தாழ்வு குறித்து இருக்க வேண்டும். நான்காவதாகத்தான் அரசின் கடுமையான நடவடிக்கைகள் கைகொடுக்கும் என்கிறார் அவர்.

"நாம் நம்முடைய குழந்தைக்கு ஒரு அடிப்படையான புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஒரு விஷயம் மோசமாக நடந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். தவறை அம்பலப்படுத்த சொல்லித்தர வேண்டும். அந்தக் குழந்தையை குற்றவாளியாக்கிக் கேள்விகேட்கக்கூடாது.

இதுபோலத்தான் குழந்தையைத் தயார் செய்ய வேண்டும்" என்கிறார் சிவபாலன்.

குழந்தைகள் நலனுக்கென தனியான அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு வெளியில் இலவச தொலைபேசியை அமைத்து, ஹெல்ப் லைன் நம்பர்களைத் தர வேண்டும். அந்தத் தொலைபேசிகளை அரசு தரப்பிலிருந்து யாராவது எடுத்துப் பேச வேண்டும். அப்போதுதான் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கும். என்ஜிஓக்கள் விசாரித்தால், தனியார் பள்ளிகள் பயப்பட மாட்டார்கள் என்கிறார் மகாலட்சுமி.

"இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, வழக்கு நடக்கிறது. அது மட்டும் போதுமா? ஏனென்றால், இது குற்றம் இழைத்த நபர் குறித்தது மட்டுமல்ல. அவர் அப்படிச் செய்துகொண்டிருக்கிறார் என்பது சக ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்கும். தெரிந்தும் இதை அனுமதிக்கிறார்கள். பள்ளிக்கூடங்களை நடத்துபவர்கள் செல்வாக்கானவர்களாக இருக்கிறார்கள். என்ன நடந்தாலும் காப்பாற்றிவிடுவார்கள் என்ற தைரியம் ஆசிரியர்களிடம் இருக்கிறது. அம்மாதிரி சூழலில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். ஒரு பள்ளிக்கூடத்தை இப்படிச் செய்தால் போதும். கண்டிப்பாக அச்சம் ஏற்படும்" என்கிறார் பிரின்ஸ்.

ஆனால், தற்போதைய சூழலில், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டவுடன் இந்தச் சம்பவங்களே மக்களின் மனதிலிருந்து மறைந்துவிடுகின்றன. மீண்டும் ஒரு நிகழ்வு நடக்கும்போதுதான் சலசலப்பு ஏற்படுகிறது.